No menu items!

தீபிகாவின் காவி பிகினி! – மல்லுகட்டும் பாஜகவினர்

தீபிகாவின் காவி பிகினி! – மல்லுகட்டும் பாஜகவினர்

ஒரேயொரு பாடல்தான். சினிமா ரசிகர்களிடையே ஹீட்டையும், அரசியல்வாதிகளிடையே சூட்டையும் கிளப்பியிருக்கிறது;

மத்திய பிரதேசத்தின் பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான நரோத்தம் மிஸ்ரா, ‘’பதான் படத்தில் வருகிற ’பேஷரம் ரங்’ பாடலில் தீபிகா படுகோன் போட்டிருக்கும் காஸ்ட்யூமை கரெக்ட் பண்ணவில்லை என்றால், அந்தப் படம் மத்திய பிரதேசத்தில் ரிலீஸ் ஆவது பற்றி அரசு முடிவு செய்யும்’ என்று கர்ஜித்தார்.

அந்தப் பாடலில் அப்படி என்ன இருக்கிறது?

ஷாரூக்கான், சிக்ஸ் பேக், ஆக்‌ஷன் சமாச்சாரங்களை வைத்து எப்படியாவது ஒரு ஹிட் படத்தை அடுத்த ஆண்டிலாவது கொடுத்துவிட வேண்டுமென களமிறங்கியிருக்கும் படம் ‘பதான்’. இதில் ஷாரூக்குடன் கவர்ச்சி கோதாவில் இறங்கியிருக்கிறார் தீபிகா படுகோன்.

இந்தப்படம் ஜனவரி 25, 2023-ல் வெளியாக இருக்கிறது. இதனால் இப்படத்தை பற்றிய பேச்சைக் கிளப்ப வேண்டும் என்பதற்காக ‘பேஷரம் ரங்’ என்ற பாடலை இணையத்தில் ஏற்றியது ‘பதான்’ படக்குழு.

பாடல் வெளியானதும் பெரும்பாலான ரசிகர்கள் இந்தப் பாடலை நாலைந்து முறை ரீபிட் மோட்டில் பார்த்து ரசித்தனர். அந்தளவிற்கு தீபிகா படுகோன் பிகினியில் கேட் வாக் போனபடி ஹாட் கேக்காக இருந்தார்.

காவி நிற பிகினிதான் பிரச்சினையா?

இந்தப் பாடல் வெளியானபோது சர்ச்சை எதுவும் கிளம்பவில்லை.

ஆனால் இரண்டு நாட்கள் கழித்து மத்திய பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஷ்ரா தீபிகாவின் பிகினி காவி நிறத்திலும், ஷாருக் கான் பச்சை வண்ண ஆடையிலும் இருப்பதை குறிப்பிட்டு, இது சரியில்லை என்று ஸ்டேட்மெண்ட் விட்டதும் ‘பேஷரம் ரங்’ பாடலும், அதில் ஆடிய தீபிகாவின் ஸ்கீரின் ஷாட்டும் வைரலானது.

‘’தீபிகா படுகோன் ‘பேஷரம் ரங்’ பாடலில் அணிந்திருக்கும் ஆடை கண்டிப்புக்குரியது. ஆட்சேபணைக்குரியது. இந்தப் பாடலை எடுத்திருக்கும் விதம் அவர்களது அசிங்கமான மனநிலையைதான் பிரதிபலிக்கிறது. இந்தப் பாடலில் வரும் ஆடைகளும், காட்சிகளும் சரிசெய்யப்பட வேண்டும். இல்லையென்றால் இந்தப் படத்தை மத்திய பிரதேசத்தில் வெளியிடுவது குறித்து முடிவு செய்யப்பட வேண்டியிருக்கும்’ என்று கோபத்தில் மீடியாவில் பேசியிருக்கிறார் அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா.

அதோடு தீபிகாவை நரோத்தம் விட்டுவிடவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்.

2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முகமூடி அணிந்த கும்பலொன்று அத்துமீறி நுழைந்து அங்கு படித்து கொண்டிருக்கும் மாணவர்களை கண்மூடித்தனமாய் தாக்கியது.

இந்த தாக்குதலில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் – ஏபிவிபி – அமைப்பிற்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

’’இந்த தாக்குதல் சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜனவரி 7-ம் தேதி தேதி தீபிகா படுகோன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு சென்றார். காரணம் அவர் ‘துக்டே துக்டே’ குழுவின் ஆதரவாளர்’’ என்றும் தீபிகாவைப் பற்றி நேரடியாகவே கமெண்ட் அடித்திருக்கிறார் அமைச்சர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு ‘துக்டே துக்டே கேங்’ நாட்டைப் பிரிக்க முயற்சித்து வருகிறது என்ற வாதம் பாரதிய ஜனதா கட்சி தலைவர்களால் கூறப்படுகிறது.

சரி, அது என்ன துக்டே துக்டே? துக்டே துக்டே என்றால் சிறு சிறு துண்டுகளாக உடைப்பது. இவர்கள் நாட்டை உடைப்பவர்கள் என்ற அர்த்தத்தில் எதிர் தரப்பினரை துக்டே துக்டே என்று பாஜகவினரும் வலதுசாரி அமைப்பினரும் அழைக்கிறார்கள்.
தீபிகா படுகோன் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு சென்றதால்தான் இப்படி விமர்சிக்கப்படுகிறாரா அல்லது குறி வைக்கப்படுகிறாரா என்று ஒரு பக்கம் சந்தேகத்தை கிளப்புகிறார்கள்.

கவர்ச்சி என்பது சினிமாவில் அதிகரித்து கொண்டேதான் வருகிறது. ஆனால் இப்பாடலில் தீபிகா படுகோன் அணிந்திருக்கும் பிகினியில், சில கோணங்களில் மிக மிக ஆபாசமாக இருக்கிறது. இதை கண்டிப்பதில் என்ன தவறு என்று மறுபக்கம் அமைச்சருக்கு ஆதரவு அதிகரித்து இருக்கிறது.

ஆனால் பிரச்சினை தீபிகா அணிந்த பிகினியில் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இதை விட மோசமான ஆடைகளில் பாலிவுட நடிகைகள் நடித்திருக்கிறார்கள்.

அப்படியென்றால் அந்த பிகினி உடையில் காவி நிறம் உறுத்துகிறதா என்றால் அதுவும் இல்லை. காவி நிற உடை பல படங்களில் வந்திருக்கிறது.
சிக்கலுக்கு காரணம் இஸ்லாமியரான ஷாருக் கான் பச்சை நிற உடையில் காவி நிற உடையில் இருக்கும் தீபிகா படுகோனை காதல் செய்வது.

மத ரீதியான பிரச்சினைகளை கிளப்புவதில் வல்லவர்களான பாஜகவினரும் வலதுசாரிகளும் ஒரு அபத்தமான காரணத்துக்காக பிரச்சினை கிளப்புகிறார்கள் என்று பாலிவுட்டில் மாற்றுக் கருத்துக்களும் வந்திருக்கிறது.

’அருவருப்பாக இருக்கிறது..எத்தனை காலம்தான் இவற்றையெல்லாம் சகித்துக் கொள்வது…கண் பார்வையற்றவர்கள்..’ என்று பிரகாஷ் ராஜ் இந்த சர்ச்சையை எதிர்த்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அனில் கபூரும் மாதுரி தீக்சித்தும் அதீத காதல் செய்யும் தக் தக் பாடலில் மாதுரி காவி நிறத்தில்தான் உடை அணிந்திருப்பார், சமீபத்தில் அக்‌ஷய் குமாரும் காத்ரினா கைய்ஃபும் காதல் செய்யும் கலே லாக் ஜகா பாடலில் காத்ரினா கைய்ஃப் காவி நிற உடைதான் அணிந்திருப்பார். இந்தப் பாடல்களும் கவர்ச்சிகரமாக படமாக்கப்பட்டிருக்கும். அப்போதெல்லாம் வராத பிரச்சினை இப்போது வருவதற்கு காரணம் ஷாருக்கானும் பச்சை நிறுமும் இது தேவையில்லாத சர்ச்சை என்று மாற்றுக் கருத்து வைக்கப்படுகிறது.

யார் இந்த நரோத்தம் மிஸ்ரா?

கடந்த வருடம் திரைப்பட படைப்பாளிகளிடம், ‘’நீங்கள் அவசியமான சில மாற்றங்களை மேற்கொள்ளவில்லை என்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று பொத்தம்பொதுவாக எச்சரித்தவர்தான் நரோத்தம் மிஸ்ரா.

அதற்கு பிறகு ஹிந்திப் படமான ‘ஆதிபுரூஷ்’, இந்து மதத்தை தவறான முறையில் சித்தரித்து இருப்பதால் இப்படத்தை எடுக்கும் படைப்பாளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்’’ என்றார். ‘ஆதிபுரூஷ்’ திரைப்படம் இந்து புராணமான ராமாயணத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

கனடாவாசியாகி இருக்கும் சென்னையைச் சேர்ந்த லீனா மணிமேகலை எடுத்த ‘காளி’ டாக்குமெண்டரியில் ‘காளி பீடி பிடிப்பது போல் வெளியான போஸ்டரை’ பார்த்து கண்டனம் தெரிவித்தார். ட்விட்டரில் வெளியான போஸ்டர் இந்து மத செண்டிமெண்ட்களை காயப்படுத்துவதாக இருக்கிறது என்று ட்விட்டருக்கு கடிதம் எழுத இருக்கிறேன் என்றும் தனது கோபத்தை பதிவு செய்தார்.

‘ஆஷ்ரம்’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட வெப் சிரீஸின் பெயரை மாற்ற வேண்டுமென கடந்த 2021- அக்டோபரில் குரல் கொடுத்தார்.

இப்படி நரோத்தம் மிஸ்ராவுக்கு ஒரு ஃப்ளாஷ் பேக் இருக்கிறது.

அடுத்து பாயும் பாய்காட் பிரச்சினை

நரோத்தம் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்த பின், ‘பதான்’ படக்குழு ரொம்பவே உற்சாகத்தில் இருந்தது.

காரணம் 50 கோடி கொடுத்து ப்ரமோஷன் செய்தாலும் கிடைக்காத பப்ளிசிட்டி ’பதான்’ படத்திற்கு இப்போது எந்த செலவும் இல்லாமல் கிடைத்திருக்கிறது. இந்தியா முழுவதும் ‘பேஷரம் ரங்’ பாடலை மொபைலில் ஓடவிட்டு கொண்டிருக்கிறார்கள். தீபிகாவின் பிகினி போட்டோகளோடு செய்திகள் கிளம்பிய வண்ணம் இருக்கின்றன. இந்த மாதிரியான நெகட்டிவ் பப்ளிசிட்டி மூலை முடுக்கெல்லாம் கூட சட்டென்று போய் சேர்ந்துவிடும் என்பதால் பதான் பட நாயகன் ஷாரூக்கான் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

ஆனால் இப்பொழுது புதிதாக முளைத்திருக்கிறது ‘பதான்’ படத்தை பார்க்காமல் புறக்கணிப்பு செய்ய அழைப்பு விடுக்கும் ‘பாய்காட்’ பஞ்சாயத்து.

அமீர் கான் நடித்த ‘லால் சிங் சத்தா’ படத்தின் தோல்விக்கு இந்த பாய்காட் பிரச்சாரம் முக்கிய காரணம் இருந்தது. சோஷியல் மீடியாவில் எல்லோரும் இதை வைத்து கருத்துகளை வெளியிட, நான்கு ஆண்டுகள் எடுத்தப் படம் நான்கு வாரங்கள் கூட ஓடாமல் கலெக்‌ஷனிலும் படுத்துவிட்டது.

இதைப் பார்த்துதான் ‘பதான்’ டீம் குளிர் காய்ச்சல் வந்தது போல் நடுக்கத்தில் இருக்கிறது.

படம் வெளியாகி நன்றாக இருக்கும் பட்சத்தில் பாய்காட் பிரச்சாரம் பெரிதாக எடுப்படாமல் போகலாம். ஆனால் படம் அந்தளவிற்கு இல்லை என்ற பேச்சு கிளம்பினால் நிச்சயம் யாரும் தியேட்டர்களுக்கு போக மாட்டார்கள்.

இப்படியொரு சூழலில் #BoycottPathaan என்ற ஹேஷ்டேக்கை பிரபலப்படுத்தி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

தீ’பிகா படுகோனுக்கு பாடம் கற்பியுங்கள்’ என #BoycottPathaan ஹாட் டாபிக் ஆகி இருக்கிறது.

போட்டிப்போடும் தீபிகா – ரன்வீர்

’பதான்’ பட விஷயம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

இங்கு இப்பொழுது மனைவி – கணவன் இருவருக்கும் இடையேதான் போட்டியா என்று யோசிக்க வைக்கிறது தீபிகாவும், அவரது கணவர் ரன்வீர் சிங்கும் அவ்வப்போது வெளியிடும் போட்டோக்கள்.

கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் ரன்வீர் சிங் நிர்வாணமாக எடுத்த போட்டோ ஷூட் [nude photoshoot] படங்களை வெளியிட்டு வெலவெலக்க வைத்தார்.

ரன்வீர் சிங் உள்ளாடை கூட வாங்க பணமில்லாமல் கஷ்டப்படுகிறார் என்று அவருக்கு உள்ளாடை தானம் பண்ணும் கலாட்டாகளும் நடந்தேறின.

இப்போது கணவருக்கு சவால்விடும் வகையில் மனைவியும் களத்தில் குதித்திருக்கிறார்.

இப்படி கணவன் மனைவியின் இந்த ’தாராளமயமாக்கல்’ பற்றி பதிவுகளால் இண்டர்நெட்டை பற்ற வைத்திருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...