சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம் என மாநகர போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, சென்னையில் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் மரணம் தொடர்பாக மாநகர போக்குவரத்து போலீசார் ஆய்வு நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் ஹெல்மெட் அணியாமல் சென்று 98 பேர் உயிரிழந்திருப்பதும், 841 பேர் காயம் அடைந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களில் 19 பேர் மோட்டார் சைக்கிளில் ஹெல்மட் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்றவர்கள். இதுபோல் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற 714 பேரும், பின்னால் அமர்ந்து சென்ற 127 பேரும் காயம் அடைந்து இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதற்காக இன்று முதல் சென்னையில் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் போலீஸ் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 227 கோடி மதிப்பிலான கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அனைத்து கிராமங்களும் ஒட்டுமொத்த வளர்ச்சியடைந்து தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற வேண்டும் என்பதே இச்சீரிய திட்டத்தின் நோக்கமாகும். 2021-22ஆம் ஆண்டில் 1,997 கிராமப் பஞ்சாயத்துக்களில் செயல்படுத்தப் படவுள்ள இத்திட்டத்தின் கீழ், தென்னங்கன்றுகள், பயறுவகை விதைகள், தெளிப்பான்கள், வீட்டுத் தோட்டம் அமைக்க காய்கறி தொகுப்புகள், தோட்டக்கலை பயிர்சாகுபடிக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.
பழக்கூடைகள் மற்றும் ட்ரம், பழச்செடிகள், மரக்கன்றுகள் தொகுப்புகள், தரிசு நிலத் தொகுப்புகளில் ஆழ்துளை / குழாய்க்கிணறு அமைத்தல், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் கிணறு அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்தல், பண்ணைக்குட்டை அமைத்தல், சிறுபாசன குளங்கள், குளங்கள், ஊரணிகள், வரத்து கால்வாய்கள் தூர்வாருதல் போன்ற செயல்பாடுகள் இக்கிராமப் பஞ்சாயத்துக்களிலும் செயல்படுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி கட்சிகளால் காங்கிரஸ் வளர்ச்சி பாதிப்பு: கே.எஸ். அழகிரி
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ”பேரறிவாளனை விடுவித்ததை எங்களால் ஏற்க இயலாது. தொடர்ந்து ராஜீவ் கொலை கைதிகள் 6 பேரையும் விடுவிக்க முயற்சி நடப்பதாக சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் கொலை – கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட சுமார் 500 முதல் 600 பேர் வரை 25 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயில்களில் இருக்கிறார்கள். அவர்களும் தமிழர்கள்தான். நியாயம் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்.
இதையெல்லாம் உணர்ந்துதான் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி உருவானது. பொது எதிரியை வீழ்த்துவதற்காக மாறுபட்ட கொள்கையை கொண்ட கட்சிகள் ஓர் அணியில் திரள்வது இயல்பானதுதான். அந்த வகையில் மதசார்பின்மை என்பதுதான் எங்கள் கூட்டணியின் ஒரே இலக்கு. இந்த நிலையில் கொலை குற்றம் செய்தவரை வரவேற்பது ஆச்சரியமாக உள்ளது.
கூட்டணி என்பது கட்சியை வலுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் காங்கிரஸ் மேற்கொண்ட கூட்டணிகள் கட்சியை பலவீனப்படுத்தி விட்டது” என்று கூறியுள்ளார்.
திரைப்பட பின்னணி பாடகி சங்கீதா சஜித் காலமானார்
பிரபு தேவா நடித்த ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இடம்பெற்ற ‘தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை’ உட்பட பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளவர் சங்கீதா சஜித் (வயது 46). கேரளாவைச் சேர்ந்த பிரபல பின்னணிப் பாடகியான இவர் தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகள் சேர்த்து 200-க்கும் மேற்பட்ட படங்களில் பாடியுள்ளார். கே.பி.சுந்தராம்பாளின் ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ பாடலை, அதே ராகத்தில் பாடுவதில் சிறந்தவர். தமிழக அரசின் திரைப்பட விருது வழங்கும் விழாவில் அந்தப் பாடலை சங்கீதா பாடியபோது, அதைக் கேட்டுக்கொண்டிருந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவரைப் பாராட்டி, தனது கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்கச் சங்கிலியை பரிசாக அளித்து கவுரவித்தார்.
சென்னையில் வசித்து வந்த சங்கீதா கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், திருவனந்தபுரத்தில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி, சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் நேற்று காலை அவர் உயிரிழந்தார். சங்கிதா சஜித்துக்கு அபர்ணா என்ற மகள் இருக்கிறார். சங்கீதா சஜித் மறைவுக்கு இசைக் கலைஞர்கள், திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விஸ்மயா தற்கொலை வழக்கு: கணவர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு
நாட்டை உலுக்கிய தற்கொலைகளில் ஒன்று கேரளா மாநிலம், கொல்லத்தைச் சேர்ந்த 22 வயது விஸ்மயா வி நாயர் என்ற பெண்ணின் தற்கொலை. ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை மாணவியான விஸ்வமயா தனது கணவர் கிரண்குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். விஸ்மயா வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்பட்டது. இதனையடுத்து இவரது மரணம் சமூக ஊடகங்களில் விவாதங்களையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.
விஸ்மயாவை அவரது கணவர் கிரண் குமார் வரதட்சணை கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கில் கொல்லம் கூடுதல் நீதிமன்றம் விஸ்மயா கணவர் கிரண் குமார் குற்றவாளி என கூறியுள்ளது. தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.