No menu items!

கு. அழகிரிசாமி – 100 வயசு

கு. அழகிரிசாமி – 100 வயசு

நூறாண்டு கடந்த தமிழ் சிறுகதை சரித்திரத்தில் தவிர்க்க முடியாத பெயர், கு. அழகிரிசாமி. சிறந்த தமிழ் சிறுகதைகள் என்று ஒரு பட்டியல் போட்டால் கு. அழகிரிசாமியின் ‘குமாரபுரம் ஸ்டேஷன்’, ‘ராஜா வந்திருக்கிறார்’ போன்ற சாகாவரம் பெற்ற அவரது சில சிறுகதைகள் கட்டாயம் இடம்பெறும். சிறுகதை மட்டுமல்லாமல் நாவல், கவிதை, கட்டுரை, நாடகம், கீர்த்தனை, மொழிபெயர்ப்பு, பதிப்பு என பல துறைகளில் சாதனை புரிந்த கு. அழகிரிசாமிக்கு இது நூற்றாண்டு.

திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில்பட்டிக்கும் கயத்தாறுக்கும் இடையில் உள்ள இடைசெவல் என்னும் சிறிய கிராமத்தில் 23.09.1923இல் பிறந்தவர் கு. அழகிரிசாமி. நகை செய்யும் கம்மாளர் குலத்தில் பிறந்த அழகிரிசாமியின் தந்தை பெயர் குருசாமி, தாய் – தாயம்மாள். நகைத் தொழிலுடன் விவசாயமும் செய்து வந்த இவர்களுக்கு அழகிரிசாமிதான் மூத்த மகன். பரம்பரையாக வீட்டில் தெலுங்கு பேசும் குடும்பம் என்றாலும் வெளியே பேசும்போது தமிழில்தான் பேசியுள்ளார் அழகிரிசாமி.

இடைச்செவலில் அழகிரிசாமியின் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்கு அடுத்த வீடுதான், சென்ற ஆண்டு மறைந்த எழுந்தாளர் கி.ரா. எனும் கி. ராஜநாராயணன் வீடு. மேலும், ஒரே வயதுடைய இருவரும் ஐந்தாம் வகுப்பு வரை வகுப்புத் தோழர்களும்கூட. இதனால், இயல்பாகவே விளையாட்டுத் தோழர்களானார்கள். ஐந்தாம் வகுப்புடன் கி.ராஜநாராயணன் பள்ளிப் படிப்பை முடித்துக்கொள்ள, இடைசெவல் கிராமத்துப் பள்ளியிலேயே ஆறாவது வகுப்பை தொடர்ந்தார் அழகிரிசாமி. ஆனால், இடைசெவலில் ஏழாம் வகுப்புக்கு மேல் இல்லாததால் அதற்கு மேல் படிப்பை தொடர முடியவில்லை.

இந்நிலையில், வீட்டில் கழற்றி வைக்கப்பட்டிருந்த வண்டிச் சக்கரத்தின் மேலேறி விளையாடிக் கொண்டிருந்த போது இரண்டுமுறை தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். முதல்முறை நாட்டுவைத்தியர் உதவியால் எளிதாக மீண்டுவந்துவிட்டார். ஆனால், இரண்டாம் முறை விழுந்து அடிபட்டபோது அவரது இடது கையின் இரண்டு விரல்களை மடக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இதன் காரணமாக, ‘இவன் நகை வேலைக்கும் விவசாய வேலைக்கும் சரிப்பட்டு வரமாட்டான்’ என்று முடிவு செய்த பெற்றோர் அழகிரிசாமியை படிக்கவைக்க முடிவு செய்தார்கள். இதனையடுத்து இரு வருடங்களுக்குப் பின்னர் கோவில்பட்டி சென்று 8ஆம் வகுப்பில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார்.

விடுமுறை தினங்களில் மட்டும் இடைச்செவல் வருவார். அப்போது கி. ராஜநாராயணனும் இவரும் இணைந்து காடு கரைகளாக சுற்றுவார்கள்; இடையே விடுபட்ட நாட்களுக்கெல்லாம் சேர்ந்து பேசுவார்கள். கோவில்பட்டி கு. அழகிரிசாமிக்கு இலக்கியத்தை அறிமுகம் செய்தது. அவர் மூலமாக கி.ராஜநாராயணனுக்கும் இலக்கியம் அறிமுகமானது. அக்காலங்களில் அரசியலிலும் அழகிரிசாமிக்கு ஈடுபாடு இருந்தது. ஆனால், அதனை அவர் தொடரவில்லை.

இடைச்செவல் பக்கத்தில் இருந்த எட்டகபட்டி என்ற ஊரைச் சேர்ந்த முத்துசுவாமி என்பவர் மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவராக இருந்தார். முத்துசுவாமிக்கும் இலக்கியத்தில் ஈடுபாடு இருந்தது. அத்துடன் அற்புதமான புத்தகங்களும் அவரிடம் இருந்தது. கு. அழகிரிசாமிக்கும் கி. ராஜநாராயணனுக்கும் இலக்கியத்தில் ஈடுபாடு இருக்கிறது என்று கேள்விப்பட்ட முத்துசாமி அவர்களை தேடி இடைச்செவல் சென்று பார்த்தார். அதன்பின்னர் முத்துசாமி இடைச்செவல் வருவதும் இவர்கள் அவரைப் பார்க்க எட்டகபட்டி போவதும் என இலக்கியத்தில் கரைந்தார்கள். முத்துசாமி நிறைய புத்தகங்களை கி.ரா.வுக்கும் கு.அழகிரிசாமிக்கும் அறிமுகம் செய்தார்.

இலக்கிய வாசிப்பு கி.ராவையும் கு.அழகிரிசாமியையும் எழுதத் தூண்டியது. கு. அழகிரிசாமி சிறு வயதிலேயே எழுத ஆரம்பித்து விட்டார். ‘உறக்கம் கொள்ளுமா?’ என்ற இவரது முதல் சிறுகதை 1942ஆம் ஆண்டு ‘ஆனந்த போதினி’ மாத இதழில் பிரசுரமானது. அப்போது கு. அழகிரிசாமிக்கு 19 வயது. (ஆனால், கி. ராஜநாராயணன் 25 வயதுக்கு மேல்தான் எழுத ஆரம்பித்தார்.)

அன்றைய தமிழ் இலக்கிய உலகத்துக்கு இவர்களின் கரிசல் களம் புதியது; மக்கள் புதியவர்கள்; அவர்களுடைய பழக்கவழக்கங்கள், பேச்சு வழக்கு புதியது. இப்படி பல்வேறு புதியதுகளுடன் எழுத வந்த இருவரையும் அன்றைய தமிழ் இலக்கிய உலகம், ‘எழுது, எழுது, எழுது’ என்று உற்சாகப்படுத்தியது. அக்காலத்தில் இவர்களின் இலக்கிய நண்பர்களான தொ.மு.சி. ரகுநாதன், சுந்தர ராமசாமி, தி.க.சி போன்ற வெளியூர்காரர்கள் இவர்கள் சொல்லும் விஷயங்களை எல்லாம் ஆச்சர்யமாக கேட்டார்கள். ‘எழுதுங்கய்யா, இதெல்லாம் தான் எழுதப்படவேண்டும்’ என்று ஊக்கப்படுத்தினார்கள்.

சிறுகதைகள் எழுதியதுடன் மொழிபெயர்ப்புகளையும் செய்ய தொடங்கினார், அழகிரிசாமி. ரஷ்ய எழுத்தாளர் கார்க்கியின் எழுத்து அவரை மிகவும் கவர்ந்தது. கார்க்கியின் நூலை முதன் முதலில் தமிழாக்கம் செய்தவர் இவர்தான்.

இதனிடையே, படித்தவர்கள் கிடைக்காத காலம் அது என்பதால், எஸ்.எஸ்.எல்.சி முடித்ததும், அரசுப் பணியில் சேர அழகிரிசாமி தேர்வு செய்யப்பட்டார். முதல் வேலை: காலாப்பட்டி என்ற ஊரில் ஆசிரியர் பணி. பின்னர் தேர்வு எழுதி எழுத்தர் பணிக்கு தேர்வானார். சுரண்டை சார்பதிவாளர் அலுவலகத்தில், முப்பத்தைந்து ரூபாய் சம்பளத்தில் நியமனம் செய்யப்பட்டார். ஆனால், விரைவிலேயே அந்த வேலையில் அவருக்கு அலுப்பு ஏற்பட்டுவிட்டது. நாள்தோறும் பத்திரங்களைப் பதிவது அவருக்குப் பிடிக்கவில்லை. அந்த எழுத்தர் உத்தியோகத்தில் மனநிறைவு ஏற்படவில்லை. அதனால் சென்னைக்கு வந்து, முதல் கதையை வெளியிட்ட ‘ஆனந்த போதினி’ பத்திரிகை அலுவலகத்தில் சேர்ந்தார். ‘ஆனந்த போதினி’, ‘பிரசண்ட விகடன்’ ஆசிரியராக இருந்த மூத்த எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் அழகிரிசாமியின் எழுத்தாற்றலைப் புரிந்து கொண்டு, அவருக்கு உதவி ஆசிரியர் பணியைத் தந்தார். அக்காலத்தில் ‘பிரசண்ட விகடனி’ல் வெளிவந்த கு. அழகிரிசாமி கதைகளை வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன், தொ.மு.சி. ரகுநாதன் உட்பட அவரது சமகால எழுத்தாளர்கள் அனைவரும் பாராட்டினார்கள். அதேநேரம், எழுத்து வழியாக வந்த வருமானம் அன்றாட செலவுகளுக்கே போதுமானதாக இல்லை. எழுத்தர் பணியில் வாங்கிய 35 ரூபாய் சம்பளத்தை சம்பாதிக்க அன்றைய முன்னணி எழுத்தாளர்களாலேயே முடியாத நிலை. இவரோ இளம் எழுத்தாளர். எனவே, மீண்டும் எழுத்தர் பணிக்கே திரும்பினார். இம்முறை தென்காசி சார் பதிவாளர் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட்டார். மீண்டும் அந்த பணியில் அலுப்பும் பத்திரிகை பணியில் ஆர்வமும் உண்டானது. எனவே, மீண்டும் அரசு வேலையை விட்டுவிட்டு ‘தமிழ்மணி’ என்ற அரசியல் வார இதழ் பணியில் சேர்ந்தார், அழகிரிசாமி.

‘தமிழ்மணி’ இதழில் சில காலம்தான் பணியாற்றினார். அதன்பிறகு வை. கோவிந்தன் வெளியிட்ட ‘சக்தி’ மாத இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். அப்போது அதன் ஆசிரியராக இருந்தவர் எழுத்தாளர் தி.ஜ. ரங்கநாதன். கு. அழகிரிசாமியின் முற்போக்குச் சிந்தனையையும், ஆற்றலையும் கண்டுகொண்ட வை.கோவிந்தன், அழகிரிசாமிக்கு சக்தி இதழிலும் பதிப்பகத்திலும் இடமளித்து, எழுதுவதற்கு வாய்ப்பளித்தார். ‘சக்தி’ இதழுக்கு பிறகு 1952இல் மலேசியா சென்ற அழகிரிசாமி ‘தமிழ் நேசன்’ பத்திரிகையின் ஆசிரியராக 1953 முதல் 1957 வரை பணியாற்றினார்.

மலேசியா பயணம் கு. அழகிரிசாமி வாழ்வில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அங்கேதான் தன் காதலியும் மனைவியுமான சீதாலக்ஷ்மியை சந்தித்தார். தமிழ்நாட்டிலிருந்து மலேயாவில் குடியேறி பாரம்பரிய இசைப் பின்னணியுடன் வாழ்ந்து கொண்டிருந்த பிராமணப் பெண் சீதாலக்ஷ்மி. 1950களிலேயே சொந்தமாகக் ’கார்’ வைத்திருந்த, உயர் மத்தியதர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவர். சீதாலக்ஷ்மியுடன் பிறந்தவர்கள் ஏழு பேர். அதில் ஒருவர் மட்டும் ஆண்.

சீதாலக்ஷ்மி குடும்பத்தார் சேர்ந்து அரங்கேற்றக் கருதிய எட்டயபுரம் கடிகை நமசிவாயப் புலவர் இயற்றிய ‘வல்லீ பரதம்’ நாடகத்திற்குப் பாடல்கள் மற்றும் வசனத்தில் உதவுவதற்காக சென்றபோது சீதாலஷ்மியை கு. அழகிரிசாமி சந்தித்தார். அதன்முன்னர் மலேசிய வானொலியில் முக்கூடல் பள்ளு இசை நாடகத்தில் பாடல்களை குழுவினருடன் இணைந்து சீதாலட்சுமி பாடியிருந்தார். இயல்பில் சங்கோஜம் கொண்டவராக இருந்த கு.அழகிரிசாமியை அவருக்கு பிடித்துப் போயிற்று. அழகிரிசாமிக்கும் அவரை பிடித்திருந்தது.

மிகவும் நளினமானவரான கு. அழகிரிசாமி, சிறு வயதில் விபத்து காரணமாக இடது கை விரல்களில் ஏற்பட்ட காயத்தை, யாரும் கண்டுகொள்ளாத வண்ணம் பார்த்து வந்தார். சீதாலஷ்மி கண்ணிலும் இது படாமல் பார்த்துக்கொண்டார். அது தம் கல்யாணத்திற்குத் தடையாகிவிடுமோ என அவர் பயந்திருக்க வேண்டும். சீதாலஷ்மியின் தோழி ஒருவர் இதைப் பார்த்து அவரிடம் சொல்லிய பின்னர்தான் அவருக்கே தெரிந்தது. ஆனால், அதை அவர் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சீதாலஷ்மியின் பெற்றோர் இதை தெரிந்துகொண்டு சுட்டிக்காட்டினார்கள். “ஒருவேளை கல்யாணமான பின், ஏதேனும் ஒரு விபத்தில் சிக்கி இதுபோல் அவருக்கு நேர்ந்திருந்தால், நாம் என்ன செய்திருக்கப் போகிறோம்? அப்படி நடந்ததாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். இதனால் எல்லாம், என் காதலை, நீங்கள் மழுங்கடித்துவிட முடியாது” என அவர்களுக்கு பதில் சொன்னார் சீதாலஷ்மி.

சீதாலக்ஷ்மியின் வீட்டார் எதிர்ப்பை மீறி, மலேசியா பென்டாங் சிவ சுப்பிரமணியர் கோவிலில் வைத்து சீதாலக்ஷ்மி – கு. அழகிரிசாமி திருமணம் 19.01.1955 அன்று நடைபெற்றது. சட்டப்படி இந்த திருமணம் பதிவும் செய்யப்பட்ட பின்னர் வேறு வழியின்றி அந்தத் திருமணத்தை சீதாலஷ்மியின் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டார்கள். கு. அழகிரிசாமி – சீதாலஷ்மி காதலுக்கு இராமச்சந்திரன், ராதா, சாரங்கராஜன், பாரதி என்ற நான்கு குழந்தைகள் பரிசாக கிடைத்தார்கள்.

இதனிடையே ‘தமிழ்நேசன்’ நாளிதழ் அலுவலகத்திற்கு வெளியே அரசியல்வாதிகள் சிலரின் ஒத்துழையாமை அழகிரிசாமிக்கு பணியில் சோர்வை ஏற்படுத்தின. மேலும், மலேசியாவில் அவருடைய இலக்கிய வாழ்க்கைக்கு உற்ற நண்பர்கள் அமையாததாலும் 1957இல் மலேசியாவை விட்டு தமிழ்நாட்டுக்கு திரும்பினார். அதன்பின்னர் 1960 வரை காந்தி நூல் வெளியீட்டுக் கழகத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். பிறகு ‘நவசக்தி’ நாளிதழில் சேர்ந்து அங்கு 1965 வரை இருந்தார். பின்னர் ‘நவசக்தி’ பணியிலிருந்தும் விலகி ஐந்தாண்டுகள் சுதந்திர எழுத்தாளராக இருந்தார். இறுதியாக ‘சோவியத் நாடு’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். ஆனால், உடல்நிலை காரணமாக அவரால் முழுமையாக அந்தப் பணியில் தொடர முடியவில்லை. இந்நிலையில், தனது 47ஆவது வயதில் 05.07.1970 அன்று கு.அழகிரிசாமி காலமானார்.

இருபது வயதில் எழுதத் தொடங்கிய அழகிரிசாமி 47 வயது வரையான 27 ஆண்டுகளில் நிறைய எழுதியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நான்கு நாவல்கள், எட்டுக் கட்டுரைத் தொகுதிகள், சில சிறுவர் நூல்கள், குறிப்பிடத்தக்க சில நாடகங்கள், பத்துக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் தந்துள்ளதுடன், கம்பராமாயணத்தில் ஐந்து காண்டங்களையும் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்தையும் சிறப்பாகப் பதிப்பித்துள்ளார். இந்த இரு பதிப்புகளும் அழகிரிசாமியின் ஆராய்ச்சித் திறனையும் மொழியாக்க ஆற்றலையும் வெளிப்படுத்தக்கூடியன. ‘நவசக்தி’ இதழில் இருந்த காலத்தில் எழுதிய ‘கவிச்சக்ரவர்த்தி’ என்ற வரலாற்று நாடகம் அவருக்குப் பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது.

அக்கால வழக்கப்படி நண்பர்களுக்கு கடிதம் எழுதுவதை தவறவிடாத ஒரு கடமையாகக் கொண்டிருந்தார், அழகிரிசாமி. அவை அனைத்தும் நண்பர்கள் இடையேயான கடிதங்கள் என்பதுடன் இலக்கியம் பற்றிய முக்கிய விசாரணைகளாகவும் இருந்தன. அவ்வாறு அவர் எழுதிய கடிதங்களை கி.ராஜநாராயணன் தொகுத்து, ‘கு.அழகிரிசாமி கடிதங்கள்’ என்ற நூலாக கொண்டு வந்தார்.

வேறு பல திறமைகளும் கு. அழகிரிசாமிக்கு இருந்தன. மிக மிக அழகாகக் கோலம் போடுவார். சமையலிலும் தேர்ந்த பயிற்சியும் ருசியும் அவருக்கு இருந்தது. இசையையும் பயின்றதுடன் அதில் ஆழ்ந்த ஞானமும் கொண்டிருந்தார்.

புகழ்பெற்ற நாதஸ்வர கலைஞர் காருகுறிச்சி அருணாசலம் மனைவி ஊர் இடைச்செவல்தான். இதனால் காருகுறிச்சியில் இருந்து அடிக்கடி ரயிலில் காருகுறிச்சி அருணாசலம் இடைச்செவல் வருவார். கி. ராஜநாராயணன் வீட்டில் ஒரு நந்தவனம் வைத்திருந்தார்கள். அந்த நந்தவனத்திலிருந்து வரும் வருமானத்தை கொண்டுதான் காருகுறிச்சி அருணாச்சலத்தின் மாமனார் குடும்பம் வாழ்ந்து வந்தது. நந்தவனத்தில் ஒரு செட் இருந்தது. காருகுறிச்சி அருணாசலம் மாமனார் வீட்டுக்கு வந்தால் அங்கேதான் உட்காந்திருப்பார். இதனால் சிறிய வயதிலேயே கி.ராவுக்கும் கு.அழகிரிசாமிக்கும் காருகுறிச்சி அருணாச்சலத்தோடு தொடர்பு ஏற்பட்டது. பிரமாதமாக பாடவும் கூடியவர் காருகுறிச்சி அருணாசலம். எனவே, இவர்கள் இணைந்தால் கச்சேரிக்கு குறைவு இருக்காது. காருகுறிச்சியாரை பார்க்க விளாத்திக்குளம் சுவாமிகள் இடைச்செவல் வருவார். இப்படி இசை சார்ந்தவர்களோடு ஏற்பட்ட பழக்கம், அவர்கள் பாடி கேட்பது, கிராம போன் ரிக்கார்டுகள் என்று இசை மீதான ஆர்வம் இயல்பாகவே கி.ராஜநாராயணனுக்கும் கு. அழகிரிசாமிக்கும் இலக்கியத்தோடு சேர்ந்து வளர்ந்தது. காருகுறிச்சி அருணாச்சலத்தின் சட்டகர் புதுமலை பொன்னுச்சாமிபிள்ளையை குடும்பத்தோடு இடைச்செவல் அழைத்து வந்து ஒரு பாடகர் வீட்டில் வைத்து கி.ராஜநாராயணனும் கு.அழகிரிசாமியும் அவரிடம் முறைப்படி சங்கீதம் படித்துள்ளார்கள்.

1950இல் தொடங்கி தம் கடைசி மூச்சுவரை இருபது வருஷங்கள் தொடர்ந்து கு. அழகிரிசாமி டைரி எழுதி வந்துள்ளார். அந்த டைரிகளை அவரது மகனும் தற்போது சென்னையில் வசிப்பவருமான சாரங்கன் பத்திரமாக பாதுகாத்து வருகிறார். அதில் 29.03.1951 (வியாழக்கிழமை) அன்று எழுதிய குறிப்பு இப்படி இருக்கிறது: “இடைசெவலில்தான் இருக்கிறேன். பஞ்சத்தினால் ஜனங்கள் எலும்புக்கூடாகி விட்டார்கள். ஏதேனும் ஒரு மாறுதல் இரண்டு மூன்று வாரங்களுக்குள் ஏற்படாவிட்டால், அனேக உயிர்கள் செத்துப் போய்விடும். மனித உயிர் இவ்வளவு அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில் அனாதையாக விடப்பட்டிருக்கிறது.”

கு. அழகிரிசாமியின் கதைகளைப் போலவே அவரது டைரிக் குறிப்புகளும் அக்காலகட்டத்தை நம் கண்முன் நிறுத்தும் ஆவணங்களாக உள்ளன. இந்த டைரிக் குறிப்புகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவருவது இந்த நூற்றாண்டில் கு. அழகிரிசாமிக்கு தமிழ் சமூகம் செய்யும் சரியான மரியாதையாக இருக்கும்.

கு. அழகிரிசாமி பற்றி அவரது புதல்வர் சாரங்கராஜன் தயாரித்துள்ள ஆவணப் படம் பார்க்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...