மாநிலங்களவை உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா பதவியேற்றார்.
மாநிலங்களவையின் நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட 12 பேர் சில தினங்களுக்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த திங்களன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் பதவியேற்றுக் கொண்டனர். அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றதால் இளையராஜா பங்கேற்கவில்லை.
இந்நிலையில் அவர் இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார். அப்போது அவர் தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். முன்னதாக நேற்று டெல்லிக்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் நியமனம் – ஓபிஎஸ் அறிவிப்பு
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கத்தை நியமனம் செய்து ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
துணை ஒருங்கிணைப்பாளர்களாக மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் ஆகியோரை நியமித்தும் ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் பாலகிருஷ்ண ரெட்டி, உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ உள்ளிட்ட 10 மாவட்ட செயலாளர்களை நீக்கியும் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவி தற்கொலை
திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பூசனம். இவரது மனைவி முருகம்மாள். இவர்களது ஒரே மகள் சரளா (வயது17). இவர் திருவள்ளுவர் மாவட்ட கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
பின்னர் சக நண்பர்கள் உணவு அருந்த சென்றபோது சரளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் சந்திர தாசன், சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது
செஸ் ஒலிம்பியாட்டுக்கு சென்னையில் குவியும் வீரர்கள்
செஸ் ஒலிம்பியாட் போட்டி 28-ம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் 188 நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த செஸ் ஒலிம்பிட்டில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் சென்னை வர தொடங்கி உள்ளனர். வேல்ஸ், உருகுவே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செர்பியா, வியாட்நாம் ஆகிய 5 நாடுகளில் இருந்து 6 செஸ் வீரர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை, தமிழக அரசு அதிகாரிகள் வரவேற்று, ஒட்டல்களுக்கு அழைத்துச் சென்றனர்.
ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்பட 4 காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட்
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் டி.என்.பிரதாபன் ஆகிய 4 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். விலைவாசி உயர்வைக் கண்டித்து தொடர் அமளியில் ஈடுபட்டதற்காக அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.