இலங்கையில், விடுதலைப் புலிகள் – இலங்கை ராணுவம் இடையே 2009ஆம் ஆண்டு இறுதிகட்ட போர் நடைபெற்றது. அதில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போரில் இறந்துவிட்டதாக அறிவித்த இலங்கை அரசு, அதுதொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்தது. என்றாலும் கூட பிரபாகரன் உயிரிழக்கவில்லை, அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்று தமிழ் தேசிய அமைப்புகள் கூறி வருகின்றன.
இந்த நிலையில் தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பழ. நெடுமாறன், “பிரபாகரன் பற்றிய அவதூறுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார். பிரபாகரன் குடும்பத்தினருடன் தொடர்பு இருக்கிறது. பிரபாகரனின் அனுமதியுடன் இதனை வெளிபடுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு: களைகட்டும் தேர்தல் பிரச்சாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு 15 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் வீடாகச் சென்று பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர்.
திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதராவாக அமைச்சர்கள் முத்துசாமி, கே.என்.நேரு, எ.வ.வேலு, சாமிநாதன், பெரியசாமி, செந்தில்பாலாஜி, செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவுக்கு வாக்கு சேகரிக்கும் வகையில், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.வி. ராமலிங்கம், கருப்பணன், விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, செல்லூர் ராஜு, பாண்டியராஜன் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பாஜக நிர்வாகி முருகானந்தம், எம்எல்ஏ சரஸ்வதி உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
75 லட்சம் கொள்ளை: 13 நிமிடங்களில் ஏ.டி.எம். கொள்ளையை அரங்கேற்றிய 4 பேர் கும்பல்
திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், தேனிமலை பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், போளூர் பஸ் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், கலசப்பாக்கம் அண்ணாநகர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள இண்டிகா ஏடிஎம் மையம் ஆகிய 4 இடங்களில் ஏடிஎம் மையங்களை உடைத்து ஒரு கும்பல் பணத்தை கொள்ளையடித்தனர். இந்த 4 இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் இருந்து ரூ. 72 லட்சம் பணம் கொள்ளை போனது. 4 ஏடிஎம் மையங்களிலும் ஒரே விதமாக கொள்ளை நடந்துள்ளது.
ஒரு ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க 13 நிமிடங்கள் மட்டுமே கொள்ளையர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். போளூர் ஏ.டி.எம். மையம் அருகே உள்ள கேமராக்கைளை ஆய்வு செய்தபோது அதிகாலை 3.50 மணிக்கு காரில் தொப்பி அணிந்தபடி 4 பேர் கும்பல் வந்ததும் அடுத்த 13 நிமிடத்தில் அவர்கள் கொள்ளையை முடித்து விட்டு திரும்பி சென்றதும் பதிவாகி உள்ளது.
கொள்ளை நடந்த ஏடிஎம் மையங்களை போலீஸ் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் துப்பு துலங்கியதை அடுத்து கொள்ளைக்காரர்களை பிடிக்க தனிப்படை போலீசார் அரியானா, ஆந்திரா விரைந்துள்ளனர்.
துருக்கியில் நிலநடுக்கம் பாதித்த நகரில் மீண்டும் நிலநடுக்கம்: மீட்பு குழு அதிர்ச்சி
துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதியில் கடந்த வாரம் திங்கட்கிழமை அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் இரு நாடுகளிலும் மொத்தம் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். மீட்புப் பணி தொடர்ந்து நடந்துவரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் உள்ளிட்ட அண்டை நாட்டு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் 100-க்கும் மேற்பட்ட நிலஅதிர்வுகள் ஏற்பட்டு உள்ளன என்றும் தகவல் தெரிவிக்கின்றது.
இந்நிலையில், துருக்கியின் காஹ்ராமன்மராஸ் நகரில் இருந்து தென்கிழக்கே 24 கி.மீ. தொலைவில் நேற்று நள்ளிரவு 12.03 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் 15.7 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நகரம் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அதிகம் பாதிக்க பகுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.