மறைந்த காமெடி நடிகர் மயில்சாமிக்கு அன்பு, யுவன் என 2 மகன்கள் உள்ளனர். இருவரும் சினிமா துறையில் இருக்கிறார்கள். சில படங்களில் நடித்து இருக்கிறார்கள். பெரிய மகன் அன்பு பல படங்களில் ஹீரோவாகவும், சின்ன மகன் யுவன் டிவி சீரியல்களிலும் அதிகம் நடிக்கிறார்கள். இரண்டு பேரையும் பெரிய ஹீரோக்கள் ஆக்க வேண்டும் என்று நினைத்த மயில்சாமி, 2023ம் ஆண்டு பிப்ரவரியில் மாரடைப்பால் காலமானார். இப்போது இருவரும் தொடந்து நடித்து வரும் நிலையில் எமன் கட்டளை என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் அன்பு.
இதென்ன தலைப்பு என்று இயக்குனர் எஸ்.ராஜசேகரிடம் கேட்டபோது, “தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் எமன் சம்பந்தப்பட்ட புராண படங்களும், பேன்டசி படங்களும் வந்துள்ளன. கவுண்டமணி கூட அப்படிப்பட்ட ஒரு படத்தில் நடித்தார். அந்தவகையில் இந்த படம் பேன்டசி, சென்டிமென்ட் கலந்த கதையாக வருகிறது. இரு நண்பர்களின் தவறான செயலால் ஒரு பெண்ணின் திருமணமே நின்று விடுகிறது. விளைவு, மணப்பெண்ணும் அவளின் தந்தையும் விஷம்குடித்து விடுகிறார்கள்.
அதை அறிந்த இரு நண்பர்களில் ஒருவரான ஹீரோ அன்பு மனம் வருந்தி அவமானத்தால் தற்கொலை செய்கிறார். எமலோகம் செல்கிறான். அங்கு எமதர்மராஜா கட்டளைப்படி உப்பை தின்னவன் தான் தண்ணீர் குடிக்கணும், அதனால் நீ தான் அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து அதுவும் 60 நாட்களுக்குள் மணமுடித்து வைக்க வேண்டும் என்று கூறுகிறார்
அதனால், பூலோகம் வந்த அன்பு நண்பருடன் சேர்ந்து அந்த பெண்ணுக்கு பல மாப்பிள்ளைகள் தேடி அலைகிறான். தாய்மாமனும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். ஒரு கட்டத்தில் அந்த பெண் மீது அன்பு காதல் கொள்கிறான். இதற்குள் 59 நாட்கள் ஓடுகிறது. 60 வது நாளும் பிறக்கிறது. எமன் கட்டளைப்படி அப்பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்த்து மணம் முடித்தார்களா? என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையுடன் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகளாக சொல்லியிருக்கிறோம்’’ என்கிறார்