தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த மாதம் திமுக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். தமிழக அரசியலில் இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக சொத்து பட்டியல் என்ற பெயரில் அவதூறு கருத்து வெளியிட்டதாக சென்னை முதன்மை நீதிமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி அண்ணாமலை அவதூறு தகவல்களை வெளியிட்டு, நற்பெயருக்கும், புகழுக்கும் கலங்கம் விளைவிப்பதாக முதல்-அமைச்சர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் இன்று மாலை புயல் உருவாகுகிறது
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மாலை புயல் உருவாகிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: நேற்று (9.5.2023) காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை (10.5.2023) 05.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதியில் (போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 530 கிலோ மீட்டர் தென்மேற்கே) நிலைகொண்டுள்ளது.
இது வட-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை அதே பகுதியில் புயலாக வலுபெறக்கூடும். இது மேலும் வட-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுப்பெற்று நாளை (11.5.2023) காலை தீவிர புயலாகவும் நள்ளிரவு வாக்கில் மிகத்தீவிர புயலாகவும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொம்மன் – பெள்ளி தம்பதிக்கு தோனி கவுரவம்
ஆஸ்கர் விருது பெற்ற ‘எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப் படத்தில் நடித்த பொம்மன் – பெள்ளி ஆகியோருக்கு தனது ஜெர்சியை வழங்கி சிஎஸ்கே அணி கேப்டன் தோனி கவுரவித்தார்.
தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப் படத்தில் நடித்த பொம்மன் – பெள்ளி ஆகியோரை சிஎஸ்கே அணி கேப்டன் தோனி நேற்று சென்னையில் சந்தித்தார். அப்போது, ஆவண குறும்படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வஸ் மற்றும் பொம்மன்-பெள்ளி தம்பதியை கவுரவப்படுத்தும் விதமாக தனது ஜெர்சியை அவர்களுக்கு வழங்கினார்.
இந்நிலையில், இன்று சென்னையில் நடைபெறும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக, சேப்பாக்கம் மைதானத்தில் இவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதில், இயக்குநர் கார்த்திகி கொன்சால்வஸ் மற்றும் பொம்மன் – பெள்ளி தம்பதிக்கு நினைவு பிரிசு வழங்கி கவுரவப்படுத்தும் சிஎஸ்கே நிர்வாகம், முதுமலை புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளைக்கு நிதி உதவியும் அளிக்க உள்ளது.
உதவி இயக்குனர் விடுதலை சிகப்பிக்கு நிபந்தனை முன்ஜாமீன்
விடுதலை சிகப்பிக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி, ‘மலக்குழி மரணங்கள்’ என்ற தலைப்பில் கவிதை வாசித்தார்.
இந்து மதக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் அந்த கவிதை இருப்பதாகக் கூறி இந்து முன்னனி அமைப்பின் சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில் விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளின் கீழ் அபிராமபுரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி விடுதலை சிகப்பி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி கே.ஜி.திலகவதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை விசாரணைக்கு தேவைப்படும் போது ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதித்து விடுதலை சிகப்பிக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.