தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் அறிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
வணிகர் நலனில் அக்கறை கொண்ட அரசு திமுக – முதல்வர் மு.க. ஸ்டாலின்
வணிகர்கள் நலனை காப்பதில் அக்கறை கொண்ட அரசாக திமுக உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருச்சியில் நடந்த வணிகர் விடியல் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி பேசிய அவர், “வணிகர்களுக்கு நல வாரியம் அமைத்து பல்வேறு உதவிகளை செய்தது திமுக அரசு. தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தை உருவாக்கியவர் கலைஞர்தான். வணிகர்கள் இறந்தால் நலவாரியம் வழங்கும் நிவாரண நிதி ஒரு லட்சம் ரூபாயில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும். தீ விபத்தால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கான உடனடி நிவாரணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும். வணிக நிறுவனங்கள் இனி 3 ஆண்டுக்கு ஒருமுறை உரிமத்தை புதுப்பித்தால் போதும்” என்றார்.
பிஹாரில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் பாதயாத்திரை: பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு
பிஹாரில் சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை சென்று பொதுமக்களை சந்திக்க உள்ளதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று பிஹாரில் செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், “கடந்த 30 ஆண்டுகளில் லாலு பிரசாத் மற்றும் நிதிஷ் குமார் ஆகியோரின் ஆட்சியின் கீழ் பிஹார் மிகவும் பின்தங்கிய ஏழை மாநிலமாக உருவாகியுள்ளது. சமூக நீதி மற்றும் வளர்ச்சியின் அடையாளமாக இரு கட்சிகளும் தங்களை கூறிவந்தாலும், யதார்த்தம் இதுதான். எனவே, பிஹார் மக்கள் புதிய எண்ணத்தையும், புதிய முயற்சியையும் செய்ய வேண்டும். இல்லையெனில் மாநிலம் வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடியாது. எனவே, பிஹார் மக்களை சந்தித்து அவர்களின் எண்ணங்களை கேட்டறிய உள்ளேன்.
நான் கட்சி தொடர்பான அறிவிப்பை ஏதும் வெளியிடப் போவதில்லை. ஜன் ஸ்வராஜ்தான் எங்கள் இலக்கு. இதனையே முன்னெடுக்கப்போகிறோம். பிஹாரில் அடுத்த மூன்று அல்லது நான்கு மாதத்தில் மேலும், 17 ஆயிரம் மக்களை சந்தித்து மக்கள் நல்லாட்சி திட்டம் குறித்து பேசவுள்ளேன். மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி 3,000 கிமீ பாதயாத்திரை பயணத்தை தொடங்கவுள்ளேன்” என்றார்.
என் உயிருக்கு அச்சுறுத்தல் : மதுரை ஆதீனம் புகார்
எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று மதுரை ஆதீனம் புகார் கூறியுள்ளார்.
மதுரை ஆதீனம் ஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ஆதீனத்துக்குச் சொந்தமான கோயில் சொத்துகளை ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் அனுபவித்து வருகின்றனர். நான் அவர்களிடம் அதிக கேள்விகளை கேட்பதால், எனக்கு அச்சுறுத்தல் வருகிறது. கோவிலுக்குச் சொந்தமான பகுதியில் வீடுகள் கட்டியுள்ள அவர்கள், வாடகை கொடுக்க மறுக்கின்றனர். கோவில் நிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அவர்கள், ஊருக்குள் நுழைந்து கடவுளுக்கு திருப்பணி செய்ய முடியாது என என்னை மிரட்டுகிறார்கள். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து இதுகுறித்து தெரிவிக்க உள்ளேன்” என்றார்.
கட்டாய மதமாற்றம் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றத்தை தடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் தொடர்பாக புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூர், கன்னியாகுமரி தவிர வேறு எந்த இடத்தில் இருந்தும் புகார் வரவில்லை” என்று கூறப்பட்டிருந்தது.
தொடர்ந்து, கட்டாய மதமாற்றத்தை தடுப்பது தொடர்பாக விதிகளை வகுப்பதில் தமிழக அரசுக்கு என்ன சிரமம் உள்ளது என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது.