No menu items!

நியூஸ் அப்டேட்: ஜூலை 18-ல் கல்லூரிகள் திறப்பு

நியூஸ் அப்டேட்: ஜூலை 18-ல் கல்லூரிகள் திறப்பு

தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் 2-ம் மற்றும் 3-ம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 18-ம் தேதி முதல் தொடங்கப்படும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஜூலை 18-ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தான் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும். கடந்தாண்டை விட இந்தாண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கப்படும்.

உயர்கல்வி பயிலும் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. மகளிர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை அடுத்த மாதம் முதல்-அமைச்சர் தொடங்கி வைப்பார்” என்றார்.

மதுராந்தகம் ஏரியில் தூர்வாரும் பணி தொடக்கம்

மதுராந்தகம் ஏரியில் தூர் வாரும் பணி தொடங்கியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று மதுராந்தகம் ஏரி. இந்த ஏரி 50 ஆண்டுகளுக்கு மேலாக தூர் வாரப்படாமல் இருந்தது.  இதனால் ஏரியின் மொத்த உயரமான 23.3 அடியில் 10 அடிக்கு மேல் மண்ணால் தூர்ந்து இருந்தது.

ஏரியை தூர் வார தமிழக அரசு ரூ.120 கோடி ஒதுக்கியது. அதன்படி, கடந்த ஜூன் மாதம் 6-ம் தேதி மதுராந்தகம் ஏரியை தூர்வாருவதற்கான பூமி பூஜைகள் நடத்தப்பட்டன. ரூ.120 கோடி செலவில் ஏரியை ஆழப்படுத்தி தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், நீர்வரத்து கால்வாய் சீரமைத்தல், மதகுகள் மற்றும் பாசன கால்வாயை சீரமைத்தல் பணி நடைபெற உள்ளது. தூர் வாரும் பணிக்காக மதுராந்தகம் ஏரியில் இருந்து மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு பல்லவன் குளம் ஏரி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் பின்னர் ஏரியில் மீதமுள்ள நீரை வெளியேற்றுவதற்கு தானியங்கி ஷட்டர் அருகே ஜே.சி.பி எந்திரம் கொண்டு ஏரியின் கரை உடைக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ரூ.171.24 கோடியில் தொழிற்பேட்டைகள் –  முதல்வர் திறந்து வைத்தார்

தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் வாயிலாக ரூ.171.24 கோடி மதிப்பீட்டில் 7,200 நபர்கள் நேரடியாகவும், 15,000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 5 புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது வசதிக் கட்டடம் ஆகியவற்றை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூன் 27) திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி. அருண்ராய், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டி. ஆனந்த், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்பு – அரசுக்கு அன்புமணி கோரிக்கை

அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்பு மாணவர் சேர்க்கையை தமிழக அரசு உடனே தொடங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2,381 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. ஆகிய மழலையர் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அரசு அறிவித்து 19 நாட்கள் ஆகியும் இன்று வரை மழலையர் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்படவில்லை. அதேபோல், மழலையர் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடைமுறைகளும் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட பிறகுதான் மழலையர் வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்றால், அதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அதுவரை மழலையர்களின் கல்வி உரிமை பறிக்கப்படக் கூடாது.

குழந்தைகளின் கற்றல் திறன் 3 வயதில் சிறப்பாக இருக்கும் என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் அந்தப் பருவத்தில் அவர்களுக்கு முறைச்சார்ந்த கல்வி வழங்குவது அவசியம் ஆகும். இதை உணர்ந்து அரசு பள்ளிகளில் செயல்பட்டு வரும் மழலையர் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். ஒரு வாரத்திற்குள் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்து, அடுத்த வாரம் முதல் வகுப்புகளைத் தொடங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...