‘ஜெயிலர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
‘அண்ணாத்த’ படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்க உள்ளார். பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இப்படத்தை இயக்குகிறார்.
படத்தின் தலைப்பு கடந்த ஜூன் மாதம் வெளியாகி இருந்தது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமூக வலைதளங்களில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட தோற்றத்தைப் பகிர்ந்துள்ள சன் பிக்சர்ஸ், ” ஜெயிலர் இன்று தனது ஆக்ஷனை தொடங்குகிறார்’ என்று பதிவிட்டுள்ளது.
இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை
செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
‘எண்ணி ஏழு நாள்’ என்ற படத்திற்காக பெற்ற கடனை இயக்குனர் லிங்குசாமி திரும்ப செலுத்தவில்லை என கூறி பிவிபி கேப்பிட்டல் நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. பிவிபி கேப்பிட்டல் நிறுவனத்திடமிருந்து பெற்ற ரூ.1.03 கோடி கடனுக்காக அவர் வழங்கிய காசோலை பணமில்லாமல் திரும்பியதாக மனுவில் கூறப்பட்டிருந்தது. இவ்வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
டெல்லியில் போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள்
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து டெல்லியில் 72 மணிநேர போராட்டத்தை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். ஒருங்கிணைத்த சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு இந்த போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி புறநகர் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. டெல்லி எல்லைகளான சிங்கு, காசிப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மின் கட்டணத்தை உயர்த்த பொதுமக்கள் எதிர்ப்பு
மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தீர்மானித்தது.
அதன்படி ஆன்லைன் மூலமாக பொதுமக்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் தங்களது கருத்துக்களை மின் கட்டண உயர்வு தொடர்பாக தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் பொதுமக்களிடம் நேரடியாகவும் கருத்து கேட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
முதலில் கோவையில் பொது மக்களை சந்தித்து கருத்துக்கள் கேட்கப்பட்டது. அதன்பிறகு மதுரையில் கடந்த 18-ந் தேதி பொதுமக்களை சந்தித்து மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் கருத்துக்களை கேட்டு பெற்றனர். இந்நிலையில் சென்னையில் இன்று பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
காலை 10 மணி முதல் பொதுமக்கள் மின் கட்டண உயர்வு தொடர்பாக கருத்துக்களை தெரிவிக்க அனுமதிக்கப்பட்டனர். மின்சார வழங்குமுறை ஆணைய தலைவர் சந்திர சேகர், உறுப்பினர் வெங்கடேசன், செயலாளர் வீரமணி ஆகியோர் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டனர். நூற்றுக்கணக்கானோர் இதில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர். அவை அனைத்தும் எழுத்து பூர்வமாகவும் கொடுக்கப்பட்டது. இதில் பங்கேற்ற மக்கள் பலரும் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாஜக தூது அனுப்பியுள்ளது – டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா
ஆம் ஆத்மியைத் துறந்துவிட்டு பாஜகவில் இணைந்தால் தன் மீதான அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும் என்று பாஜக தனக்கு தூது அனுப்பியுள்ளதாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவு செய்த ட்வீட்டில், “எனக்கு பாஜகவிடம் இருந்து குறுந்தகவல் வந்துள்ளது. ஆம் ஆத்மி உறவை முறிக்கவும். பாஜகவின் இணையவும். அப்படிச் செய்தால் சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குகள் முடித்துவைக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. பாஜகவுக்கு என்னுடைய பதில் என்னவென்றால், நான் மஹாராணா பிரதாப்பின் சந்ததி. நான் ஒரு ரஜபுத்திரன். என் தலையை துண்டித்தாலும் கூட அஞ்சமாட்டேன். ஆனால், அதற்காக நான் சதிகாரர்கள் முன் தலைகுனிய மாட்டேன். ஊழல்வாதிகளுக்கு அடிபணிய மாட்டேன். என் மீதான வழக்குகள் அனைத்தும் போலியானவை. நீங்கள் என்ன செய்யவேண்டுமோ செய்து கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.