No menu items!

நியூஸ் அப்டேட்: இபிஎஸ் டெல்லி பயணம் – பிரதமரை சந்திக்க திட்டம்

நியூஸ் அப்டேட்: இபிஎஸ் டெல்லி பயணம் – பிரதமரை சந்திக்க திட்டம்

அதிமுக உட்கட்சி பிரச்சினையில், பொதுக்குழு நடத்தி எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதேபோல் அதிமுக தலைமை அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும் அவருக்கு சாதமாகவே உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானது. இந்நிலையில் இன்று இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் அவர் தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது. டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்திடம் அவர் முறையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை விரிவடைகிறது – அமைச்சர் தகவல்

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, “மாநகர எல்லையை விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை முழுமை திட்டம் 3-ன்படி அரக்கோணம், அச்சிறுப்பாக்கம் வரை சென்னை மாநகரம் விரிவடைகிறது. மேலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 3-ம் முழுமை திட்ட தொலைநோக்கு ஆவணம் தயாரிப்பு குறித்தும் கருத்தரங்கில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் தற்போது 1.2 கோடி பேர் வசித்து வருகின்றனர். மாநகரம் வளர்ச்சி அடையும்போது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். திமுக ஆட்சியில் தான் சென்னை 2-வது முழுமை திட்டம் தொடங்கப்பட்டது” என தெரிவித்தார்.

மீண்டும் அரசியலுக்கு வர விருப்பம் இல்லை – நடிகர் நெப்போலியன்

அமெரிக்காவில் வசிக்கும் நடிகர் நெப்போலியன் தமிழ்நாடு வந்துள்ளார். இந்நிலையில், இன்று மாமல்லபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் நெப்போலியன் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும்போது, “நான் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்த 2001 காலகட்டத்தில், வேலை கேட்டு வந்த இளைஞர்களின் நலனுக்காக முதலில் ஒரு நிறுவனமாக இதை தொடங்கினேன். பின்னர் இது படிப்படியாக ஒரு சாப்ட்வேர் நிறுவனமாக வளர்ந்தது. சென்னை, அமெரிக்கா என இரண்டு இடங்களில் இயங்கும் இந்த நிறுவனம் விரைவில் திருச்சி, திருநெல்வேலி பகுதியிலும் தொடங்கப்படும்.

திமுகவில் கலைஞர் கருணாநிதி எனக்கு குரு ஆவார். அவரின் ஆசியுடன் திமுககாரனாகவே இருப்பேன். அரசியலுக்கு மீண்டும் வர விருப்பம் இல்லை. அமரிக்காவில் எனது மகனை கவனிக்கும் பொறுப்பில் நானும் எனது மனைவியும் இருப்பதால் அதற்கே நேரம் சரியாக உள்ளது. அங்கு விவசாயமும் செய்து வருவதால் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். சினிமாவில் வாய்ப்பு வருகிறது. தவிர்த்து வருகிறேன்.

எனது சினிமா குருநாதர் பாரதிராஜா, கேப்டன் விஜயகாந்த் இருவருக்கும் உடல்நிலை சரியில்லை என்பதால் அவர்களை சந்தித்து பேச உள்ளேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கிடைத்தால் அவரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிவிட்டு அமெரிக்கா திரும்புவேன்” என்று கூறினார்.

காய்ச்சல் பாதிப்பு பரவுவது குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது, “தமிழ்நாட்டில் பருவமழைக் காலங்களில் காய்ச்சல் சதவீதம் அதிகரிப்பது வழக்கம்தான். சாதாரண காலங்களில் 1% பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கும். தற்பொழுது ஒன்றரை சதவீதமாக பாதிப்பு உள்ளது. இதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

பன்றி காய்ச்சால் தமிழ்நாடு முழுவதும் ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 1044 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று மட்டும் 368 நபர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 368 பேருக்கு இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லேசான அறிகுறி இருந்தால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். பள்ளியில் ஆசிரியர்களும் கண்காணித்து அறிகுறி இருந்தால் பெற்றோர்களுக்கு தகவலளித்து வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் எழவில்லை” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...