ஜெயம் ரவியை வைத்து பிரதீப் ரங்கநாதன் இயக்கிய ‘கோமாளி’ படம் வெற்றிப் பெற்றது. அதையடுத்து அவர் இயக்கிய ‘‘லவ் டுடே’, மிகப்பெரும் வெற்றி. இதனால் பிரதீப் ரங்கநாதனுக்கு இப்போது டிமாண்ட் அதிகமாகி இருக்கிறது.
இதனால் பிரதீப்பை வைத்து படமெடுக்கும் முயற்சிகளில் நயன்தாரா காதல் கணவர் விக்னேஷ் சிவன் இறங்கினார். இந்த கூட்டணியை வைத்து கமலின் ராஜ் கமல் இண்டர்நேஷனல் ஒரு படம் தயாரிப்பதாக இருந்தது.
ஆனால் சம்பளம் மற்றும் பட்ஜெட் பஞ்சாயத்தில் பிரதீப் ரங்கநாதனும், விக்னேஷ் சிவனும் விட்டுக்கொடுக்காததால் கமல் அந்தப் படத்தை அப்படியே ட்ராப் செய்துவிட்டார்.
இந்நிலையில், விஜயின் ‘லியோ’ படத்தைத் தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்க முன்வந்தது. இதனால் பட வேலைகள் மளமளவென நடந்தன. கீர்த்தி ஷெட்டியை ஹீரோயினாக கமிட் செய்தார்கள். எஸ். ஜே. சூர்யாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அனிரூத் இசையமைக்க ஒகே சொல்ல, இந்தப் படத்தின் பூஜை கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது.
இந்தப் படத்திற்கு எல்.ஐ.சி என்று பெயர் வைத்தார்கள். லவ் இன்ஸ்சூரன்ஸ் கார்பொரேஷன் என்பதன் சுருக்கமாக எல்.ஐ.சி என்று பெயர் வைத்த தாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் கூறப்பட்டது.
எல்.ஐ.சி என்று பெயர் வைத்ததுமே பிரச்சினை ஆரம்பித்தது. இசையமைப்பாளர் எஸ்.எஸ். குமரன் இந்த டைட்டில் என்னுடையது. இதைப் பயன்படுத்தினால் நீதிமன்றத்திற்குச் செல்வேன் என்று வெளிப்படையாகவே கூறினார்.
ஆனால் இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இந்த டைட்டில் பஞ்சாயத்து அப்படியே காணாமல் போனது.
அப்பாடா என்று நிம்மதி மூச்சு விட்ட விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதனுக்கு மற்றுமொரு புதிய பிரச்சினை இப்போது கிளம்பியிருக்கிறது.
இப்போது பஞ்சாயத்தைக் கூட்டியிருப்பது ஏஜிஎஸ் நிறுவனம். ‘லவ் டுடே’ படத்தை இந்த ஏஜிஎஸ் நிறுவனம்தான் தயாரித்து இருந்தது.
’லவ் டுடே’ எதிர்பார்த்ததை விட பெரும் வெற்றியைப் பெற, பிரதீப் ரங்கநாதனுடன் ஏஜிஎஸ் போட்ட ஒப்பந்தமொன்றை இப்போது தூசித்தட்டி கையிலெடுத்து இருக்கிறதாம். அதாவது ‘லவ் டுடே’ படத்திற்குப் பிறகு பிரதீப் ரங்கநாதனின் அடுத்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனத்திற்குதான் இயக்க வேண்டுமென ஒரு ஒப்பந்தம் போடப்பட்டு இருந்ததாகவும் தெரிகிறது.
ஆனால் ‘லவ் டுடே’ கொடுத்த பாப்புலாரிட்டியை விட்டுவிட மனமில்லாத பிரதீப் ரங்கநாதன். அடுத்தப் படத்தை நானே இயக்கி நடிக்கிறேன் என்று கூறினாராம். ஆனால் பிரதீப் நடிப்பதைவிட வேறு ஹீரோவை வைத்து பிரதீப் இயக்க வேண்டுமென ஏஜிஎஸ் தரப்பில் எதிர்பார்க்கப்பட்டதாம்.
யார் ஹீரோ என்ற பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கையிலேயே, இப்போது எல்.ஐ.சி. படம் பற்றிய அறிவிப்பு வெளியானதால் ஏஜிஎஸ் தரப்பில் கடும் அதிர்ச்சியாம். உடனே ஒப்பந்தபடி பிரதீப் ரங்கநாதன் தங்களுக்குதான் படம் இயக்க வேண்டுமென ஏஜிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம்.
ஆனால் பிரதீப்போ என்னிடம் இப்போது சரியான கதை இல்லை. அதனால் கதை அமைந்த தும் உங்களுக்கு ஒரு படம் இயக்குகிறேன். இந்த இடைவெளியில் எல்.ஐ.சி படத்தில் என்னை நடிக்க விடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறுகிறார்கள்.