இந்தியாவின் சீனியர் கிரிக்கெட் அணி உள்ளூரில் இங்கிலாந்திடம் உதை வாங்கிக்கொண்டு இருக்கிறது. இங்கிலாந்தின் பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த சூழலில் இந்தியாவுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலமாக தென் ஆப்பிரிக்காவில் உதித்திருக்கிறார் முஷீர் கான்.
தென் ஆப்பிரிக்க மண்ணில் இப்போது நடந்துகொண்டு இருக்கும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இப்போது முஷிர் கான்தான் சூப்பர் ஹீரோ. இந்த உலகக் கோப்பையில் இதுவரை இந்தியாவுக்காக 4 இன்னிங்ஸ்கள் ஆடியுள்ள முஷீர் கான் எடுத்துள்ள மொத்த ரன்கள் 325. இதில் 2 சதங்களும் அடங்கும். 81.25 ரன்கள் சராசரி மற்றும் 103.17 ரன்களை ஸ்டிரைக் ரேட் என்று மற்றவர்களை பொறாமைப்பட வைக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தி இருக்கிறார் முஷீர் கான். பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் 4 விக்கெட்களை எடுத்திருக்கிறார்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் 2 சதங்கள் அடித்து ஷிகர் தவனின் பல ஆண்டு கால சாதனையை சமன் செய்திருக்கிறார் முஷீர் கான். இதைத்தொடர்ந்து யார் இந்த முஷீர் கான் என்ற கேள்வி இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள குர்லாவில் 2005-ம் ஆண்டில் பிறந்தவர் முஷீர் கான். இவரது அண்ணனும் ஒரு கிரிக்கெட் வீர்ர்தான். அவர் பெயர் சர்ஃப்ராஸ் கான். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆட தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளாரே… அந்த சர்பிராஸ் கான்தான் அவரது சகோதரர். முஷீர் கானுக்கும், அவரது அண்ணன் சர்பிராஸ் கானுக்கும் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் விளையாட்டில் பயிற்சி கொடுக்க தொடங்கியுள்ளார் அவர்களின் அப்பா நவுஷத் அகமது கான்.
தன் மகன்கள் இருவருக்கும் நவுஷத் கிரிக்கெட் பயிற்சி கொடுக்க முக்கிய காரணம், அவரும் ஒரு கிரிக்கெட் வீர்ர் என்பது. மகாராஷ்டிர அணிக்காக முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய நவுஷத்தால், அதற்கு மேல் வளர முடியவில்லை. இந்திய அணிக்கு அவரால் தேர்வுபெற முடியவில்லை. தன்னால் முடியாததை தன் மகன்களை வைத்து சாதிக்க வேண்டும் என்ற ஆசையுடன் அவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுத்துள்ளார் நவுஷத்.
தன் மகன்களுக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுத்ததைப் பற்றிச் சொல்லும் நவுஷாத், “பொதுவாக அப்பாக்கள் தங்கள் குழந்தைகளை படிக்கச் சொல்லி கட்டாயப் படுத்துவார்கள். ஆனால் நான் அதற்கு நேர்மாறாக அவர்களை கிரிக்கெட் ஆடச் சொல்லி கட்டாயப்படுத்தினேன். அதன் பிறகு அவர்களுக்கே கிரிக்கெட் மீது பிரியம் ஏற்படத் தொடங்கியது. ஒரு காலகட்டத்தில் நாங்கள் மைதானங்களிலேயே இருந்தோம்.
வேகப்பந்து வீச்சை முஷிர் சிறப்பாக கையாளவேண்டும் என்பதற்காக எங்கள் வீட்டுக்கு அருகில் 18 யார்ட் நீளம் மட்டுமே கொண்ட கிரிக்கெட் பிட்ச்சில் பயிற்சி அளித்தேன். பொதுவாக கிரிக்கெட் பிட்ச் 22 யார்ட்களைக் கொண்டதாக இருக்கும். ஆனால் முஷிர் பயிற்சிபெறும் பிட்ச் 18 யார்டுகளை மட்டுமே கொண்டது என்பதால், அவனை நோக்கி வேகமாக பந்து வரும். இதில் ஆடி பாழகியதால் 22 யார்டு பிட்ச்சில் அவன் சிறப்பாக வேகப் பந்து வீச்சை எதிர்கொள்கிறான்.
அதேபோல் எங்கள் ஊரில் உள்ள பந்துவீச்சாளர்களை எல்லாம் அழைத்து, முஷீரின் பலவீனங்களை கண்டுபிடித்து அவனுக்கு பந்துவீசச் சொன்னேன். டென்னிஸ் பாலில் அதிவேக யார்க்கர்களை வீசி அவர்கள் அவனுக்கு பயிற்சி கொடுத்தார்கள். இப்படி பல விதங்களில் அவனை உருவாக்கினோம்” என்கிறார்.
பொதுவாக தங்கள் குழந்தைகள் வேகமாக பந்தை அடித்து யார் வீட்டு கண்ணாடியையாவது உடைத்தால் அப்பாக்கள் திட்டுவார்கள். ஆனால் நவுஷத் அப்படி செய்யாத அப்பாவாக இருந்திருக்கிறார். இன்னும் ஒருபடி மேலே போய், தன் மகன் அதிரடியாக ஆடுகிறானே என்று அவனை பாராட்டியுள்ளார்.
முஷீருக்கு ஒரு கட்டத்தில் சுழற்பந்து பந்துவீச்சின் மீதுதான் விருப்பம் இருந்துள்ளது. ஆனால் நவுஷத் அதை ஏற்கவில்லை. கிரிக்கெட்டில் இது பேட்ஸ்மேன்களின் காலம் என்று சொல்லி, அதிலேயே பயிற்சி கொடுத்திருக்கிறார். தினமும் முஷீரும், சர்பிராஸ் கானும் 300 பந்துகளையாவது எதிர்கொண்டு பேட்டிங் செய்யவேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார். அப்பா சொன்னபடி பேட்டிங் பயிற்சி செய்து, பிறகு நேரம் கிடைக்கும்போது பந்து வீசி பயிற்சி பெற்றுள்ளார் முஷீர்.
அப்பா கொடுத்த ஊக்கத்தால் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் ஆடத் தொடங்கிய காலத்தில் இருந்தே பலரது கவனத்தையும் முஷீர் கான் ஈர்த்துள்ளார். அதனால் கடந்த ஆண்டு நடந்த ரஞ்சி கோப்பை தொடரிலேயே மும்பை அணியில் அவர் இடம்பெற்றுள்ளார். அந்த அணியின் கேப்டனான ரஹானேவின் மேற்பார்வையில் இவர் 3 போட்டிகளில் ஆடியது, அவரது திறமையை பட்டை தீட்ட உதவியிருக்கிறது. இதைத் தொடர்ந்துதான் இப்போது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் அவர் சேர்க்கப்பட்டார்.
இந்த உலகக் கோப்பையில் இந்தியாவின் நாயகனாக உருவெடுத்துள்ள முஷீர் கானின் சிறப்பம்சமாக ஹெலிகாப்டர் ஷாட் இருந்திருக்கிறது. தோனியின் சிக்னேச்சர் ஷாட்டான இந்த ஹெலிகாப்டர் ஷாட்டில் பல சிக்சர்களை பறக்க விட்டுள்ளார்.
“நான் அடித்த சதங்கள் முக்கியமில்லை. இந்த உலக கோப்பையை எங்கள் டீம் ஜெயிக்கணும். அதை என் அப்பாவும் குடும்பமும் ஸ்டேடியத்தில் பார்த்து ரசிக்கணும்” என்று தன் ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார் முஷீர் கான்.