No menu items!

’கிங் ஆஃப் பாலிவுட்’ ஷாரூக்கானின் வெற்றிக் கதை

’கிங் ஆஃப் பாலிவுட்’ ஷாரூக்கானின் வெற்றிக் கதை

“இதயப்பூர்வமாக ஏதாவது ஒன்றை நீங்கள் விரும்பினால், அதை நீங்கள் அடைய முழு பிரபஞ்சமும் ஒன்று சேர்ந்து முயற்சிக்கும்.” என்பதுதான் அதன் அர்த்தம்.

’ஓம் சாந்தி’ படத்தில் ஷாரூக்கான் பேசும் வசனம் அது.

அப்படிதான் ஷாரூக்கான் ஆசைப்பட்டார்.

பாலிவுட்டில் நடிகராகவதற்கு முன்பு, மரைன் ட்ரைவ் சென்ற ஷாரூக்கான், சூரியனின் பிரதிபலிப்பில் கண்களைக் கூசச்செய்த கடலைப் பார்த்து. ‘ஒருநாள் நான் இந்த நகரத்தையே ஆள்வேன்’ என்று உரக்கச் சொன்னார். அலைகளின் ஆர்ப்பரிக்கும் சத்தத்தில் அவரது குரல் கலந்து, எங்கும் வியாபித்து இருந்தது.

இப்பொழுது ஷாரூக்கான் சொன்னதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

புலி பதுங்குவது வேட்டையாடுவதற்குதான். நான்கு ஆண்டுகள் வீட்டிற்குள்ளே பதுங்கி இருந்தது கூட, இதற்குதானோ என்று யோசிக்க வைத்திருக்கிறது ஷாரூக்கானின் ‘பதான்’ பாய்ச்சல்.

பதான் வெளியான இரண்டு வாரங்களில் இந்தியாவில் 544 கோடியும், வெளிநாடுகளில் 332 கோடியும் வசூலித்து, பாக்ஸ் ஆபீஸில் ஒட்டுமொத்தமாக 876 கோடியை கல்லாக்கட்டியிருக்கிறது. அதிகம் வசூலித்த ஹிந்திப் படம் என்ற பெருமையையும் தட்டிச் சென்றிருக்கிறது.

கோவிட்டில் கோமாவுக்கு போன பாலிவுட், மீண்டு எழ சரியான படங்கள் இல்லாமல் தள்ளாடிய போது, ’பதான்’ ரசிகர்களை திரையரங்குகளுக்கு மீண்டும் வரவழைத்து இருக்கிறது.

இதனால்தான் ‘கிங் ஆஃப் பாலிவுட்’, ‘கிங் கான்’ என சினிமா ரசிகர்களால் ஆராதிக்கப்படுகிறார்.

இந்தியாவின் எல்லைகளைத் தாண்டியும் இவர் மீது காதலோடு ‘லப் டப்;..லப் டப்..’ அடிக்கும் இதயங்களின் எண்ணிக்கை பல மில்லியன்களைத் தொட்டிருக்கிறது.

இந்த ராஜ்ஜியம், பட்டம், மகுடம் எல்லாம் ஷாரூக்கானுக்கு வழக்கமான வாரிசு அரசியல் பாணியில் நோகாமல் சட்டென்று கிடைத்துவிடவில்லை.

ஷாரூக்கான், கிங் ஆஃப் பாலிவுட் ஆனது எப்படி என்பது ஒரு கேஜிஎஃப் படத்தைப் போல இரண்டு பாகங்களுக்கு நீளும் ஒரு அசத்தலான திரைக்கதை.

1965-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி முதல் இந்த உலகில் ஷாரூக்கானின் வாழ்க்கைப் பயணம் ஆரம்பித்தது.

விடுதலைக்கு முன்பாக ப்ரிட்டிஷ் இந்தியாவாக அறியப்பட்ட பாகிஸ்தானில், ப்ரிட்ஷ் ஆட்சிக்கு எதிராக சுதந்திரத்திற்காக போராடிய மீர் தாஜ் மொஹமட் கான், நியூ டெல்லியைச் சேர்ந்த லதீஃப் ஃபாத்திமா ஜோடிதான் ஷாரூக்கானின் பெற்றோர். இவரது தந்தை வழி தாத்தா ஜன் மொஹமட் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்.

இதனால்தான் ஷாரூக்கான் தன்னைப் பற்றி குறிப்பிடும் போது, ‘நான் பாதி ஹைதராபாதி [அம்மா], பாதி பதான் [அப்பா], கொஞ்சம் காஷ்மீரி [பாட்டி] என்று நகைச்சுவையாக சொல்வது வழக்கம்.

ஷாரூக்கானின் குழந்தைப் பருவம் டெல்லியில் கழிந்தது. கொலம்பா பள்ளியில்தான் படிப்பு. அப்போதே படிப்பிலும், விளையாட்டிலும் கில்லாடி இதனால் பள்ளியில் மாணவர்களை கெளரவப்படுத்துவதற்காக வழங்கப்படும் வாள் இவருக்கு பரிசளிக்கப்பட்டது. அந்தப் பள்ளியில் அதுதான் மிக உயரிய விருது.

படிப்பில் கெட்டி என்றாலும் நடிப்பில் சுட்டியாக இருந்தார். திலீப் குமார், அமிதாப் பச்சன், மும்தாஸ் என்றால் இவருக்கு அலாதி ப்ரியம்.

கல்லூரிப் படிப்பு ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் ஆரம்பித்தது.

படித்தது எக்னாமிக்ஸ். ஆனால் டெல்லி தியேட்டர் ஆக்‌ஷன் க்ரூப்பில்தான் இவரது பொழுது கழிந்தது. நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமாவுக்கு போனார், விளைவு கல்லூரிப் படிப்பு பாதியிலேயே சுபம்.

அடுத்து, 1988-ல் லேக் டாண்டன் இயக்கிய ‘தில் தரியா’ டிவி ஷோவில் நடிகராக எண்ட்ரீ.
முதல் முயற்சியில் சிக்கல். தயாரிப்பு பிரச்சினைகளால் அந்த ஷோ ரிலீஸ் தள்ளிப் போனது.

1989-ல் அடுத்து ஒரு டிவி சீரியல் வாய்ப்பு. அந்த டிவி சீரியல்தான் ‘ஃபாஜி’ [Fauji]. டிவி சீரியல் நடிகராக அறிமுகமானார் ஷாரூக்கான்.

அதே ஆண்டு ‘சர்க்கஸ்’ சீரியலும் வெளியானது. இதில் ஷாரூக்கானுக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம். ஆனாலும் நடித்தே ஆகவேண்டுமென்பதால் ’உமீத்’ மாதிரியான சீரியல்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் ஷாரூக்கான். 1988-89-ல் ‘வாக்ளே கி துனியா’ [Wagle Ki Duniya], 1989-ல் ‘இன் விச் அன்னி கிவ்ஸ் இட் தோஸ் ஒன்ஸ் [In Which Annie Gives It Those Ones]. 1991-ல் மணி கெளலின் ’இடியட்’ [Idiot] மினி சிரீஸில் நடிக்க, விமர்சகர்களின் பார்வை இவர் பக்கம் திரும்பியது. இவரது தோற்றம், ஸ்டைல், நடிப்பை பாலிவுட்டின் பாப்புலர் ஹீரோ திலீப் குமாருடன் ஒப்பிட ஆரம்பித்தார்கள்.

எதிர்பாராத வகையில் ஷாரூக்கைப் பாதித்தது அவரது அம்மாவின் மரணம்.

அம்மா பிரிவைத் தாங்கமுடியாமல் டெல்லியை விட்டு கிளம்பினார். வந்தது சேர்ந்த இடம்தான் மும்பை.

ஏற்கனவே டிவி சிரீயல்களில் நடித்த அனுபவம் இருந்ததால், சினிமா வாய்ப்புகள் கிடைத்தன. ஒரே ஆண்டில் 4 படங்களில் கமிட்டானார் ஷாரூக்கான். 1992-ல் முதல் படம் ‘தில் ஆஷ்னா ஹை’ [Dil Aashna Hai]. நடிகை ஹேமாமாலினி ஒரு இயக்குநராக அறிமுகமாக ஆசைப்பட்டு இயக்கியப் படம் அது. இப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே அவர் நடித்த ‘தீவானா’ [Deewana] 1992-ல் வெளியானது. ஷாரூக்கான் பாலிவுட் நடிகராக அறிமுகமானது அப்போதுதான்.

முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருக்கான [best male debut.] ஃப்லிம்ஃபேர் விருது. ‘தில் ஆஷ்னா ஹை’, ‘சமத்கார்’ [Chamatkar], ‘ராஜூ பன் கயா ஜென்டில்மேன்’ [Raju Ban Gaya Gentleman] என அடுத்தடுத்தப் படங்கள் ஷாரூக்கானை ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாற்றின.

சில படங்களில் ஹீரோவாக நடித்த ஷாரூக்கான், ‘1993-ல் ’டர்’ [Darr], ‘பாஸீகர்’ [Baazigar] என அடுத்தடுத்தப் படங்களில் வில்லத்தனமான ஹீரோவாக நடித்தார். இந்த இரண்டு கதைகளையும் கேட்ட ஆமீர் கானும், சல்மான் கானும் வேண்டாமென தூக்கிப் போட்டுவிட்டார்கள். ஆனால் ஷாரூக்கான் ஏன் கமிட்டானார் என்பது பலருக்குப் புரியவில்லை. ‘பாஸீகர்’ படத்தில் மர்டர் பண்ணும் கதாபாத்திரத்தில் நடித்தவருக்கு கிடைத்தது, ஃப்லிம்ஃபேரின் விருது ‘பெஸ்ட் ஆக்டர்’. இந்த வில்லத்தனமான கேரக்டர்களும் ஷாரூக்கானை ஹீரோவாக தூக்கிப்பிடித்தனர். ‘மாயா மேம்சாப்’ [‘Maya Memsaab] படத்தில் தீபா சஹியுடன் நிர்வாணமாக நடித்த காட்சி அப்பொழுது பரபரப்பைக் கிளப்பியது. இனி இது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று ஷாரூக்கான் வருத்தப்படுமளவிற்கு நிலைமை உருவானது.

1994-ல் அவர் நடித்த ‘அஞ்ஜாம்’ [Anjaam], ‘கபி ஹான் கபி நா’ [Kabhi Haan Kabhi Naa] ஷாரூக்கானை ரசிகர்களிடையே நெருக்கமாக்கியது. கபி ஹான் கபி நா’ படத்தில் நடித்ததற்காக ஃப்லிம்ஃபேர் க்ரிட்டிக்ஸ் விருது ஷாரூக்கானை தேடி வந்தது.

1995 -ம் ஆண்டு ஷாரூக்கானுக்கு திருப்புமுனையைக் கொடுத்தது.

ஒரே வருடத்தில் வரிசையாக மளமளவென ஏழு படங்கள். அந்தப் படங்களில் ’கரண் அர்ஜுன்’ [Karan Arjun] அந்த ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் செய்த திரைப்படமாக பெரும் வரவேற்பை பெற்றது. ஆதித்யா சோப்ராவுடன் இணைந்த ’தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ [Dilwale Dulhania Le Jayenge] படம் ’ஆல் டைம் ப்ளாக்பஸ்டர்.’ அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த திரைப்படமாக பாக்ஸ் ஆபீஸில் கொண்டாடப்பட்டது. ‘மராத்தா மந்திர்’ [Maratha Mandir] படத்திற்கு பிறகு அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் என்ற ரிக்கார்டையும் படைத்தது. ’யெஸ் பாஸ்’ [Yes Boss], ’பர்தேஸ்’ [Pardes], ‘தில் தோ பகல் ஹை’ [Dil Toh Pagal Hai] என வரிசையாக சரவெடி போல தொடர்ந்து ஷாரூக்கானின் படங்கள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனில் அதிர வைத்தன.

தி’ல் தோ பகல் ஹை’, ஷாரூக்கானுக்கு சிறந்த நடிகருக்கான மூன்றாவது ஃப்லிம்ஃபேர் விருதைப் பெற்று கொடுத்தது.

1998-ல் ’குச் குச் ஹோதா ஹை’ [Kuch Kuch Hota Hai] இளம்பெண்களின் மனங்களில் ஷாரூக்கானை பாலிவுட்டின் காதல் இளவரசனாக ஆதிக்கம் கொள்ள செய்தது. ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இந்த காதல் இளவரசன் தன்னுடன் நடித்த எந்த நடிகைக்கும் எந்த காட்சியிலும் ஒரு முத்தம் கூட கொடுத்தது இல்லை. ஆனாலும் இளம் பெண்களின் கனவு நாயகன் ஆனார் ஷாரூக்கான். [2012-ல் இந்த கொள்கையை யாஷ் சோப்ரா உடைக்க வைத்தது ஷாரூக்கின் ரசிகர்கள் ரசிகைகளைக் குஷிப்படுத்தியது]

கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கிய ஷாரூக்கின் சினிமா கோட்டை, நிலநடுக்கம் புரட்டிப் போட்ட துருக்கியை போல் சில்லி சில்லியாய் நொறுங்கியது. காரணம், அடுத்தடுத்த ஃப்ளாப்கள். 1999-ல் ‘பாட்ஷா’ [Baadshah], 2000-ல் ‘ஃபிர் பி தில் ஹை ஹிந்துஸ்தானி’ []Phir Bhi Dil Hai Hindustani, 2001-ல் ‘அசோகா’ [Phir Bhi Dil Hai Hindustani] என ஹாட்ரிக் ஃப்ளாப்.

ஃப்ளாப் கொடுத்தால் அடுத்து என்ன, நாமே படம் தயாரித்தால்தான் உண்டு. அதையேதான் ஷாரூக்கும் செய்தார். ட்ரீம்ஸ் அன்லிமிடெட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அது சரிப்பட்டு வரவில்லை. உடனே srkworld com-ஐ அப்படியே இழுத்து மூடினார்.

இந்த சோதனைகளுக்கு இடையே ஃப்ளாப்களால் துவண்டுப் போயிருந்த ஷாரூக்கானுக்கு, ‘சக்தி’ பட ஷூட்டிங்கின் போது நடந்த விபத்தினால் தோள்பட்டையில் உண்டான பலத்த காயம் அவரோடு ஜோடி சேர்ந்துகொண்டது. மனதளவிலும், உடல்ரீதியாகவும் ரொம்பவே பாதிக்கப்பட்டார்.

உடல் வலியிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி அறுவைசிகிச்சை.. ஒன்று அல்ல. இரண்டு அறுவைசிகிச்சை செய்தே ஆகவேண்டுமென மருத்துவர்கள் குழு பரிந்துரைத்தது. அண்டீரியர் செர்விகல் டிசெக்ட்டமி, ஃப்யூஷன் சர்ஜரி என இரண்டு அறுவை சிகிச்சைக், லண்டனில் இருக்கும் வெலிங்டன் மருத்துவமனையில் வைத்து ஷாரூக்கானுக்கு செய்யப்பட்டன.

கொஞ்ச நாட்கள் கட்டாய ஒய்வு.

விபத்தினால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டபோது, ஷாரூக்கான் மிக அதிக மன அழுத்தத்தில் இருந்தார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். தாங்க முடியாத வலி ஒரு காரணம். அடுத்து இனி தொடர்ந்து ஆக்ட்டிவாக இருக்க முடியுமா, ஃபிட்டாக இருக்க முடியுமா என்ற ப்ரஷர். இரண்டும் தினமும் பாடாய் படுத்தினாலும், ’Life begins when we decide it’s going to begin for us’ என்று மீண்டும் எழுந்து சினிமா கேரியரில் ஓட தொடங்கினார்.

கொஞ்சம் தேறிய பிறகு 2000-ல் ’ மொஹபத்தீன்’ [Mohabbatein]. 2001-ல் ’ கபி குஷி கபி கம்’ [Kabhi Khushi Kabhi Gham] என இரண்டுப் படங்களும் ஃபேமிலி ட்ராமா வகையறா படங்களாக வெளிவந்தன. வசூலிலும் வெளுத்து வாங்கின. மொஹபத்தீன் ஃப்லிம்ஃபேர் விருதையும் வாங்கிக் கொடுத்தது.

2022-ல் சஞ்சய் லீலா பன்சாலியுடன் கைக்கோர்க்க ‘தேவ்தாஸ்’ [Devdas] உருவானது. அப்படம் எடுக்கப்பட்டபோது, அதுதான் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் என்ற கெத்து உடன் வெளியானது. மொத்தமாக 10 ஃப்லிம்ஃபேர் விருதுகள். பாஃப்டா விருதும் கிடைத்தது.

2002-ல் ‘சல்தே சல்தே’ [Chalte Chalte] உடன் ஆரம்பித்த வெற்றி 2003-ல் வெளியான ‘கல் ஹோ நா ஹோ’ []Kal Ho Na Ho படத்திலும் தொடர்ந்தது.

உற்சாகமான ஷாரூக் 2004-ல் தனது ட்ரீம்ஸ் அன்லிமிடெட் நிறுவனத்தை ‘ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட்’ என மாற்றினார். அதில் தனது மனைவி கெளரியையும் ஒரு பார்ட்னராக்கினார். அதே வேகத்தில் தயாரித்த ‘மே ஹூன் நா’ [Main Hoon Na], ‘வீர் ஸாரா’ [Veer-Zaara] இரண்டும் ரெட் சில்லிஸ் எண்டெயின்மெண்ட் லிமிடெடின் வருவாயை வெயிட்டாக உயர்த்தின.

அடுத்து வந்த ‘ஸ்வதேஸ்’ [Swades], அமெரிக்காவின் நாசாவிற்குள் ஷூட் செய்யப்பட்ட படமாக வெளியானது. நாசாவினுள் ஷூட் செய்யப்பட்ட முதல் இந்தியப்படம் அதுதான். ஷாரூக்கானின் நடிப்பிற்கு பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் இப்படம் பெற்று கொடுத்தது.

2005-ல் ‘பஹேலி’ [Paheli], 2006-ல் ‘கபி அல்விதா நா கெஹனா’ [Kabhi Alvida Na Keh], ‘டான்’ [Don], 2007-ல் ‘சக்தே இந்தியா [Chak De India] ஷாரூக்கான் நடிப்பின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தின.

2007- நடன இயக்குநர் பெரா கான் இயக்கிய ‘ஒம் சாந்தி ஒம்’ [Om Shanti Om] அந்த வருடத்தில் அதிக வசூலைப் பெற்ற, ஒரு பக்காவான மெலோ ட்ராமாவாக மக்களிடையே பேசப்பட்டது.

2008-ல் வெளியான “ரப் நே பனாதி ஜோடி’ [Rab Ne Banadi Jodi] ஷாரூக்கானுக்காகவே எழுதப்பட்ட கதை, உருவாக்கப்பட்ட கதாப்பத்திரம் என்ற விமர்சனத்தைப் பெற்றது.

2010-ல் “மை நேம் இஸ் கான்’ [My Name Is Khan], 2011-ல் ’டான் 2’ [Don 2], “ரா.ஒன் [Ra.One] மூன்றுப் படங்களும் வணிக ரீதியாக வெற்றி பெற்றன.

தனது சினிமா கேரியரில் 2012-ல் நடித்த ’ஜப் தக் ஹை ஜான்’ [Jab Tak Hai Jaan] படத்திற்காக கைத்ரீனா கைஃப்பை இறுக்கி அணைத்து ஒரு ’உம்மா’ கொடுத்தார். அது அவரது ரசிகைகளில் பலரை கலங்கடித்தது.

காதலின் பல பரிமாணங்களிலேயே தனது இரு கைகளையும் இறக்கையை விரிப்பது போல் உயர்த்தி டூயட் பாடியே ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருந்த ஷாரூக்கானை, 2013-ல் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக ஒரு புது பயணத்திற்கு அழைத்து சென்றது . ’சென்னை எக்ஸ்ப்ரஸ்’ [Chennai Express].

அடுத்து ’ஹேப்பி நியூ இயர்’ (2014), ’தில்வாலே’ (2015) இரண்டுமே கமர்ஷியலாக கலெக்‌ஷனை அள்ளின.

எல்லா படங்களும் பக்காவாக பலம் காட்ட ஆனந்த் எல் ராய் உடன் சேர்ந்த ‘ய “ஸீரோ’ (2018), இதுவரை ஷாரூக்கான் சேர்த்திருந்த மார்க்கெட்டும் இனி ஸீரோ தானா என்று யோசிக்க வைக்குமளவிற்கு பதம் பார்த்தது. அடுத்து வந்த ‘ஜப் ஹேரி மெட் செஜால்’ [Jab Harry Met Sejal] படுதோல்வி.

ஷாரூக்கான் அவ்வளவுதான். ரிட்டையர்மெண்ட் ஆகவேண்டிய நேரம் வந்துவிட்டது. என ஏகப்பட்ட கமெண்ட்கள், விமர்சனங்கள்.

இந்த ஸீரோ எஃபெக்ட்டுக்கு பிறகுதான் நான்காண்டுகள் ஸ்டூடியோக்கள், கேமரா, லைட்டிங், கிரேன், நாகரா என எதுவுமில்லாமல் சபாடிக்கல் மோடுக்கு மாறினார்.

’ஸீரோ’ படம் ஃபளாப் ஆனதும் அப்படம் பற்றி ஷாரூக்கான் பேசிய போது,’என்னுடைய படங்களை என் மகளைப் போலவே மதிக்கிறேன். அவள் கல்யாணத்திற்கு செலவு செய்வதைப் போலவே படங்களுக்கும் செலவழிக்கிறேன்.’’

இந்த அக்கறைதான் ஷாரூக்கின் பலம்.

அதேபோல் உங்களை ‘கிங் ஆஃப் பாலிவுட்’ என்று செல்லமாக அழைக்கிறார்களே என்ற கேட்டபோது, ‘நீங்கள்தான் ராஜா உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்வதற்கான சாய்ஸ் இருக்கவேண்டும். நினைத்ததை செய்ய வாய்ப்பே இல்லாத ராஜா, உண்மையில் ஒரு ராஜாவே இல்லை.’ என்றார்.

தான் எடுக்கும் முயற்சி வெற்றி பெறலாம், தோல்வி அடையலாம். ஆனால் சரியென்று பட்டதை செய்து பார்க்க ஷாரூக் தயங்குவதே இல்லை.

அந்த போராடும் குணம் ஷாரூக்கின் பலம்.

ஷாரூக்கான் நடிகர், தயாரிப்பாளராக இருந்தாலும் அடிக்கடி சொல்வது, கதை எழுதும் படைப்பாளிக்கு தயாரிப்பாளர்கள் முழு சுதந்திரம் கொடுக்கவேண்டும். அவர்கள் எழுத்தில் தலையிடக்கூடாது.

ஒரு படைப்பாளி தனது கற்பனையின் போக்கில் பயணித்தால்தான் அந்த படைப்பு வீரியமிக்கதாக இருக்கும் நம்புவதோடு, அதற்கான வாய்ப்புகளைக் கொடுக்க தவறுவது இல்லை.

அந்த சிந்தனை ஷாரூக்கின் பலம்.

பாலிவுட்டை பொறுத்தவரை ஆமீர்கான், சல்மான் கான், ஷாரூக்கான் இந்த மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது, ஒருத்தரையொருத்தர் பாராட்டி மகிழ்வதில் வெட்கப்படுவதும் இல்லை. கூச்சப்படுவதும் இல்லை. ஈத் பண்டிகையை கொண்டாடும்விதமாக ஷாரூக்கான் வீட்டில் ஒரு ப்ரஸ்மீட் நடந்தது.

அப்போது ஒரு பத்திரிகையாளர், ’ஆமீர், சல்மான் மாதிரி நீங்களும் ஏன் மல்யுத்தம் வகையறா படம் பண்ணகூடாது’ என்று கேட்டார். உடனே ஷாரூக்கான், ‘ஆமீரும், சல்மானும் அதை ஹேண்டில் பண்ணட்டும். ரொமான்டிக், எமோஷனல் கேரக்டர்கள்தான் என்னோட பலம். அதை மட்டும் நான் பார்த்து கொள்கிறேன்’ என்று பட்டென்று பதில் சொன்னார்.

இந்த தெளிவு, ஷாரூக்கின் பலம்.

இப்பொழுதெல்லாம் கமர்ஷியல் ஹீரோக்கள் படங்களின் பட்ஜெட்டை கேட்டதுமே ஒரு அதிர்ச்சி. 200 கோடி பட்ஜெட் என்றால் 100 கோடி ஹீரோவுக்கே போய்விடுகிறது. 100 கோடி மார்க்கெட் மதிப்புள்ள ஹீரோவை வைத்து படமெடுத்தும் படம் ஓடவில்லை என்றால், தயாரிப்பாளர் நிலைமை அதோகதிதான்.

இதனால்தான் லாபத்தில் பங்கு என்பது தயாரிப்பாளருக்கு பெரும் உதவியாக இருக்கும். இந்த மாதிரி லாபத்தில் பங்கு வாங்கும் நடிகர்கள் சிலர் இருந்தாலும், இந்த ட்ரெண்ட்டை ஆரம்பித்து வைத்தவர்களில் ஷாரூக்கானும் ஒருவர்.

படம் அருமையாக வரவேண்டும். நன்றாக ஓடவேண்டும். தன்னால் லாபம் வரவேண்டும். தனக்கும் பணம் வேண்டும். இந்த சினிமா பிஸினஸ்ஸை சரியாக புரிந்திது வைத்திருக்கிறார்.

இந்த புரிதல் ஷாரூக்கின் பலம்.

இப்படி தன்னை பாஸிட்டிவ் விஷயங்களை மட்டுமே எப்பொழுதும் கூடவே எடுத்து செல்கிறார்.
இந்த குணங்களால்தான் ஷாரூக்கை ’பாலிவுட் பாட்ஷா’ என்று கொண்டாட வைத்திருக்கிறது.

இப்பொழுது ‘பதான்’, ’கிங் ஆஃப் பாலிவுட்’ இவர்தான் என்று உரக்கச் சொல்லியிருக்கிறது.

ஷாரூக்கான் ஒரு சந்திப்பில் தன் முன் இருந்த பெருங்கூட்டத்தைப் பார்த்து. ‘நான் டெல்லியிலிருந்து மும்பைக்கு வந்தபோது, எனக்கு குடும்பம் என்று ஒன்றுமில்லை. எனக்கென்று ஒருவர் கூட இல்லை. இங்கே இருக்கும் உங்கள் அனைவருக்கும் நான் சொல்வது, இப்பொழுது எனக்கு பெரிய குடும்பம் இருக்கிறது. சினிமா இண்டஸ்ட்ரியில் இருக்கும் ஃப்லிம் மேக்கர்கள், முன்னணியில் இருக்கும் பெண்கள், தயாரிப்பாளர்கள், நண்பர்களை பெற்றிருக்கிறேன்’ என்றார்.

எல்லோருடைய குடும்பத்திலும் ஒருவராகவே கொண்டாடப்படுவது என்பது சாதாரணமான விஷயமல்ல. அது ஷாரூக்கானுக்கு மட்டுமே சாத்தியம்.

sharukhkhan #salmankhan #bollywood #deepikapadukone #katrinakaif #ranveersingh #love #srk #amirkhan #kajol #follow #india #likeforlikes #kingofbollywood #bollywoodbadshah @redchillies #pathan #highestcollection #hindifilms #salmankhan #bollywoodsongs

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...