No menu items!

நியூஸ் அப்டேட்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

நியூஸ் அப்டேட்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழ்நாடு வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், தன்னை சந்திக்க வந்த நரிக்குறவர் சமூகத்தின் பிரதிநிதியை அவமதித்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதேபோல இலவச பேருந்து சேவை குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி பேசிய காணொளியும் வைரலாகி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன.

இந்நிலையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவே திரும்பிப் பார்க்கக் கூடிய வகையில் இன்றைக்கு நம்முடைய ஆட்சி முறை மிகச் சிறப்பான வகையில் அமைந்திருப்பதை ஏடுகள் பலவும் பாராட்டுகின்றன. அதேநேரத்தில் இந்த ஆட்சிக்கு எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்திட வேண்டும் என்ற தீயநோக்கம் கொண்ட சில அரசியல் சக்திகள் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்காகக் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுகளை வெட்டியும் ஒட்டியும், குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் தவறான பொருள்படும்படியான வாசகங்களுடன் வெளியிட்டு, அவற்றைத் தங்களுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள். இத்தகைய நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் நாம் கவனமுடன் செயல்படுவோம். பொறுப்புடன் நடப்போம்” என்று கூறியுள்ளார்.

இதுதான் சமூக நீதியா? கேகேஎஸ்எஸ்ஆருக்கு சீமான் கண்டனம்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆதித் தொல்குடியான குறவர் சமூக மக்களின் உரிமைகளுக்காக ஆறு நாட்களாகப் பட்டினிப் போராட்டம் நடத்திய வனவேங்கைகள் கட்சியின் தலைவர் அன்புத்தம்பி இரணியன் தங்களது கோரிக்கைகள் குறித்தான மனுவை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் அளிக்கச்சென்றபோது அவமதிக்கப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். இம்மண்ணின் தொல்குடி மக்களை சகமனிதராகக்கூட மதியாது அலட்சியப்படுத்துவதும், அவமதிப்பதும்தான் திராவிட மாடல் ஆட்சியா? இதுதான் பெரியாரும் அண்ணாவும் கற்றுத் தந்த சமத்துவ உணர்ச்சியா? அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் இத்தகைய அணுகுமுறைக்கு எனது வன்மையானக் கண்டனத்தைப் பதிவுசெய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மூத்த அமைச்சர் இப்படி பேசலாமா? பொன்முடிக்கு டிடிவி தினகரன் கேள்வி

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அண்மையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், “உங்கள் குடும்ப அட்டைக்கு ரூ. 4 ஆயிரம் கொடுத்தாரா? இல்லையா? வாங்கினீர்களா? வாயை திறந்து சொல்லுங்கள். இப்போது பேருந்தில் எப்படி செல்கிறீர்கள்? எங்கு சென்றாலும் ஓசி பஸ்ஸில் போகிறீர்கள்” என்று பேசியிருந்தார்.

அமைச்சர் பொன்முடியின் இந்த பேச்சு தொடர்பாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டில், “அரசு விழாவில் பங்கேற்ற பெண்களைப் பார்த்து ‘ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள்’ என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியிருப்பதாக வெளியாகியுள்ள காணொளி அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சரின் இந்தப் பேச்சு கண்டனத்திற்குரியது. பெண்கள் இலவசமாக அரசுப் பேருந்தில் பயணிக்கும்போது ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், அவர்களை ஏளனமாக பேசக்கூடாது என முதலமைச்சர் திரு. ஸ்டாலின் கூறியிருந்தார். இது அவர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா? அமைச்சர்களுக்குப் பொருந்தாதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அ. ராசா படத்தில் பொட்டு, அண்ணா சிலைக்கு செருப்பு மாலை: விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் உள்ள அண்ணா சிலையின் முகத்தில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் காவி துண்டு அணிவித்து கழுத்தில் செருப்பு மாலை அணிவித்துள்ளனர். மேலும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக  துணை பொதுச் செயலாளருமான ஆ. ராசாவின் புகைப்படத்தை அண்ணாவின் கழுத்தில் தொங்கவிட்டு, ஆ.ராசாவின் புகைப்படத்தில் பொட்டு வைத்துள்ளனர்.

இதனையடுத்து, அண்ணா சிலை முன்பு ஏராளமான திமுகவினர் திரண்டதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. போலீசார், அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எக்காலத்திலும் சனாதன தர்மத்திற்கு அழிவில்லை- அண்ணாமலை பேச்சு

திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார். அப்போது, “தமிழகத்தில் 20 ஆண்டுகளாக சனாதன தர்மம் குறித்து திரித்து கூறி பொய் கூறி வருகிறார்கள். சனாதன தர்மத்திற்கு முதலும் இல்லை முடிவும் இல்லை. எக்காலத்திலும் சனாதன தர்மத்திற்கு அழிவில்லை. 5000 ஆண்டுகளாக சனாதன தர்மம் உள்ளது. சனாதனத்தை காப்பாற்ற கூடியவர்தான் நாட்டின் காவலனாக இருக்க முடியும். பிரதமர் நரேந்திர மோடி அவ்வாறு இருக்கிறார்” என்று பேசினார்.

10 வயது சிறுவனை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சக நண்பர்கள்: டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்

டெல்லியில் சீலாம்பூர் என்ற பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுவன் கடந்த 18ஆம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த 10-12 வயதான ஆண் சிறார் நண்பர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். நான்கு பேரும் சிறுவனை கட்டாயப்படுத்தி செங்கல் மற்றும் குச்சிகளால் தாக்கி காயப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்ததுடன், சிறுவனை படுகாயங்களுடன் சம்பவயிடத்திலேயே விட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் சிறுவனின் அந்தரங்க பகுதிகளில் கம்பிகளை செலுத்தி வன்கொடுமை செய்துள்ளது மருத்துவ பரிசோதனை மற்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லி மகளிர் ஆணையம் இந்த சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

குற்றச்சம்பவம் தொடர்பாக போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை ஒரு சிறாரை கைது செய்து சிறார் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ள மற்றவர்களை காவல்துறை தேடி வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுவன் ஆபத்தான நிலையில் டெல்லி லோக் நாயக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...