அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நெல்லையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் இன்று கலந்துகொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இபிஎஸ், ‘அதிமுகவுக்கு யாரும் உதவவில்லை. அதிமுக தான் பிற கட்சிகளுக்கு உதவுகிறது. அடுத்த கட்சி வளர்வதற்காகவா நாங்கள் கட்சி நடத்துகிறோம்? தற்போது பாஜக எங்கள் கூட்டணியில் தான் உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்போம். எங்களின் கூட்டணி தொடரும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம்” என்று கூறினார்.
ஈரோடு இடைத்தேர்தல்: கருத்துக் கணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் தடை
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும். இந்த தேர்தலில்,வாக்குப்பதிவுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியிடவும், பரப்பவும் தேர்தல் ஆணையம் வரையறைகளை வகுத்துள்ளது. அதன்படி, வரும் 16-ம் தேதி காலை 7 மணி முதல், வாக்குப்பதிவு நாளான 27-ம் தேதி மாலை 7 மணி வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது, வெளியிடுவது, பரப்புவது தடை செய்யப்படுகிறது. விதிமுறைகளை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பொது இடத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி
காந்தி பிறந்த நாளான அக்டோர் 2ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அணிவகுப்பு ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து அந்த அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நவம்பர் ஆறாம் தேதியன்று ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது. ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுப்பதாகக் கூறி அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடினர்.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். தங்களது அணிவகுப்பை நடத்தலாம். உள்ளரங்கு கூட்டமாக பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் அரங்குகளில் இல்லாமல் விளையாட்டு திடல்களை தேர்வு செய்யலாம் என்றும் உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் ஊர்வலம் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்து நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக தொடரப்பட்ட 50 மனுக்களிலும் பேரணிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த புதிதாக அனுமதி கோரினால், அதனைப் பரிசீலித்து அனுமதி வழங்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
என்னை நிர்வாணமாக படம் பிடித்து விற்பனை செய்தார்: கணவர் மீது ராக்கி சாவந்த் புகார்
இந்தியில் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் ராக்கி சாவந்த். தமிழில் ‘என் சகியே’, ‘முத்திரை’ கம்பீரம் உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். கடந்த ஆண்டு ‘அதில் துரானி’ என்பவரை திருமணம் செய்துகொண்டார். சில நாட்களுக்கு முன், அதில் துரானிக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும் கணவர் மீது மும்பை ஒஷிவாரா போலீசில் அளித்த புகாரில், அதில் துரானி தன்னை அடித்ததாக கூறி இருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் கணவர் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார் ராக்கி சாவந்த். இந்த புகார் அடிப்படையில் போலீசார் அதில் துரானி மீது மோசடி, காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே நீதிமன்றத்துக்கு வெளியே மீடியாக்களை சந்தித்த ராக்கி சாவந்த், அதில் துரானி தன்னை நிர்வாணமாக படம் பிடித்தும் வீடியோக்களை எடுத்தும் விற்றுள்ளதாக கூறியுள்ளார்.