No menu items!

சிபிஐ பிடியில் ஆம் ஆத்மி கட்சி –பயமுறுத்துகிறதா பாஜக?

சிபிஐ பிடியில் ஆம் ஆத்மி கட்சி –பயமுறுத்துகிறதா பாஜக?

டெல்லி துணை முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியிருக்கிறார்கள். மிக அரிதாகவே ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்பவர்களின் இல்லங்களில் சோதனைகள் நடத்தப்படும். அப்படியொரு அரிதான சோதனை டெல்லியில் நடந்திருக்கிறது.

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சோசாடியா வீட்டிலும் மேலும் 31 இடங்களிலும் சோதனைகள் நடந்திருக்கின்றன. சிபிஐ எஃப் ஐ ஆர் பதிவு செய்திருக்கிறது.

அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி டெல்லியில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி, 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தலைமைச் செயலர் நரேஷ் குமார், துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் கடந்த ஜூலை மாதம் அறிக்கை அளித்தார். அதன்பேரில், மதுக்கடை உரிமம் ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தார்.அதன்படி இந்த சோதனைகள் நடைபெற்றிருக்கின்றன.

டெல்லி அரசின் புதிய மது விற்பனை கொள்கை தனியாருக்கு ஆதாயம் தருவது அமைந்திருக்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு. டெல்லியில் 475 மதுபானக் கடைகளை டெல்லி அரசே நடத்தி வந்தது. ஆனால் புதிய கொள்கையின்படி 849 கடைகளும் தனியாருக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. டெல்லி 32 பகுதிகளாக பிரிக்கப்பட்டு அந்தப் பகுதிகளில் 27 மதுபான விற்பனையாளர்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது அரவிந்த் கெஜ்ரிவால் அரசு.

இந்த அனுமதி அளித்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள. முறைகேடுகளின் மூலம் கிடைத்த பணம் பல இடங்களில் ரகசிய முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த முடிவுகள் டெல்லியின் நலனுக்காக எடுக்கப்பட்டதாக ஆம் ஆத்மி அரசு தெரிவிக்கிறது. ஒரு சிலர் மட்டும் மாஃபியா போல் செயல்பட்டுக் கொண்டிருந்த மது விற்பனையில் இப்போது பலருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அரசின் மது வருவாய் 27 சதவீதம் அதிகரித்து 8900 ரூபாயாக உயர்ந்திருக்கிறது என்று அவர்கள் தரப்பு வாதங்களை வைக்கிறார்கள்.

டெல்லி அரசு நிர்வாகம் ஒரு வினோதமான அமைப்பில் செயல்படும். அங்கு ஆளுநருக்கும் சில அதிகாரங்கள் உண்டு. மத்திய அரசுக்கும் சில அதிகாரங்கள் உண்டு. மாநில அரசுக்கும் சில அதிகாரங்கள் உண்டு. மதுபான கொள்கையில் தவற்றைக் கண்டுபிடித்து ஆளுநரிடம் எடுத்துச் சென்றவர் அம்மாநில தலைமைச் செயலர் நரேஷ் குமார். தமிழ்நாடு போன்ற முழுமையான மாநிலங்களில் அரசு அதிகாரிகள் மாநில முதலமைச்சருக்கும் அமைச்சர்களுக்கும் கட்டுப்பட்டு நடப்பார்கள். ஆனால் டெல்லி போன்ற ஆஃப்பாயில் நிர்வாகத்தில் ஆளுநரும் அரசு நிர்வாகத்தில் தலையிட நிறைய வாய்ப்புகள் உண்டு. ஏற்கனவே ஆளுநருக்கும் ஆட்சிக்கும் மோதல் இருந்ததால் இந்த பிரச்சினை சிபிஐ வரை சென்று துணை முதல்வர் வரை நீண்டுவிட்டது. புகார் சிபிஐக்கு சென்றதுமே பழைய மதுவிற்பனை கொள்கைக்கு மாறிவிட்டது டெல்லி ஆம் ஆத்மி அரசு.

இது அரசியல் பழிவாங்கல் என்று ஆம் ஆத்மி தலைவர்கள் கூறுகிறார்கள். “எனக்கு பாஜகவிடம் இருந்து குறுந்தகவல் வந்துள்ளது. ஆம் ஆத்மி உறவை முறிக்கவும். பாஜகவின் இணையவும். அப்படிச் செய்தால் சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குகள் முடித்துவைக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. பாஜகவுக்கு என்னுடைய பதில் என்னவென்றால், நான் மஹாராணா பிரதாப்பின் சந்ததி. நான் ஒரு ரஜபுத்திரன். என் தலையை துண்டித்தாலும் கூட அஞ்சமாட்டேன். ஆனால் அதற்காக நான் சதிகாரர்கள் முன் தலைகுனிய மாட்டேன். ஊழல்வாதிகளுக்கு அடிபணிய மாட்டேன். என் மீதான வழக்குகள் அனைத்தும் போலியானவை. நீங்கள் என்ன செய்யவேண்டுமோ செய்து கொள்ளுங்கள்” என்று மணிஷ் சிசோடியா தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆம் ஆத்மியின் ஊழல் வெளிவருகிறது என்று பாஜகவினர் சொல்கிறார்கள். புதிய கொள்கையிலிருந்து எதற்கு பழைய கொள்கைக்கு மீண்டும் மாற வேண்டும், எதோ நடந்திருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். இடையில் காங்கிரசும் ஆம் ஆத்மி கட்சியைக் கடுமையாக சாடியிருக்கிறது.

இந்த சோதனைகளுக்கு பின்னணியில் இருக்கும் அரசியலையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.

மதுவிற்பனையில் கிடைத்த ஊழல் பணத்தைக் கொண்டுதான் பஞ்சாப் தேர்தலை ஆம் ஆத்மி சந்தித்தது என்று கூறப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தோற்றால் பாஜக ஆட்சிதான் என்றிருந்த நிலையில் புதிதாய் உள்ளே நுழைந்த ஆம் ஆத்மி கட்சி அங்கு ஆட்சியைப் பிடித்தது. இது பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சி நடத்தும் மூன்றாவது கட்சியாக ஆம் ஆத்மி முன்னுக்கு வந்தது. காங்கிரசும் பாஜகவும் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்திருக்கின்றன.

இத்தனை பிரச்சினைகள் சோதனைகள் இருக்கும் நிலையில் இன்று குஜராத்துக்கு சென்றிருக்கிறார்கள் அரவிந்த் கெஜ்ரிவாலும் மனீஷ் சிசோடியாவும். இந்த வருடம் டிசம்பர் மாதம் குஜராத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. அந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிட உள்ளது. சிபிஐ சோதனைகளின் பின்னணியில் குஜராத் தேர்தலையும் பார்க்க வேண்டும்.

ஊழலை எதிர்க்கும் கட்சியாக துவக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் மீதே ஊழல் குற்றச்சாட்டுகள் வருவது அதன் பிம்பத்தை – அதன் அடிப்படையை அசைத்துவிடும் என்று பாஜகவினர் கூறுகிறார்கள்.

”2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கும் ஆம் ஆத்மிக்கும்தான் போட்டி இருக்கும்” என்று சிசோடியா கூறியிருக்கிறார்.

இந்தியாவில் சிபிஐ சோதனைகளில் அரசியல் இல்லாமல் இருந்ததில்லை. சோதனைகள் நீள்வதிலும் நிற்பதிலும் அரசியல் இருக்கிறது.

தமிழ்நாட்டில் அதிமுகவில் ஆரம்பித்து டெல்லி ஆம் ஆத்மி வரை சிபிஐ, அமலாக்கத் துறை நடவடிக்கைகளில் அரசியல் கலந்துதான் இருக்கிறது.

இந்த சோதனைகளை ஆம் ஆத்மி எப்படி எதிர்கொள்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...