தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த 7-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என பெயர் வைக்கப்பட்டது. இந்த புயல் 9-ந்தேதி மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாமல் கரையை கடந்து சென்ற மாண்டஸ் புயல், தற்போது அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து சோமாலியாவில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் அந்தமானுக்கு தென்கிழக்கு பகுதியிலும் வடக்கு சுமத்ரா கடல் பகுதியில் ஒரு காற்று சுழற்சி உருவாகியது. இது நேற்று காற்றழுத்தமாக வலுவடைந்துள்ளது. இது தொடர்பாக, “கிழக்கு மத்திய கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியை சுற்றி நிலவி மேற்கு-வடமேற்கு திசையில் 9 கி.மீ. வேகத்தில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று வலுவடைந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் 19 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” என இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாரணாசி ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நாளை நிறைவு: ஆளுநர் ரவி, அமித் ஷா பங்கேற்பு
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சி கடந்த நவம்பர் 17-ல் தொடங்கியது. இதனை பிரதமர் மோடி நவம்பர் 19-ல் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட சுமார் 2,500 பேர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நாளை (16-12-2022) நிறைவு பெறுகிறது. நிறைவு விழாவில் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முன்னிலை வகிக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை விருந்தினராக கலந்துகொள்கிறார். இவர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
காசி தமிழ்ச் சங்கமத்தில் கடந்த 3 தினங்களாக தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இதில் இயக்குநர்கள் சீனு ராமசாமி, மோகன்ஜி ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இன்று வாரணாசி வரும் தமிழ்நாடு ஆளுநர் ரவி, மாலையில் இளையராஜா கச்சேரியை கோயிலில் அமர்ந்து ரசிக்க உள்ளார். ஆளுநரின் வருகை காரணமாக இளையராஜாவின் நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு பதிலாக 7.30 க்கு நடைபெறுகிறது.
சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா
சீனாவில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. சீனாவை சேர்ந்த 93 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி செலுத்தியும் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல நகரங்களில் மீண்டும் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் போராட்டம் எதிரொலியாக சீனாவில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன. கொரோனா தடுப்பு மையங்களும் மூடப்பட்டன.
இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால், கொரோனாவை கட்டுப்படுத்த சீனாவில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்து உள்ளது.
டெல்லியில் சிறுமி மீது ஆசிட் வீச்சு – 3 பேர் கைது
டெல்லியில் புதன்கிழமை காலையில் 17 வயது சிறுமி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த சிறுமி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 12ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி தமது வீட்டில் இருந்து பள்ளிக்கு அந்த சிறுமி சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. தென்மேற்கு டெல்லியில் உள்ள துவாரகா மெட்ரோ ரயில் நிலையம் அருகே பைக்கில் வந்த இருவர் அவர் மீது அமிலம் போன்ற பொருளை வீசியுள்ளனர். இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தற்போது சிறுமி ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் காயமடைந்த சிறுமி ஆசிட் வீசியவர்கள் குறித்து தெரிவித்த அடையாளத்தைத் தொடர்ந்து ஆரம்பத்தில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையே, இந்த சம்பவத்தில் தலையிட்ட தேசிய மகளிர் ஆணையம் (NCW) மற்றும் டெல்லி மகளிர் ஆணையம் (DCW), டெல்லி போலீஸ் ஆணையருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளன. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், “இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு ‘கடுமையான தண்டனை’ கிடைக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களை “பொறுக்க முடியாது,” என்று கூறியுள்ளார்.