மார்க் ஆண்டனி படத்தில் வருவது போல டைம் டிராவல் சாத்தியமா ?
சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் காலப் பயணத்தை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டது. விஞ்ஞானியாக வரும் செல்வராகவன் கண்டுபிடித்த ஒரு நவீன தொலைபேசி மூலம் கடந்த காலத்திற்கு சென்று ஏற்கனவே நடந்த நிகழ்வுகளை மாற்றியமைக்க முடியும். இந்த தொலைப்பேசி இரு ரௌடிகள் கையில் கிடைத்தால் அவர்கள் எப்படி பயன்படுத்துவார்கள் என்பது தான் கதை . படம் முழுக்க முழுக்க பொழுதுப்போக்கிற்காக உருவாக்கபட்டது என்றாலும்,
காலப் பயணம் செய்து ஒருவரால் நடந்தவை அனைத்தையும் மாற்ற முடியுமா என்பதுதான் படம் பாரத்ததும் எனக்கு எழுந்த கேள்வி . டைம் டிராவல் உண்மையில் சாத்தியமா ?
முதலில் டைம் டிராவல் – காலப் பயணம் – என்றால் என்னவென்று தெரிந்துக்கொள்வோம்!
நாம் இருக்கும் கிரகத்துக்கும் மற்றொரு கிரகத்துக்கும் காலமும் நேரமும் வேறுபடும். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் நேர வித்தியாசம் இருக்கிறதல்லவா அது மாதிரி. இதை ஒரு எளிய உதாரணமாய் எடுத்துக் கொள்ளலாமே தவிர டைம் ட்ராவல் எனப்படும் காலப் பயணம் சற்று சிக்கலானது.
காலத்தை கடக்க நாம் ஒளியின் வேகத்துக்கு மேலாக பயணிக்க வேண்டியிருக்கும். எந்த அளவுக்கு ஒளியின் வேகத்திற்கு ஈடாக பயணம் செய்கிறோமோ அந்த அளவுக்கு நம்மால் நேரத்தைக் கடந்து பயணம் செய்ய முடியும்.
ஒளியின் வேகத்தையும் தாண்டி நம்மால் பயணம் செய்ய முடியும் என்றால் நம்மால் எதிர்காலத்திற்கு செல்லமுடியும் என்று அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்.
ஒளியின் வேகம் என்பது சும்மா அல்ல, ஒரு நொடிக்கு 3,00,000 கிமீ வேகம். நிலவுக்கு சென்று சாதனைப் படைத்த நமது சந்திராயான் சென்ற வேகம் ஒரு நொடிக்கு 1.68 கிமீ. இந்த ஒப்பீட்டைப் பார்த்தால் ஒளி வேகத்தின் பிரமாண்டத்தை புரிந்துக் கொள்ளலாம்.
இந்த வேகத்தை மனிதனால் எட்ட முடியுமா?
மனிதன் பலவற்றை சாதித்திருக்கிறான். நிலவுக்கு பயணப்பட்டுவிட்டான். செவ்வாயை தொட்டுவிட்டான்.
ஆனால் ஒளியின் வேகம்?
நம்மிடம் இருக்கும் ராக்கெட் போன்ற ஏவுகனைகள் கூட நொடிக்கு 7 அல்லது 8 கிமீ வேகம்தான். நொடிக்கு 3,00,000 கீமி பயணம் செய்கிற அளவிற்கு நம்மிடம் இன்று தொழில்நுட்பம் இல்லை.
அந்த தொழில் நுட்பம் தெரிந்து நம்மால் ஒளியின் வேகத்தை தாண்ட முடிந்தால் கால பயணம் சாத்தியமாகும் என்று கூறப்படுகிறது. அப்படியே பயணம் செய்தாலும் எதிர்காலத்தை சென்று அடைய முடியுமே தவிர கடந்த காலத்திற்கு செல்ல வாய்ப்பே இல்லை என்று கூறுகிறார்கள் அறிவியலாளர்கள், காரணம் ஒளியின் வேகத்திற்கு ஈடாக பயணிக்க முடியுமே தவிர ஒளியின் வேகத்தைத் தாண்டி பயணிப்பது சாத்தியமற்றது.
இன்று நம்மிடம் அந்த தொழில்நுட்பம் இல்லை. நாளை சாத்தியமா?
மனிதன் பல சாதனைகளை செய்திருந்தாலும் அவனால் இயற்கையை மீற முடிந்ததில்ல. இயற்கையின் வேகத்தையும் சீற்றத்தையும் அடக்க முடிந்ததில்லை, உயிரைப் பிடித்து வைக்க முடிந்ததில்லை, இதுவரை.
இனியும் அப்படிதான் என்றே தோன்றுகிறது.