No menu items!

கோலியின் எழுச்சியும்… இந்தியாவின் வீழ்ச்சியும்

கோலியின் எழுச்சியும்… இந்தியாவின் வீழ்ச்சியும்

சந்தோஷப்படுவதா இல்லை துக்கப்படுவதா என்று தெரியாமல் குழம்பிக்கிடக்கிறார்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். சந்தோஷத்துக்கான காரணம் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சதம் அடிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் கோலி நேற்று மீண்டும் எழுந்து சதம் அடித்தது. துக்கத்துக்கு காரணம் ஆசிய கோப்பையின் இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற முடியாமல் இந்திய அணி தோல்வியடைந்தது.

கடந்த பல மாதங்களாகவே, இந்திய கிரிக்கெட் அணியில் இன்னும் விராட் கோலியைச் சேர்க்க வேண்டுமா என்ற விமர்சனம் இருந்துவந்தது.  சச்சினின் 100 சதங்கள் என்ற சாதனையை முறியடிக்க தகுதிவாய்ந்த நபர் என்று கருதப்பட்ட விராட் கோலி, கடந்த  இரண்டரை ஆண்டுகளாக அரைசதம் எடுக்கவே திணறிவந்ததுதான் இதற்கு காரணம். இளம் வீரர்கள் பலர் அணியில் இடம்பிடிக்க வரிசை கட்டி நிற்க, ரன்களை எடுக்காமல் கோலி தொடர்ந்து மோசமாக ஆடியது விமர்சனங்களை கிளப்பியது.

இந்த சூழலில்தான் ஆசிய கோப்பையில் மீண்டு வந்துள்ளார் விராட் கோலி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் தனது 71-வது சதத்தை விளாசிய கோலி, அத்துடன் டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களைக் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதன்மூலம் தனக்கு எதிரான விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளது இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

அதே நேரத்தில் ஆசிய கோப்பைக்கான இறுதிப் போட்டிக்குகூட இந்தியா தகுதிபெறாதது ரசிகர்களை சுணங்க வைத்துள்ளது. கோலி ஃபார்முக்கு திரும்பியுள்ள நிலையில் இந்திய அணியை மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

 ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப் போட்டியை எட்டாமல் இந்தியா தடுமாறியதற்கு நிறைய நட்சத்திர வீரர்கள் இந்தியாவில் இருப்பதே காரணம். இந்திய கிரிக்கெட் அணியின் இப்போதைய முக்கிய பிரச்சினையே  இங்கு பல நல்ல வீரர்கள் இருப்பதுதான்.

கவாஸ்கர் காலம் முதல் கங்குலி காலம்வரை ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திலும் சில வீரர்கள் மட்டுமே வலுவானவர்களாக இருப்பார்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் கபில்தேவ் கேப்டனாக இருந்த காலத்தில் கவாஸ்கர், ஸ்ரீகாந்த், வெங்சர்க்கார், சித்து, மொஹீந்தர் அமர்நாத், ரவி சாஸ்திரி ஆகிய வீரர்கள் முக்கிய பேட்ஸ்மேன்களாக இருந்தனர்.

கங்குலி கேப்டனாக இருந்த காலத்தில் இந்திய பேட்டிங் வரிசை சச்சின், சேவக், கங்குலி, திராவிட், லக்மண், யுவராஜ் சிங் ஆகிய வீரர்களைக் கொண்டிருந்தது. அதேபோல் தோனியின் காலத்தில் ரோஹித் சர்மா, ஷிகர் தவன், ரெய்னா,  தோனி,   கோலி, ஜடேஜா என்று நிலையான வீரர்களைக் கொண்டிருந்தது. இவர்களைத் தாண்டி பெரிய வீரர்கள் யாரும் உருவாகாமல் இருந்தனர். இதனால் தேர்வுக் குழுவுக்கும் யாரை அணியில் சேர்ப்பது என்ற குழப்பம் இல்லை.

ஆனால் ஐபிஎல் காரணமாக இந்தியாவில் அதிரடி பேட்ஸ்மேன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ்,  மயங்க் அகர்வால், சுப்மான் கில், ரிஷப் பந்த், இஷான் கிஷன், ஷிகர் தவன், தினேஷ் கார்த்திக், ஹூடா என முன்னணி பேட்ஸ்மேன்கள் மட்டுமே 11 பேர் உள்ளனர்.

இதுபோல் வேகப்பந்து வீச்சாளர்களிலும் பும்ரா, முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர், அர்ஷ்தீப் சிங், வெங்கடேஷ் ஐயர், ஆவேஷ் கான் என பலரும் வரிசைகட்டி நிர்கின்றனர்.

இப்படி ஏராளமான வீரர்கள் கைவசம் இருப்பதால் யாரை அணியில் சேர்ப்பது என்ற குழப்பம் தேர்வுக் குழுவிடம் உள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய தொடருக்கு ஒரு அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஒரு அணி, ஜிம்பாப்வே தொடருக்கு ஒரு அணி, இலங்கை தொடருக்கு ஒரு அணி என்று ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு வகையான அணியைத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்கள். இது போதாதென்று கடந்த ஓராண்டில் மட்டும் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவன், ஹர்த்திக் பாண்டியா, கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், பும்ரா என்று கேப்டன்களையும் இஷ்டத்துக்கு மாற்றினார்கள்.

பொதுவாக வீரர்கள் நீண்டகாலம் ஒரே அணியாக ஆடினால் அவர்களுக்குள் ஒற்றுமை வளரும். எந்த வரிசையில் எந்த பேட்ஸ்மேன் சிறப்பாக ஆடுவார், ஒருவர் எந்த இடத்தில் நின்றால்  சிறப்பாக பீல்டிங் செய்வார் என்பது கேப்டனுக்கு தெரியும். ஆனால் சீட்டாட்டத்தில் கார்டுகளை மாற்றுவதுபோல் அடிக்கடி அணியையும், கேப்டன்களையும் மாற்றிக்கொண்டு இருந்ததால் அணிக்குள் புரிதல் இல்லாத சூழல் நிலவுகிறது.

ஆசிய கோப்பை தொடரில் நாம் பின் தங்கிப் போனதற்கு இதுதான் காரணம்.

இன்னும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ளன.  இந்த மாதம் இன்னும் ஆஸ்திரேலிய தொடரும், தென் ஆப்பிரிக்க தொடரும் உள்ளன. இந்த தொடரிலாவது அணியை மாற்றாமல் ஒரே செட் வீரர்களைப் பயன்படுத்த வேண்டும். உலகக் கோப்பை தொடருக்கு அதே அணியை அனுப்பவேண்டும். அப்போதுதான் இந்திய அணியால் உலகக் கோப்பையை வெல்ல முடியும்.

தேர்வுக் குழு இனியாவது விழித்துக்கொண்டு இதை நடைமுறைப்படுத்துவார்கள் என்று நம்புவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...