காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஊக்கத்தொகை வழங்கினார். அந்த வகையில், இங்கிலாந்து நாட்டின், பர்மிங்காமில் நடைபெற்ற 22-வது காமன்வெல்த் போட்டிகளில் இந்திய அணி சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ. சரத்கமலுக்கு மொத்தம் 4 பதக்கங்களை வென்றதற்கான ஊக்கத்தொகையாக 1 கோடியே 80 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
இது போல் மொத்தம் 3 பதக்கங்களை வென்றதற்காக ஜி. சத்தியனுக்கு ஊக்கத்தொகையாக 1 கோடி ரூபாயும், 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற சவ்ரவ் கோஷலுக்கு 40 இலட்சம் ரூபாயும், 1 வெண்கலப் பதக்கம் வென்ற தீபிகா பல்லிக்கலுக்கு 20 இலட்சம் ரூபாயும், விளையாட்டு வீரர்களின் பயிற்றுநர்கள் 5 நபர்களுக்கு மொத்த ஊக்கத்தொகையாக 51 இலட்சம் ரூபாயும், என மொத்தம் 3 கோடியே 91 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வீரர்களை வாழ்த்தினார்.
மேலும், பவானி தேவிக்கு ஊக்கத்தொகையாக 35 இலட்சம் ரூபாய், செல்வன் பிரணவ் வெங்கடேஷ்க்கு ஊக்கத்தொகையாக 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையையும் முதலமைச்சர் வழங்கி வாழ்த்தினார்.
நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால தடை
நடிகர் விஜய் கடந்த 2016-17 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்த போது, அந்த ஆண்டில் 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் வருமானமாக பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். இதனிடையே, விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் விஜய் தாக்கல் செய்ததை ஒப்பிட்டு பார்த்து, ‘புலி’ படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை விஜய் கணக்கில் காட்டவில்லை என வருமான வரித்துறை குற்றம்சாட்டியது. மேலும், வருமானத்தை மறைத்ததற்காக ரூ. 1.50 கோடி அபராதம் விதித்து கடந்த ஜூன் 30-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
அதானிக்கு ஆதரவாக திமுக அரசு: சீமான் குற்றச்சாட்டு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொற்றலை ஆற்றின் குறுக்கே, இரண்டு இடங்களில் அணைகட்டி, தமிழகத்திற்கு வரவேண்டிய நீர்வளத்தைத் தடுக்க முயலும் ஆந்திர அரசின் செயல்பாட்டைக் கண்டித்து தமிழக அரசு கடிதமெழுதித் தனது எதிர்ப்பினைப் பதிவுசெய்திருப்பதை முழுமையாக வரவேற்கிறேன். அதேசமயம், தமிழக நிலப்பகுதியிலுள்ள கொற்றலை ஆற்றைப் பாதிக்கும் வகையில் சென்னை அருகே காட்டுப்பள்ளியில் 6,110 ஏக்கர் அளவுக்கு நடைபெறும் அதானி குழுமத்தின் துறைமுக விரிவாக்கப் பணிகளுக்கெதிராக தமிழக அரசு வாய்திறக்க மறுப்பதேன்?
மத்தியில் ஆளும் பாஜக அரசு, அதானிக்குச் சாதகமாக நடந்துகொள்ளும்போது அவற்றைக் கேள்விக்குள்ளாக்கும் திமுக அரசு, காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டத்தில் அதானிக்கு ஆதரவாக நிற்பது சந்தர்ப்பவாதம் இல்லையா? ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
கல்வி தொலைகாட்சி தலைமை செயலராக மணிகண்ட பூபதி நியமனம் நிறுத்தி வைப்பு
தமிழ்நாடு அரசின் கல்வித் தொலைக்காட்சிக்கு தலைமை செயல் அதிகாரியாக மணிகண்ட பூபதி என்பவரை தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை நியமித்தது. இதற்கு, திமுக ஆதரவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சமூக ஊடங்களில் கண்டனம் தெரிவித்து வந்தனர். மணிகண்ட பூபதி, ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர் என்றும், இவரது நியமனம் பள்ளிக்கல்வித் துறையில் தேவையற்ற முரண்பாடுகளை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்து வந்ததனர்.
இந்நிலையில், தொடர்ச்சியான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மணிகண்ட பூபதி நியமனத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துளளதாக தகவல் வெளியாகியுள்ளது.