அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்றது. அப்போது, “ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலம் 5 ஆண்டுகளாக இருக்கும் போது ஒரு ஆண்டுக்கு முன்னரே எப்படி பதவிகள் காலாவதி ஆனது?” என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலாக எடப்பாடி பழனிசாமி தரப்பில், “2432 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக கடிதம் அளித்துள்ளனர். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பின் கட்சியை வழி நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி கட்சியினர் கடிதம் அளித்துள்ளனர். அடிப்படை உறுப்பினர்களின் பிரதிநிதிகளே பொதுக்குழு உறுப்பினர்கள். ஒருவரின் விருப்பத்தை பார்க்காமல் மொத்த கட்சியின் நலனை பார்க்க வேண்டும்” என வாதிடப்பட்டது.
தொடர்ந்து, “பெரும்பான்மை உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக உள்ளார்களா?” என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு, “2,665 பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவை ஒட்டுமொத்த தொண்டர்களின் விருப்பமாக கருத முடியாது” என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனையடுத்து, இருதரப்பு ஆவணங்களை நாளை மாலைக்குள் தாக்கல் செய்ய ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
ரஜினி ஆளுநருடன் அரசியல் பேசியதில் தவறில்லை – சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசியதில் தவறில்லை. யார் வேண்டுமானாலும் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசலாம். அரசியல் பேசாதவன் மனிதராக இருக்க முடியாது என்கிறார் காந்தி. மனிதனின் உரிமைக்காக பேசும் அனைத்தும் அரசியல்தான். அந்த உரிமை ரஜினிகாந்திற்கு இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் ஆளுநரை நியமித்துள்ளார்கள். பிறகு ஏன் ஆளுநர் அரசியல் பேசக்கூடாதா?” என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
‘ஜெய்பீம்’ பட விவகாரத்தில் சூர்யா, த.செ. ஞானவேலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து
நடிகர் சூர்யா நடித்து, த.செ. ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ‘ஜெய்பீம்’. இந்த படத்தில், ஒரு சமூக மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க கோரி ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் தலைவர் சந்தோஷ் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், கடந்த 2021 டிசம்பர் 8இல் மனுதாரர் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் வேளச்சேரி போலீசார், நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி த.செ. ஞானவேல், சூர்யா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ‘இந்த புகாரை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காலண்டர் இடம்பெற கூடிய அந்த காட்சி நீக்கப்பட்டுவிட்டதாகவும், குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவுப்படுத்தும் வகையிலான காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் சூர்யா, ஞானவேல் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி சதிஷ் குமார், வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
ஆதிச்சநல்லூரைத் தொடர்ந்து சிவகளை அகழாய்விலும் தங்கம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையில் கடந்த 2 வருடங்களாக மாநில அரசு சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. சிவகளை பரம்பு மற்றும் ஸ்ரீ மூலக்கரை பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தையும், ஸ்ரீ பராக்கிரமபாண்டி திரடு, பொட்டல் கோட்டை திரடு பகுதியில் முன்னோர்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறியவும் இந்த பணிகள் நடந்து வருகிறது.
இதில் சிவகளை பரம்பு மற்றும் ஸ்ரீமூலக்கரையில் இதுவரை 50 க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடந்த ஆய்வுப்பணியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டசில்கள், புகைப்பான், ஆட்டக்காய்கள், பாசி மணிகள் வளையல் துண்டுகள், காதணிகள், எலும்பால் செய்யப்பட்ட கூர்முனைக் கருவிகள், முத்திரைகள் உட்பட 80 தொல்லியல் பொருட்கள், சங்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமான அமைப்பு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடந்து வரும் அகழாய்வு பணியில் தங்கத்தால் ஆன பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியை பொறுத்தவரை இறந்தவர்களை புதைத்த இடத்தில்தான் தங்கப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், முதல் முறையாக சிவகளை அகழாய்வு பணியில் வாழ்விடம் பகுதியில் தங்கப் பொருள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உளவுக் கப்பல் விவகாரம்: இலங்கையில் இந்தியா தலையீட்டுக்கு சீனா எதிர்ப்பு
சீனாவின் உளவு கப்பலான ‘யுவான் வங் 05’ இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்திற்கு வருகை தருவதாக கடந்த மாதம் இறுதியில் தகவல் வெளியானது. இந்தியா, இந்த உளவு கப்பலின் வருகை இந்திய எல்லை பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது என இலங்கையிடம் கூறி கப்பல் வருகையை தடுக்கும் முயற்சியில் இறங்கியது. இந்தியாவின் அழுத்தத்தை ஏற்று இலங்கை வெளியுறவுத்துறையும் சீனாவை தொடர்பு கொண்டு உளவு கப்பலை ஹம்பன்தோட்டை துறைமுகத்திற்கு அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தியது.
இந்நிலையில், இதுதொடர்பாக சீனா வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை என்பது இறையாண்மை கொண்ட நாடு. அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளில் இந்தியா தேவையில்லாமல் தலையிடுவது முறையல்ல. இலங்கை – சீனா உறவில் மூன்றாம் தரப்பு தலையிடுவது தேவையற்ற ஒன்று. உளவு கப்பல் விவகாரத்தில் இந்தியா தேவையில்லாமல் தலையிட வேண்டாம்” என தெரிவித்துள்ளது.
சீனா தான் திட்டமிட்டபடி, உளவு கப்பலை ஹம்பன்தோட்டா துறைமுகத்திற்கு இன்று அனுப்பிவைப்பது குறிப்பிடத்தக்கது.