No menu items!

தமிழர்கள் இதை கவனிக்கிறார்களா? – மாலன்

தமிழர்கள் இதை கவனிக்கிறார்களா? – மாலன்

‘வாழ் தமிழா’ யூடியூப் சேனலில் (Wow Tamizhaa – YouTube) வரும் Book Talk தொடரில் மூத்த பத்திரிகையாளரும் சமீபத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான மாலனை சந்தித்தோம். புத்தகங்கள் குறித்தான மாலன் பேட்டியின் இரண்டாவது பகுதி இது.

இப்போது என்ன மாதிரியான புத்தகங்களை நீங்கள் படிக்கிறீர்கள்?

தனி மனிதர்கள் கதை, அவர்கள் வாழ்க்கைப் பிரச்சினை, காதல் கதைகளை படிப்பதில் எனக்கு ஆர்வம் போய்விட்டது. வரலாற்றில் இருந்து அறியப்படாத பக்கங்களை அல்லது எனக்கு தெரியாத புதிய தகவல்களை கொடுக்கக் கூடியவர்களைத்தான் இப்போது விரும்பி படிக்கிறேன். அந்தவகையில் சிறுகதைகளில் அ. முத்துலிங்கம் எனக்கு முக்கியமானவராக இருக்கிறார். பெரும்பாலும் முத்துலிங்கம் ஒரு மனிதனின் கதையைத்தான் சொல்கிறார். நாவல்களில் லஷ்மி பாலகிருஷ்ணன் எழுதிய ‘ஆனந்தவல்லி’ எனக்கு பிடித்திருந்தது. போர்ச்சுக்கீசியர்கள் ஆதிக்கத்தின் போது பெண்கள் எப்படி கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டார்கள் என்பதைப் பற்றி முன்பே நான் படித்துள்ளேன். லஷ்மி பாலகிருஷ்ணன் சரபோஜி காலத்தை எடுத்துக்கொண்டு எழுதியுள்ளார்.

ஜோலார்பேட்டையை அடிப்படையாக வைத்து அந்தப் பகுதியில் இருந்த நக்சலைட் இயக்கத்தைப் பற்றிய ஒரு நாவலை நாராயணி கண்ணகி எழுதியுள்ளார். இதுவும் எனக்கு சமீபத்தில் வாசிக்கத் தகுந்ததாக இருந்தது. ‘இந்தியா டூடே’ பத்திரிகையில் இருந்தபோது அந்தப் பகுதிகளை சென்று பார்த்துள்ளேன். அப்போது வால்டர் தேவாரம் நடவடிக்கைகளில் இருந்த முரண்பாடுகளை கேள்வி கேட்டு எழுதிய ஒரே பத்திரிகை ‘இந்தியா டூடே’தான்.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘சைகோண் புதுச்சேரி’ நாவலை சமீபத்தில் வாசித்தேன். சைகோணில் (வியட்நாம்) இருக்கும் புதுச்சேரி தமிழர்களின் வாழ்க்கை இந்த நாவல் பேசுகிறது. ஒரு காலகட்டத்தில் சைகோண் பிரஞ்சு காலனியாக இருந்தது. அங்கே அவர்களுக்கு ‘கிளார்க்’ வேலை செய்வதற்கும் ராணுவத்துக்கும் ஆட்கள் தேவையாக இருந்தது. இதற்காக புதுச்சேரி தமிழர்களை அழைத்து சென்றார்கள். புதுச்சேரி தமிழர்கள் வியட்நாம் சென்றால் அவர்களுக்கு பிரஞ்சு அரசாங்க வேலையும் குடியுரிமையும் கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால், சாதிப் பெயரை மாற்றிவிட வேண்டும். அதற்குப் பதிலாக ஒரு பிரஞ்சு பெயரை சேர்த்துக்கொள்ள வேண்டும். 10ஆம் வகுப்புதான் கல்வித் தகுதி. இப்படி வியட்நாம் சென்ற புதுச்சேரி தமிழர்கள் ஏராளமானவர்கள் அங்கே இருக்கிறார்கள். இன்னொருபுறம், வியாபாரம் மற்றும் வேறு வேலைகளுக்காக சென்ற தமிழ்நாட்டு தமிழர்களும் அங்கே இருந்தார்கள். ஆனால், இவர்களுடன் ஒப்பிடும்போது புதுச்சேரி தமிழர்கள் அரசு ஊழியர்களாக அதிகார செல்வாக்குடன் இருந்தார்கள். இந்நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் படைக்கு ஆள் சேர்க்கும் வேலைகள் அங்கே நடக்கிறது. அதனை முன்னிட்டு ஒரு குழு திரள்கிறது. இந்த வரலாற்று பின்னணியை கொண்ட நாவல் இது.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘மாத்தா ஹரி’ நாவலும் எனக்கு பிடித்திருந்தது.

சமீப ஆண்டுகளில் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்களின் நல்ல நூல்களுடன் ஒப்பிட சிறந்த நூல்கள் தமிழ்நாட்டில் இருந்து வெளியாகவில்லை. காரணம், தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் வாழ்வனுபவம் ஒரு குறுகிய வட்டத்தில் இருக்கிறது. பிரிட்டீஷ்காரர்களால்கூட நாம் அதிகம் பாதிக்கப்படவில்லை. நாயக்கர்கள், முகலாயர்கள், மராட்டியர்கள் என நிறைய பேர் இங்கே படையெடுத்து வந்துள்ளார்கள். ஆனால், அவர்களால் தமிழர்கள் வாழ்க்கையில் பெரிய தாக்கம், மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை. இது நம்மால் ஓரளவுக்கு மேல் விரிந்த படைப்புகளை கொடுக்க முடிவதில்லை என்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால், அகில இந்திய அளவில் இப்போது பெரிய மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. கேரளாவைச் சேர்ந்த பேராசிரியை ஒருவர், தூக்கு போடும் ஒரு பெண்ணைப் பற்றி எழுதியுள்ள நாவல் எனக்கு பிடித்திருந்தது. இந்தியாவில் முதலில் தூக்கு போடும் வேலை ஆண்களுடையதாகத்தான் இருந்தது. ஓரே ஒரு பெண்ணுக்கு மட்டும் அந்த வேலை கிடைத்தது. அது எப்படி கிடைத்தது, அந்த பெண்ணின் வாழ்க்கைப் பின்புலம் எல்லாவற்றையும் அடிப்படையாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.

இதுபோன்ற முயற்சிகளை நம் படைப்பாளிகள் செய்வதில்லை. தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர்கள் தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழர்களைப் பற்றி எழுதக் கடமைப்பட்டவர்கள் என்கிற மனோபாவத்துடன் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அது மாறவேண்டும் என்று நான் நினைக்கிறேன். தமிழில் எழுதுவதற்கான தளம் குறைந்துகொண்டே வருகிறது என்றும் எனக்கு தோன்றுகிறது. குறிப்பா புனைவுகளுக்கான இடம் குறைந்து வருகிறது. எனவே, புனைவற்ற புனைவுகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

அந்தவகையில் நார்மன் மெயிலரின் ‘ஆர்மீஸ் ஆஃப் த நைட்’ (Armies Of The Night – Norman Mailer) எனக்கு பிடித்த நாவல். வியட்நாம் போருக்கு எதிராக எழுதப்பட்டது. வரலாறாக இருக்கும் நாவல் ஒரு பகுதி, நாவலாக இருக்கும் வரலாறு இன்னொரு பகுதி என இரண்டு பகுதிகளாக இந்த நாவல் இருக்கும். ஃபிக்‌ஷன் (Fiction), நான்ஃபிக்‌ஷன் (Nonfiction) என்பதைப் போல அவர்கள் இதை ஃபேக்‌ஷன் (Faction) என்கிறார்கள். அதாவது புனைவற்ற புனைவு. நடந்த ஒரு வரலாற்று நிகழ்வு, தனிநபர் வாழ்க்கை நிகழ்வு என எதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு அதை புனைவின் மொழியில் சொல்வது. சம்பவமோ பாத்திரமோ புனைவு அல்ல; சொல்லப்படுகிற மொழி புனைவு. இந்த அடிப்படையில் எழுதப்பட்டதுதான் ‘ஜனகனமன.’

புனைவற்ற நூல்களில் உங்களைக் கவர்ந்தவை?

நமது அமைப்பு எப்படி இயங்குகிறது என்பதை அறிந்துகொள்வதற்காக பெரும்பாலும் கருத்து அரசியல் சார்ந்த புத்தகங்களை நான் படிக்கிறேன். ஐரோப்பாவில் இருந்து உருவாகி வந்த மார்க்சிஸ்டுகள் எழுதிய புத்தகங்கள் என்னைக் கவர்ந்தவை. மார்க்ஸின் முன்னோடி என கருதப்படும் ஹெகல் புத்தகங்களை நான் என் நடுவயதில் படித்தேன். சார்த்தர், நீட்சேவும் என்னைக் கவர்ந்தார்கள். நான் முன்னர் குறிப்பிட்ட ஜேம்ஸ் பால்வின், ஹெமிங்வே, சாமர்செட் மாம் ஆகியோரும்கூட அரசியல் ஈடுபாடு கொண்ட எழுத்தாளர்கள்தான். சாமர்செட் மாம், பிரிட்டீஷ் அரசுக்காக உளவு பார்த்தவர்.

வாசகர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்று நீங்கள் பரிந்துரை செய்ய விரும்பும் புத்தகங்கள்?

நான் எனது விருப்பத்துக்கு ஏற்ப படிக்கிறேன். அதே விருப்பம் மற்றவர்களுக்கும் இருக்கும் என்று சொல்லமுடியாது. ஒரு புத்தகத்தில் எனக்கு கிடைத்த வாசிப்பனுபவம் 100 சதவிகிதம் அப்படியே இன்னொருவருக்கும் கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. அதுபோல் இன்னொருவருக்கு ஆகச்சிறந்த புத்தகம் என்று தோன்றும் ஒரு புத்தகம் என்னால் பொருட்படுத்த தகுந்த புத்தகமாகக்கூட இல்லாமலும் போகலாம். எனவே, நான் பரிந்துரை செய்யமாட்டேன். எனக்கு அதில் நம்பிக்கையும் இல்லை.

இந்த பேட்டியின் முதல் பகுதியை வாசிக்க

மனிதர்களை விடப் புத்தகங்கள்தாம் இதம் – மாலன்

1 COMMENT

  1. 1977 காலகட்டத்தில் நான் தங்களை நாராயணன் ஆக சந்தித்து இருக்கிறேன். fourts இண்டியா துவக்கப்பட்ட காலம்.
    பின்பு ‘சாவி’, ‘திசைகள்’ பத்திரிகை உலகில் வலம் வந்த காலம் வரை பலமுறை சந்தித்த அனுபவம்.
    தமிழ் தொண்டு செழிக்க வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...