No menu items!

நியூஸ் அப்டேட்: லடாக் எல்லையில் இந்திய – சீன படைகள் வாபஸ்

நியூஸ் அப்டேட்: லடாக் எல்லையில் இந்திய – சீன படைகள் வாபஸ்

ஜம்மு காஷ்மீரின் லடாக் அருகே கல்வான் பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூனில் இந்திய-சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் வீரர்கள் மரணம் அடைந்தனர். அதன்பின், இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்தன. இதனால், லடாக் எல்லையில் கடந்த 2 ஆண்டுகளாக பதற்றமான சூழல் நிலவிவந்தது. இதனையடுத்து, லடாக் பகுதியில் பதற்றத்தை குறைப்பது தொடர்பாக, இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூலை 17-ம் தேதி இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் இடையே 16-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் லடாக் எல்லையின் முக்கிய பகுதிகளில் இருந்து சீனாவும் இந்தியாவும் படைகளை விலக்கிக்கொண்டு அமைதியை கடைபிடிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. அதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதுகுறித்து இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் சார்பில் நேற்று மாலை கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

3ஆம் நாள் நடை பயணம்: சாலையோர கடையில் தேநீர் அருந்திய ராகுல்காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடை பயணத்தை நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார். நேற்று 2ஆம் நாள் நடை பயணத்தை முடித்து நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் ராகுல் காந்தி தங்கினார். இன்று காலை 7 மணிக்கு 3ஆம் நாள்  நடை பயணத்தை தொடங்கிய ராகுல் காந்திக்கு வில்லுக்குறியில் மலர் பாதை அமைத்து வரவேற்பு அளிக்கபட்டது. இன்று நாகர்கோவிலில் இருந்து தக்கலை முளகுமூடு பகுதியை நோக்கி 18 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்கிறார்.

இன்று நடைபயணத்தில் வில்லுக்குறி என்ற இடத்தில் சாலையோர கடையில் ராகுல் காந்தி தேநீர் அருந்தினார். தொடர்ந்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியனுடன் கலந்துரையாடினார். மேலும் திறந்தவெளியில் பாரம்பரிய கிராமத்து உணவு சமைப்பது குறித்த வீடியோக்களுக்காக பிரபலமான யூடியூப் சேனலான வில்லேஜ் குக்கிங் சேனலின் உறுப்பினர்களை ராகுல் காந்தியை சந்தித்தார்.

காவிரியில் மீண்டும் வெள்ள பெருக்கு: கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி உபரி நீர், கீழணை வழியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றுப்படுகை கிராமங்களான நாதல்படுகை, நாணல்படுகை, வெள்ளை மணல் உள்ளிட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். அப்பகுதியில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 50 நாட்களில் 4-வது முறையாக காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதி மக்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

காரில் சீட் பெல்ட் அணியாவிட்டால் அலாரம் அடிப்பதை நிறுத்தும் கருவியை விற்க அமேசானுக்கு தடை

தற்போதுள்ள கார்களில் சீட் பெல்ட் அணியாவிட்டால் எச்சரிக்கை மணி அல்லது பீப் அலாரம் ஒலித்துக் கொண்டே இருக்கும். சீட் பெல்ட்டின் மெட்டல் கிளிப் பகுதி, பெல்ட்டில் லாக் ஆனால் மட்டுமே எச்சரிக்கை மணி அடிப்பது நிற்கும். இந்நிலையில் கார்களில் இந்த எச்சரிக்கை மணியை ஏமாற்றும் வகையில் மெட்டல் கிளிப் என்று அழைக்கப்படும் கருவியை அமேசான் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த மெட்டல் கிளிப்பை மட்டும் வாங்கி, சீட் பெல்ட் போடும் இடத்தில் வைத்துவிட்டால் சீட் பெல்ட் அணியப்பட்டதாக எண்ணி அலாரம் அடிப்பது நின்றுவிடுகிறது. உண்மையில் சீட் பெல்ட் அணிவதைத் தவிர்க்கவே இந்த கருவி பயன்படுகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக நேற்று பேட்டியளித்த மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ‘காரில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவதை மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகிறது.ஆனால், சீட் பெல்ட் அணியாவிட்டால் காரில் வரும் அலாரத்தை நிறுத்த மெட்டல் கிளிப் அமேசான் நிறுவனத்தில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரியவந்துள்ளது. இதனால் காரில் பயணிப்பவர்களுக்குத்தான் ஆபத்து. எனவே, அந்த மெட்டல் கிளிப் கருவியை விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் என்று அமேசான் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம்’ என்று கூறினார்.

‘8 தோட்டாக்கள்இயக்குநர் ஸ்ரீகணேஷ் துணை நடிகை சுகாசினி சஞ்சீவ்வை மணந்தார்

தமிழ் திரையுலகில் ‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் ஸ்ரீகணேஷ். இந்தப் படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு அதர்வா நடிப்பில் உருவான ‘குருதி ஆட்டம்’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் ஸ்ரீகணேஷ். ஆனால், இப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், உடனே தனது அடுத்த படங்களில் குறையை சரி செய்துகொள்வதாக கூறி மன்னிப்பும் கேட்டார்.

இந்நிலையில், தற்போது தன்னுடைய நீண்ட நாள் காதலியும் நடிகையுமான சுகாசினி சஞ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் ஸ்ரீகணேஷ். உதயநிதி நடிப்பில் வெளியான ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், சுகாசினி சஞ்சீவ். மேலும் வனம், சர்பத், சீதக்காதி, போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

நேற்று காலை எளிமையான முறையில் இவர்களின் திருமணம் நடந்த நிலையில், புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...