முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை ஒருமுறை தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் சந்தித்திருக்கிறார்கள். அப்போது அவருக்குத் தெரிந்த ஒரே நட்சத்திரமாக மனோரமா இருந்திருக்கிறார். அந்த சந்திப்பின்போது அவர் மனோரமாவைப் பார்த்து,. “நீங்க இன்னமும் நடித்துக் கொண்டிருக்கிறீர்களா?” என்று கேட்டாராம். அந்த அளவுக்கு மிக அதிகமாக 1000 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தவர் மனோரமா.
ராஜ மன்னார்குடியில் பிறந்த மனோரமா வளர்ந்தது செட்டிநாட்டில், சிறுவயதிலேயே நல்ல குரல் வளமும்.பாடும் ஆற்றலும் பெற்ற அவரது இயற்பெயர் கோபி சாந்தா. சிறுவயதில் தனது நாடகக் குழுவில் நடித்தபோது அவரது பெயரை மனோரமா என்று மாற்றியிருக்கிறார் எஸ்.எஸ்.ஆர்.
“என் அப்பா காசிகினார் உடையார் ரோடு காண்டிராக்டராகவும், கள்ளுக்கடை காண்டிராக்டராகவும் இருந்தார். அம்மா ராமாமிர்தம் அம்மாவின் தங்கையையும் அப்பாவே கல்யாணம் செய்து கொள்ள, குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. சின்னம்மா எங்களை ரொம்பவே கொடுமைப் படுத்தினார். நான் பத்து மாத குழந்தையாக இருக்கும்போதே அம்மா வீட்டை விட்டு வந்துவிட்டார். பள்ளத்தூரில் முறுக்கு வியாபாரம் செய்து என்னை வளர்த்தார்..
ஒருநாள் வேலங்குடியில் முதல் வரிசையில் அமர்ந்து கூத்தைப் பார்த்து கொண்டிருந்தேன். அப்போது எனக்கு 9 வயது. திடீரென்று ஒரு அறிவிப்பு, ‘எங்கள் மதுரை பொண்ணு கோபி சாந்தா மிக நன்றாக பாடும். இதோ உங்கள் முன்னால் ஒரு பாட்டு பாட சொல்கிறேன் கேளுங்கள்’ என்று உள்ளூர் பிரமுகர் அறிவிக்க. அதைக் கேட்டு நான் வெலவெலுத்துப் போனேன். பாடு… பாடு… என்று பொதுமக்கள் குரல் கொடுக்க, கூச்சத்துடன் மேடை ஏறி பாடினேன். எங்கள் கிராமமே என்னைப் பாராட்டியது” என்று தான் முதலில் மேடை ஏறிய அனுபவத்தைப் பற்றி ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் மனோரமா.
மேலும் கூறும் அவர், “செட்டிநாட்டில் வைகுண்ட ஏகாதசியை விசேஷமாக கொண்டாடுவார்கள். அப்போது நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் நான் பின்னணி பாடுவேன். ஜிப்ஸி டான்ஸ் ஆடுவேன். அப்போது எலக்ட்ரீசியனாக இருந்த பால்ராஜ் ‘யார் மகன்’ என்ற பெயரில் ஒரு நாடகம் எழுதி அரங்கேற்றி னார் .அதில் எனக்கு கதாநாயகி வேடம் கொடுத்தார். அப்போது என் வயது 13 செட்டிநாட்டு வழக்கப்படி நாடகத்தில் தங்களுக்கு பிடித்தமான நடிகர் நடிகைகளுக்கு உள்ளூர் மக்கள் ஏதேனும் பரிசுப் பொருளை வழங்குவார்கள் ஒருநாள் நாடகத்துக்கு தலைமை தாங்கிய எஸ்.பாலசந்திர், அதில் நாயகியாக நடித்த பெண்ணுக்கு 2-வது பரிசைக் கொடுத்துவிட்டு எனக்கு முதல் பரிசைத் தந்தார். அதை என்னால் மறக்க முடியாது.
அதன்பிறகு சென்னைக்கு வந்தேன். அப்போதெல்லாம் திமுக மாநாடுகளில் எம் ஜி ஆரின் இன்பக்கனவு. சிவாஜியின் ‘சேரன் செங்குட்டுவன்’ எஸ் எஸ் ஆரின் மணிமகுடம் நாடகங்கள் தவறாமல் நடைபெறும். எஸ் எஸ் ஆரின் கதாநாயகியாக கலைஞரின் வசனங்களை பேசியது அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தது. அன்றைய திமுக பிரச்சார நாடக நடிகையாக நான் வளர்ந்தேன். கலைஞர் எழுதி நாயகனாக நடித்த ‘காகிதப்பூ ‘ நாடகத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தேன்.
கவிஞர் கண்ணதாசன் தயாரித்த முதல் படம் ‘மாலையிட்ட மங்கை’ 1958-ல் வெளிவந்தது. ரசிகர்களுக்கு மனோரமா என்ற நடிகையை திரைவானில் அறிமுகம் செய்தவர் கவிஞர். அவரே எனது கலங்கரை விளக்கம். அந்த படத்தில் புதுமுகம் அறிமுகம் என்று பெரிய எழுத்துக்களில் என் பெயரை டைட்டில் கார்டில் போட்டு காட்டினார் கவிஞர். பாரகன் தியேட்டரில் ரசிகர்களோடு ரசிகையாக என் அம்மாவுடன் படத்தை பார்த்தேன். முதன் முதலில் என் முகத்தை திரையில் பார்த்தபோது என்னை அறியாமல் கன்னங்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது.
‘கல்யாணராமன்’ படத்தின் நூறாவது நாள் விழா ஒரு ஹோட்டல் நடந்தது. அதற்கு தலைமை தாங்கிய கவிஞர் (கண்ணதாசன் )பேசும் போது, ‘பாலச்சந்தர் நிறைய பேரை அறிமுகம் செய்திருக்கிறார். நான் ஒரே ஒரு நடிகையைத்தான் அறிமுகம் செய்தேன். எனது அறிமுகம் மனோரமா’ என்றார். தொடர்ந்து பேசிய பாலச்சந்தர், ‘கவிஞர் ஒரே ஒரு மனோரமாவைத்தான் அறிமுகம் செய்தார். நான் ஏராளமானவர்களை அறிமுகம் செய்திருக்கிறேன் ஆனால் அத்தனை அறிமுகங்களும் கவிஞரின் ஒரே ஒரு அறிமுகத்திற்கு ஈடாகாது மனோரமாவைப் போன்று இன்னொரு நடிகையை என்னால் இதுவரை அறிமுகம் செய்ய முடியவில்லை. இனிமேலும் முடியுமா என்பது சந்தேகமே’ என்றார்.
கவிஞரின் மறைவிற்குப் பின் அவரது நினைவு நாள் நிகழ்ச்சி காரைக்குடியில் நடந்தது. செட்டிநாட்டு கவிஞர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு விழாபோல நடத்தினார்கள். கவிஞரின் படத்தை திறக்க வேண்டிய பிரமுகர் வரவில்லை. எல்லோரும் சேர்ந்து என்னையே கவிஞரின் படத்தை திறக்கச் சொன்னார்கள் அப்போது எனக்கு அழகை பொங்கி வந்தது.
நான்கு தலைமுறை நடிகையாக கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக எல்லா நட்சத்திரங்களுடனும் ஆயிரம் படங்களுக்கு மேல் அடித்துவிட்டேன் குழந்தை முதல் கிழவர் வரை அன்பு ஆதரவும் காட்டுகிறார்கள். இத்தனைக்கும் காரணம் கதாநாயகி வேஷத்திற்கு ஆசைப்பட்ட நான். ஒரு காமெடி நடிகையாக, குணச்சித்திர நடிகையாக நடித்தது தான்.