தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அவ்வையார் என்றதும் நம் நினைவுக்கு வருபவர் கே. பி.சுந்தராம்பாள்.
நாடக உலகிலும் இசை உலகிலும் கொடி கட்டிப் பறந்த காதல் ஜோடி கிட்டப்பா – சுந்தராம்பாள். இதில் ஜோடிப் புறாவான கிட்டப்பாவின் மறைவுக்குப் பின் வெண்ணிற ஆடைக்கு மாறிய கே.பி.சுந்தராம்பாளைப் பற்றி பார்ப்போம்.
40 ஆயிரம் ரூபாய்க்குள் ஒரு படத்தையே தயாரிக்க முடியும் என்றிருந்த காலத்தில், ஒரு படத்தில் நடிக்க 1 லட்சம் ரூபாயை சம்பளமாக வாங்கிய நடிகை கே.பி.சுந்தராம்பாள். நந்தனார் பட்த்தில் நடிப்பதற்காக அவருக்கு இந்த தொகை சம்பளமாக தரப்பட்டது. அத்துடன் தமிழ் திரை வரலாற்றில் ஆண் வேடத்தில் நடித்த முதல் பெண்மணியும் இவர்தான்.
கே.பி.சுந்தராம்பாள் பிறந்தது கொடுமுடியில் உள்ள ஒரு குடிசையில். சுந்தராம்பாள் சிறுமியாக இருந்தபோது, அவரும் அம்மா பாலாம்பாளும் வறுமையில் வாடி, பிழைப்பு தேடி, கரூருக்கு சென்றனர். தெருவில் 5 வயது சிறுமி பாடிக்கொண்டு செல்வதைப் பார்த்த இசைப் பிரியரான காவல்துறை அதிகாரி கிருஷ்ணசாமி, கே.பி.சுந்தராம்பாளை அழைத்துச் சென்று அன்றைய புகழ்பெற்ற நடிகரான வேலு நாயரின் நாடகக் குழுவில் சேர்த்தார்.
அங்கிருந்து கேபிஎஸ் தமிழகத்தில் மட்டுமல்ல கடல் கடந்து இலங்கையில் தன் 15 வயதிலேயே புகழில் கொடியை பறக்க விட்டார். அன்றைய புகழ்பெற்ற ராஜபார்ட் நடிகர் கிட்டப்பாவும், சுந்தராம்பாளும் முதல் முறையாக சேர்ந்து நடித்த நாடகம் ‘வள்ளி திருமணம்’. அவர்கள் இருவரின் ஜோடி பொருத்தம் ரசிகர்களை கவர்ந்தது.
மேடையில் கிட்டப்பாவும், சுந்தராம்பாளும் போட்டி போட்டுக்கொண்டு பாடினால், மக்கள் விடிய விடிய ஒன்ஸ்மோர் கேட்டு ரசித்துக் கிடந்தார்கள்.
ஸ்ரீ வள்ளி, நந்தனார், கோவலன், சத்தியவான் சாவித்திரி, பவளக்கொடி, சாரங்கதாரா, பாமா விஜயம் போன்ற அவர்களின் நாடகங்கள் வசூலை அள்ளிக் குவித்தன.
ஒரு முறை நாடகத்தில் சுந்தராம்பாள் ஆண் வேடத்திலும், கிட்டப்பா பெண் வேடத்திலும் நடித்தார்கள். அதுவும் சூப்பர் ஹிட் ஆனது.
கிட்டப்பாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தையும் இருந்த்தால், கிட்டப்பாவும் சுந்தரம்பாளும் ஒரு வருடம் தங்கள் காதலை ரகசியமாக பாதுகாத்து வந்தார்கள். 1929-ல் மாயூரத்தில் சுந்தராம்பாளுக்கு தாலி கட்டி கிட்டப்பா மண்ந்தார். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தன ஆனால் இரண்டும் சிறுவயதிலேயே இறந்தன.
அவர்களின் காதலும், சந்தோஷமும் வெறும் ஆறு வருடங்கள்தான் நீடித்த்து. பேரும் புகழும் பெருகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் கிட்டப்பா மதுவுக்கு அடிமையான காரணத்தால் 1934-ல் மரணமடைந்தார்.
அவர் இறந்த்தும், சுந்தராம்பாள் இடிந்து போனார். அதன் பிறகு அவர் நாடகங்களில் பிற நடிகர்களுடன் ஜோடியாக நடிப்பதை நிறுத்திக் கொண்டார் .ஒரு கட்டத்தில் வெள்ளை ஆடை அணிந்து நடிப்புலகை விட்டு ஒதுங்கினார்.
கலையுலகை விட்டு கே.பி.எஸ். ஒதுங்கினாலும் மக்களும் கலையுலகும் அவரை விடவில்லை. காந்திஜியும், காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியும் கேட்டுக் கொண்டதால் சுதந்திரப் போராட்ட காலத்தில் அரசியல் மேடைகளில் தேச பக்தி பாடல்களை தன் கணீர் குரலால் பாடி மக்களை எழுச்சிக் கொள்ள வைத்தார்.
சினிமாவில் நடிக்க மறுத்து வந்தகே பி எஸ், ‘ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் தந்தால் படத்தில் நடிக்கிறேன்’ என்றார். தன்னை யாரும் அழைக்க மாட்டார் என்று நினைத்து அவர் அப்படி சொன்னார். அப்போதும் அவரை விடவில்லை. அவர் கேட்ட தொகையை கொடுத்தனர்.. அதனால் வெறும் 40, ஆயிரத்தில் தயாரிக்க வேண்டிய நந்தனார் பட்த்தை 3 லட்சம் ரூபாயில் தயாரித்தனர். 1935-ல் வெளிவந்த அப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. 1969ல் சிறந்த பாடகியாக ஜனாதிபதி விருது தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு தமிழ்நாடு அரசும் அவருக்கு சிறந்த பாடகி விருது தந்து கெளரவித்து.