‘பாட்டல் ராதா’ பட நிகழ்ச்சியில் இயக்குனர் மிஷ்கின் ஆபாசமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக, பாடலாசிரியர் தாமரை, இயக்குனர்கள் லெனின்பாரதி, நடிகர் அருள்தாஸ் மற்றும் நடிகை லட்சுமிராமகிருஷ்ணன் உட்பட மிஷ்கினை கண்டித்தனர். சமூக வலைதளங்களிலும், சினிமா வட்டாரத்திலும் அந்த பேச்சு கடும் எதிர்ப்பை ஏற்படுத்த, ‘பேட் கேர்ள்’ படவிழாவில் தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டார் மிஷ்கின்.
ஆனாலும், சினிமா வட்டாரத்தில் பலர் மிஷ்கினுக்கு ஆதரவாக உள்ளனர். அவர் பேசியது தவறி்ல்லை. அந்த பேச்சை அப்போது யாரும் கண்டிக்கவில்லை. அந்த பேச்சை சிரித்து ரசித்துதானே கேட்டனர். இந்நிலையில், சென்னையில் நடந்த திரு.மாணிக்கம் படவிழாவில் மிஷ்கினுக்கு ஆதரவாக பேசினார் நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி. அவர் பேசியது..
‘நான் நடித்த திரு.மாணிக்கம் இன்னமும் தியேட்டரில் ஓடுகிறது. அதேசமயம், ஓடிடியில் வெற்றி பெற்றது. எங்களுக்கு சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை. என் சொந்த மாவட்டமான விருதுநகரில் படம் வெளியாகவில்லை. பல தியேட்டர்கள் எங்கள் படத்தை ரிலீஸ் செய்ய மறுத்தனர். ஆனாலும், இயக்குனர் நந்தா பெரியசாமி இன்றுவரை போராடுகிறார். சின்ன பட்ஜெட் படங்களுக்கு கடன், திருப்பி அடைத்தல் போன்ற பல பிரச்னைகள் இருப்பதால், கடைசி நேரத்தில் தடுமாற்றம் ஏற்படுகிறது. நான் இயக்கிய அப்பா படத்துக்கும் அந்த பிரச்னை வந்தது. ஆனாலும், இந்த அளவுக்கு திரு.மாணிக்கம் வரவேற்பை பெற்றது மகிழ்ச்சி. ஆந்திராவில் கூட படத்துக்கு வரவேற்பு. இந்த படம் ஏன் தெலுங்கில் வரவில்லை என கேட்கிறார்கள். நல்ல படைப்புகளை மக்கள் ஏற்பார்கள். தியேட்டருக்கு வருவார்கள். எந்த ஆட்சி வந்தாலும் வலியனுக்கு பலம். எளியவனுக்கு படம் இல்லை.
என்னுடைய அப்பா வந்த காலத்தில், கபாலி வந்தது. பல தியேட்டர்களில் அப்பா துாக்கப்பட்டன. ஆனால், சில நாட்களில் மீண்டும் அப்பாவுக்கு தியேட்டர்கள் கிடைத்தது. மக்கள் தியேட்டருக்கு வந்து அப்பா டிக்கெட்டை கேட்டதால் அந்த படம் மீண்டும் திரையிடப்பட்டது. நான் பொய் பேசக்கூடாது என்று நினைக்கிறேன். திரு.மாணிக்கம் படத்துக்கு டிஜிட்டலில் வரவேற்பு கிடைத்தது மகிழ்ச்சி. ஓடிடியில் சினிமா வாழ்கிறது. ஓடிடியில் சினிமா அழியவில்லை. பலர் பார்த்து ஒரு படத்தை வாங்கலாமா? வேண்டாமா என முடிவெடுக்கிறார்கள். அங்கே சிபாரிசு வேலைக்கு ஆகாது.