No menu items!

நியூஸ் அப்டேட்: நீட் தேர்வில் தோல்வி – சென்னை மாணவி தற்கொலை

நியூஸ் அப்டேட்: நீட் தேர்வில் தோல்வி – சென்னை மாணவி தற்கொலை

தமிழ்நாட்டில் நீட் தேர்வு முடிவு வெளியாகும்போது தற்கொலை சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக நீட் தோல்வி பயம் காரணமாக மாணவ, மாணவிகள் சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்நிலையில், நடப்பாண்டு இளங்கலை மருத்துவ படிப்புக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகாமை நேற்று வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னை புறநகர் பகுதியான, திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர், சோழபுரம் பகுதியில் லக்ஷனா ஸ்வேதா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி வந்துள்ளார். பிலிப்பைன்ஸில் இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்துவந்த நிலையில், ஸ்வேதா இந்த ஆண்டு மீண்டும் நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், நீட் தேர்வில் தேர்ச்சி அடையாத காரணத்தினால், ஸ்வேதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீட்தேர்வு – தமிழ்நாட்டில் சரிந்த தேர்ச்சி விகிதம்

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூன் 17-ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை 17,78,025 மாணவர்கள் எழுதி இருந்தனர். தமிழ்நாட்டில் இருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதியிருந்தனர்.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தமிழ்நாட்டில் இருந்து 67,787 பேர் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. 2020-ல் 57.44%, 2021-ல் 54.40% என்று இருந்த தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு (2022) 51.30% ஆக தேர்ச்சி குறைந்துள்ளது. இதுபோல் தேர்வு எழுதிய 17,000 அரசுப்பள்ளி மாணவர்களில் 80% பேர் தோல்வி அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு நீட் தேர்வில் இந்திய அளவில் பொதுப்பிரிவில் தனிஸ்கா என்ற ராஜஸ்தான் மாணவி முதலிடம் பெற்றுள்ளார். இவர் 715 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து வட்சா ஆஷிஷ் பத்ரா என்ற மாணவர் 715 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். எஸ்.சி பிரிவில் ஜெயந்த் மவுரியா என்பவர் 695 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

திருத்தேவ் விநாயகா என்ற மாணவர் 705 மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் முதலிடம் பெற்றுள்ளார். இந்திய அளவில் அவர் 30வது இடத்தை பிடித்துள்ளார். ஹரிணி என்ற தமிழ்நாடு மாணவி தமிழ்நாட்டில் இரண்டாம் இடமும் தேசிய அளவில் 43வது இடமும் பெற்றுள்ளார்.

நீட் தேர்வு எழுதிய தமிழ்நாடு மாணவர்களுக்கு மனநல ஆலோசனை: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக, தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ‘நடப்பாண்டுக்கான நீட் தேர்வை தமிழ்நாட்டில் இருந்து 1 லட்சத்து 45,988 மாணவர்கள் எழுதியுள்ளனர். தேசிய தேர்வு முகமையிடம் (என்டிஏ) இருந்து அம்மாணவர்களின் விவரங்கள் பெறப்பட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 110 மனநல ஆலோசகர்கள் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆலோசனையில் மாணவர்களில் 564 பேர் அதிக மன அழுத்தத்தில் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தொடர்ச்சியான மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் தங்கள் குழந்தை தேர்ச்சி பெறவில்லை என்பதற்காக, அக்குழந்தைகள் மீது பெற்றோர் கோபத்தைக் காட்ட வேண்டாம். வேறு வழி இல்லாததால்தான் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, அடுத்து அவர்கள் என்ன செய்யலாம், என்ன படிக்கலாம் எனவும் ஆலோசனை வழங்கப்படும்” என்று கூறினார்.

ராகுல் காந்தி 2வது நாள் நடை பயணம்: மாணவி அனிதாவின் குடும்பத்தினர் பங்கேற்பு

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3500 கிலோ மீட்டர் தூரத்திற்கு ‘பாரத் ஜோடோ’ என்ற ஒற்றுமை நடை பயணத்தை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் கொடுத்து நேற்று இந்த நடை பயணத்தை  தொடங்கி வைத்தார். காந்தி நினைவு மண்டபம் முன்பாக தொடங்கிய இந்திய ஒற்றுமை பயணம் நேற்று கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையில் நிறைவடைந்தது.

2-வது நாளான இன்று அகஸ்தீஸ்வரத்தில் இருந்து ராகுல் காந்தி  நடை பயணத்தை தொடங்கினார். நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் தந்தை சண்முகம் மற்றும் சகோதரர்  அருண்குமார் ஆகியோர் இன்று ராஜிவ் காந்தி நடைபயணத்தில் இணைந்தனர். அவர்களை ஜோதிமணி எம்.பி. ராகுல் காந்தியிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

ஆண் சிறுவர்களுடன் பேசியதால் கோபம்: 10 வயது சிறுமியை கொலை செய்த பெற்றோர்

உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்த பப்லூ – ரூபி தம்பதியினர் மகள் செளமியா (வயது 10). இவர் அந்த பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். இவர் வகுப்பில் உடன் படிக்கும் சிறுவர்களிடம் சகஜமாக பேசி உள்ளார். ஆனால், சிறுமியின் தந்தைக்கு அவர் ஆண் மாணவர்களுடன் பேசுவது பிடிக்கவில்லை. இதனால் சிறுமியை கண்டித்துள்ளார். இதனையடுத்து, சிறுமி தனது நண்பர்களுடன் பேசுவதை தவிர்க்க தொடங்கியுள்ளார். ஆனால், படிப்பில் கெட்டிக்காரியான சிறுமியிடம் வகுப்பு நண்பர்கள் சந்தேகம் கேட்பது வழக்கம். இதனால், அவர்களை தவிர்க்க முடியாது சிறுமி மீண்டும் பேசிவந்துள்ளார்.

இந்நிலையில், கோபமடைந்த தாய் மற்றும் தந்தை இருவரும் மகளை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி கடந்த வாரம் இரவு மகளை ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்து சென்ற பெற்றோர், சுமார் 10 மணியளவில் அந்த பகுதியில் இருக்கும் யமுனா கால்வாய் மேம்பாலத்துக்கு அழைத்து சென்று அவரை தூக்கி கால்வாயில் வீசினர். இதில் தண்ணீரில் விழுந்த சிறுமி மூச்சு திணறி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து சிறுமியை கொன்ற பெற்றோரை அதிகாரிகள் கைது செய்ததோடு, சிறுமியின் உடலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...