சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்றும் நாளையும் ஆய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 5 பேர் கொண்ட குழுவினர் ஆய்வை தொடங்கியுள்ளனர். இந்த குழு கோயிலின் வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்கிறது.
முன்னதாக இந்த ஆய்வுக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக தீட்சிதர்களுடன் நேற்று அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து இன்று அறநிலையத்துறை விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
மதவெறியை ஊக்குவிக்காதீர்கள் – இந்தியாவுக்கு தலிபான்கள் அறிவுரை
கியான்வாபி மசூதி தொடர்பாக கடந்த வாரம் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. நூபுர் சர்மாவின் பேச்சுக்கு இஸ்லாமிய நாடுகளான கத்தார், குவைத், ஓமன், சவுதி அரேபியா, யுஏஇ, ஈரான், ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, மாலத்தீவுகள், ஜோர்டான், லிபியா உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக, ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகீத் தனது ட்விட்டர் பக்கத்தில், “முகமது நபியை அவமதிக்குப்படி இந்தியாவின் ஆளுங்கட்சி பிரமுகர் பேசியுள்ளதற்கு இஸ்லாமிக் எமிரேட் ஆஃப் ஆப்கானிஸ்தான் கடும் கண்டத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இதுபோன்ற மத வெறியர்களை ஊக்குவிக்கக் கூடாது என்று நாங்கள் இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.
பாடகர் கே.கே. மரணம் இயற்கையானது: பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி
பிரபல பாடகரான கிருஷ்ணகுமார் குன்னத் என்னும் கே.கே. கடந்த வாரம் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியின் போது பங்கேற்று பாடினார். அப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருந்த போலீசார், கேகேவின் மரணம் இயற்கைக்கு மாறானது என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கேகேவின் இதயத்திற்கு செல்லும் கரோனரி தமனியில் 80 சதவீத அடைப்பு இருந்ததாக கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் போது அவர் அதிக உற்சாகம் அடைந்ததால் இதயத்திற்கு செல்லும் ரத்தம் தடைபட்டு மாரடைப்பு ஏற்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி தப்பியது: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், 2020-ம் ஆண்டு கொரோனா முதல் அலையின் போது, ஊரடங்கு சட்டத்தை மீறி லண்டனில் பிரதமரின் அலுவலக இல்லத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோரை அழைத்து கருத்தரங்கம் நடத்தியது சர்ச்சைக்குள்ளானது. இதனையடுத்து அந்த நிகழ்வுக்காக போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கோரினார். இந்நிலையில், 2021-ல் ஏப்ரலில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் இறுதிச் சடங்கின் போது, பிரதமர் அலுவலக நிர்வாகிகள் மது விருந்து நடத்தியதால் போரிஸ் ஜான்சன் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.
இந்த 2 விவகாரங்களையும் முன்வைத்து போரிஸ் ஜான்சனை பதவி விலகும் படி சொந்த கட்சியினரே வலியுறுத்தினர். இதையடுத்து போரிஸ் ஜான்சன் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு ஆதரவாக 59% எம்பிக்கள் வாக்களித்துள்ளனர்.
அமெரிக்கா துப்பாக்கி கலாசாரம்: தந்தையை சுட்டுக்கொன்ற 2 வயது சிறுவன்
அமெரிக்காவின் புளோரிடாவில் வாழ்ந்து வந்த ரெஜி மாப்ரி – மேரி அயலா தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களின் 2 வயது மகன் தனது பெற்றோரின் ‘லோட்’ செய்யப்பட்ட துப்பாக்கியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது தந்தையை நோக்கி தவறுதலாக சுட்டு உள்ளான். அப்போது துப்பாக்கி குண்டு நெஞ்சில் பாய்ந்து தந்தை ரெஜி மாப்ரி தரையில் விழுந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே ரெஜி மாப்ரி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.