No menu items!

எதிர்க்கும் இஸ்லாமிய நாடுகள் – இந்திய அரசும் அரசியலும்

எதிர்க்கும் இஸ்லாமிய நாடுகள் – இந்திய அரசும் அரசியலும்

ஆண்டாண்டு காலமாக கட்சிக்காரர்களின் வெறுப்புப் பேச்சை அனுமதித்து, ஆரவாரம் செய்து வரவேற்றதன் பலனை இப்போது மத்தியில் மோடி அரசு அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

உலகிலுள்ள பல இஸ்லாமிய நாடுகள் இந்தியாவைக் கண்டித்து அறிக்கைகள் வெளியிடுகின்றன. நமது தூதரை அழைத்து தங்களது கண்டனங்களை அதிகாரப்பூர்வமாக பதிவிடுகின்றன. இது போன்ற வெளியுறவு சிக்கலில் இதுவரை மோடி அரசு சிக்கியதில்லை.

நுபுர் ஷர்மா என்ற பாஜகவின் செய்தி தொடர்பாளர் சில தினங்களுக்கு முன் நடந்த க்யான்வாபி மசூதி குறித்த ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் இஸ்லாமியரின் இறை தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய அவதூறு கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

வழக்கமான தொலக்காட்சி விவாதங்கள் போல் இது கடந்து போகாமல் இஸ்லாமிய நாடுகளின் கவனத்தை ஈர்த்து இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கத்தார் நாடுதான் முதலில் இந்தப் பிரச்சினையை எழுப்பியது. நுபுரின் பேச்சு உலகெங்கும் வாழும் 200 கோடி இஸ்லாமியர்களை காயப்படுத்தியுள்ளது என்று கத்தார் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் குறிப்பிட்டார். இந்தியா இது குறித்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும், சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்தியாவின் ஆளும் கட்சி உறுப்பினர் பேசிய கருத்துக்களுக்காக இந்திய தூதர் வரவழைக்கப்பட்டு அவரிடன் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட் என்று கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இந்தப் பிரச்சினை எழுந்தபோது நமது குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு கத்தார் நாட்டுக்கு பயணம் சென்றிருந்தார். அங்கு அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கத்தார் அரசின் சிறப்பு விருந்து ரத்து செய்யப்பட்டது.

இந்த சம்பவங்கள் நிலைமையின் தீவிரத்தை மத்திய அரசுக்கு உணர்த்த, கட்சியிலிருந்து நுபுர் ஷர்மா இடை நீக்கம் செய்யப்பட்டார். எதிர்ப்புகளைப் பார்த்ததும் தனது கருத்துக்களை திரும்பப் பெறுவதாக நுபுர் ஷர்மாவும் அறிவித்தார்.

‘ சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இந்தியாவின் எண்ணத்தை பிரதிபலிக்கவில்லை. வேற்றுமைகளில் ஒற்றுமை காணும் நாடு இந்தியா. இந்தியா எல்லா மதங்களையும் மதிக்கிறது’ என்றெல்லாம் கத்தாருக்கான இந்திய தூதர் மிட்டல் தெரிவித்தார். ‘இது போன்ற கருத்துக்கள் உதிரிகளால் பேசப்படுபவை’ என்றும் ‘அவை இந்தியாவின் கருத்து இல்லை’ என்றும் குறிப்பிட்டிருந்தார். நுபுர் ஷர்மா உதிரியா இல்லையா என்பது கத்தாருக்கு தெரியும். அதனால் இந்திய தூதரின் கருத்துக்களை கத்தார் பொருட்படுத்தவில்லை.

கத்தார் மட்டுமல்ல, இதுவரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத்,ஜோர்டான், ஓமன், சவுதி அரேபியா, பாகிஸ்தான், லிபியா, ஈரான், பஹ்ரைன் என பல இஸ்லாமிய நாடுகள் நுபூர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

சில நாடுகள் நமது தூதரை அழைத்து கண்டனங்களை பதிவு செய்திருக்கின்றன. 57 இஸ்லாமிய நாடுகளை உள்ளடக்கிய OIC குழுவும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. ‘இந்தியப் பொருட்களை பகிஷ்கரிப்போம்,’ #BoycottIndianProducts என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது.

OIC யின் கருத்துகளை இந்தியா நிராகரித்திருக்கிறது. “தேவையற்றது மற்றும் குறுகிய மனப்பான்மை கொண்டது” என்று கூறியுள்ளது.

நுபுர் ஷர்மா மட்டுமல்ல டெல்லி பாஜக பிரமுகர் நவீன் ஜிண்டாலும் இஸ்லாம் குறித்த சர்ச்சை கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட அதுவும் பிரச்சினையானது. நவீன் ஜிண்டாலை கட்சியிலிருந்தே நீக்கியது பாஜக.

இந்த இருவரையும் உதிரிகள் என்று குறிப்பிடும் பாஜகவை இஸ்லாமிய நாடுகள் நம்ப மறுக்கின்றன. ஏனென்றால் நுபுர் ஷர்மா தேசிய அளவில் பாஜகவின் செய்தி தொடர்பாளர். அவரை உதிரி என்று கூறினால் யார் நம்புவார்?

2008ல் டெல்லி பல்கலைக் கழகத்தின் மாணவ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நுபுர் ஷர்மா. அங்கிருந்து அவரது அரசியல் பயணம் தொடங்குகிறது. 2015ல் டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக சார்பாக அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக போட்டியிட்டவர். தொலைக்காட்சி விவாதங்களில் பாஜகவுக்காக மிகக் கடுமையாக வாதிடுபவர்.

அவர் கடுமையான, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்கும்போதெல்லாம் கட்டுப்படுத்த தவறியதன் விளைவு, இன்று இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பை இந்தியா சந்தித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் நமது நாடான இந்தியாவை ஆதரிக்காமல் பாஜகவின் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு இஸ்லாமிய நாடுகளுக்கு ஆதரவு தருவது சரியா என்று பாஜக ஆதரவாளர்கள் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பேசி வருகிறார்கள். ஆனால் இந்தக் கருத்தை பலர் ஆதரிக்கவில்லை.

‘பாஜகவினரின் மத வெறி கருத்துக்கு இந்தியா ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். பாஜகதான் மன்னிப்பு கேட்க வேண்டும். சர்வதேச நாடுகளிடம் மட்டுமல்ல, இந்தியர்களிடமும் மத வெறுப்பை தூண்டுவதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் கே.டி.ராமராவ், தெலங்கான அமைச்சர்.

சரி, இந்தப் பிரச்சினை என்னவாகும்?

வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு இனி சிக்கலாகும். இந்த நாடுகளுடனான வர்த்தகம் பாதிக்க வாய்ப்பிருக்கிறது.

சவுதி அரேபியாவுடன் இந்தியா 42 பில்லியன் டாலர் வர்த்தகமும், அரபு எமிரேட்ஸுடன் 72 பில்லியன் டாலர் வர்த்தகமும், கத்தாருடன் 15 பில்லியன் டாலர் வர்த்தகமும் குவைத்துடன் 12 பில்லியன் டாலர் வர்த்தகமும் இந்தியா செய்கிறது. இந்த வர்த்தகம் பாதிக்கப்படலாம்.

இந்தியாவுக்கு இப்படி சர்வதேச அரங்கில் பாதிப்புகள் ஏற்பட்டுக் கொண்டிருக்க 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற இந்த நிகழ்வுகளும் காரணமாக வாய்ப்பிருக்கிறது.

ஏற்கனவே சில அமைப்புகள் இஸ்லாம் வெறுப்பை மக்களிடையே பரப்பிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக வட இந்தியாவியில் இஸ்லாமியர் எதிர்ப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் இஸ்லாமிய நாடுகள் இந்தியாவை எதிர்க்கின்றன, அதை எதிர் கொள்ள பலமான ஒரு தலைவர் வேண்டும் என்ற பரப்புரையை பாஜக மேற்கொள்ளும். அந்தப் பரப்புரைக்கு வெற்றியும் கிடைக்கலாம்.

இப்போதைக்கு பாஜக இந்த ‘உதிரி’களை தள்ளி வைத்தாலும் இவர்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது முக்கியத்துவம் பெறுவார்கள் என்பது நிச்சயம். இவர்கள் இல்லாமல் பாஜகவினால் அரசியல் செய்ய இயலாது.

அந்த அரசியல் இந்தியாவின் எதிர்காலத்துக்கு பலமும் பலனும் தருமா? சந்தேகம்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...