இந்தியாவின் வெளிநாட்டு கடன் 49 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், ‘நடப்பாண்டில் குறுகிய கால வெளிநாட்டு கடன் 20 விழுக்காடு அதிகரித்து 9 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நீண்ட கால கடன் 5.6 விழுக்காடு அதிகரித்து 39 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக வெளிநாட்டு கடன் மதிப்பு 8 விழுக்காடு அதிகரித்து மார்ச் மாதம் வரையில் 49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. ஒட்டுமொத்த வெளிநாட்டு கடனில் டாலரின் ஆதிக்கம் 53.2 விழுக்காடாக உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்க காதணி கண்டெடுப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த 8 மாதங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 70-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பல்வேறு பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆதிச்சநல்லூரில் ‘சி சைட்’ எனப்படும் பகுதியில் தொல்லியல் துறையினர் நடத்திய அகழாய்வில் பழங்கால தங்க காதணி கிடைத்துள்ளது. இந்த தங்க காதணியை ஆய்வு செய்தபோது 20 காரட் தங்கம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் செம்பு சேர்த்து இருப்பதும் முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ட்விட்டரில் தனது கட்சிப் பொறுப்பை மாற்றிய எடப்பாடி பழனிசாமி
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற தனது கட்சிப் பொறுப்பை தனது ட்விட்டர் சமூக வலைதளத்தில் அதிமுக தலைமை நிலையச் செயலாளர் என்று மாற்றியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
முன்னதாக, “அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது. எனவே ஓ.பன்னீர்செல்வம் இந்தக் கட்சியினுடைய பொருளாளர், எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமை நிலையச் செயலாளர்” என்று கட்சியின் மூத்த தலைவர் சி.வி. சண்முகம் கடந்த வாரம் அறிவித்திருந்தார். அதன்பின்னர் ஈபிஎஸ் வெளியிட்ட அறிக்கைகளிலும் அவர் அதிமுக தலைமை நிலையச் செயலாளர் என்றே தன்னை குறிப்பிட்டு வந்தார். மேலும், ஓ. பன்னீர்செல்வத்துக்கு நேற்று எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில்கூட, “கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல” என்று எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜினாமா செய்த இரண்டு நாட்களிலேயே பணிப் பலன்கள்: புதிய தொழிலாளர் விதியில் திருத்தம்
இந்தியாவில் புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், புதிய தொழிலாளர் விதிகளின் அண்மை திருத்தம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதில், “ஒரு ஊழியர் பணியில் இருந்து ராஜினாமா செய்தாலோ நீக்கப்பட்டாலோ அல்லது பணி ஓய்வு பெற்றாலோ அவருக்கான அனைத்து பலன்களும் இரண்டே நாட்களுக்குள் கிடைக்கும்படி செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அண்மையில் அறிவிக்கப்பட்ட 4 முக்கிய திருத்தங்களின் படி வாரத்திற்கு 4 நாட்கள் வேலை, அன்றாட பணி நேரத்தை 8-ல் இருந்து 12 மணி நேரமாக அதிகரித்தல், பிஎஃப் தொகைக்கான பங்களிப்பை அதிகரித்தல், ஒரு தனிநபரின் அடிப்படை சம்பளத்தை 50% அதிகரித்தல் ஆகியன பட்டியலிடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆபாச படம் எடுத்து மிரட்டல்: காசியால் பாதிக்கப்பட்ட 60 இளம்பெண்களிடம் ரகசிய விசாரணை
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிரம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பழகி ஆபாச படம் எடுத்து 120க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டிய காசி வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வழக்கில் காசியும் அவரது தந்தை தங்கப்பாண்டியனும் கடந்த 2 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நிலையில், ஜாமீன் கேட்டு தங்கபாண்டியன் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, 1000-க்கும் மேற்பட்ட ஆபாச படங்கள், வீடியோக்கள் இருப்பதாக போலீசார் கூறிய தகவல் கேட்டு, அதிர்ச்சியாக இருப்பதாக கூறிய நீதிபதி, வழக்கு விசாரணை முடியாத நிலையில் ஜாமீன் வழங்க முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு பற்றி தெரிவித்துள்ள சி.பி.சி.ஐ.டி போலீசார், “காசி மீது இன்னும் 2 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளோம். காசியால் பாதிக்கப்பட்ட 60 இளம்பெண்களிடம் ரகசிய விசாரணை நடத்தியுள்ளோம். இந்த வழக்கில் இன்னும் பலர் சாட்சியம் அளிக்க வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்றனர்.