No menu items!

திமுக எம்.பி.க்கள் ராஜினாமாவா? – மிஸ் ரகசியா

திமுக எம்.பி.க்கள் ராஜினாமாவா? – மிஸ் ரகசியா

“வாரத்துல சண்டே ஒரு நாள்தான் லீவ் கிடைக்குது. ஆனா இந்த வாரம் சண்டே லீவும் கட். ஒரு பக்கம் அதிமுக மாநாடு, இன்னொரு பக்கம் திமுக உண்ணாவிரதப் போராட்டம்னு டபுள் டியூட்டி பார்க்க வேண்டியிருக்கு” என்று அலுத்துக்கொண்டே ஆபீசுக்குள் வந்தாள் ரகசியா.

“கவலைப்படாத ரகசியா. ஞாயிற்றுக்கிழமை வேலை பார்க்கறதுக்காக அடுத்த வாரம் என்னைக்காவது ஆஃப் தர்றோம்” என்றதும் ரகசியாவின் முகத்தில் சோகம் மறைந்து புன்னகை பிறந்தது. அதே வேகத்தில் அதிமுக மாநாடு பற்றிய செய்திகளை கொட்டத் தொடங்கினாள்..

“தமிழ்நாட்டுல திமுகவுக்கு மாற்று அதிமுகதான்னு நிரூபிக்க இந்த மாநாட்டைத்தான் மலைபோல நம்பியிருக்கார் எடப்பாடி. அதுக்காக மாநாட்டுக்கு தொண்டர்களை கூட்டிட்டு வர்றதைப் பத்தி தினமும் மாவட்ட செயலாளர்களை போன்ல கூப்டு பேசிட்டு இருக்கார். ஒவ்வொரு டீடெய்லையும் கேக்குறார்”

“அப்போ மாநாடு சூப்பர் சக்சஸ் ஆகிடுமா? இவ்வளவு தீவிரமா கவனிக்கிறாரே?”

”இல்ல, அதுல ஒரு டென்ஷன் இருக்கு. முக்குலத்தோர் பிரிவைச் சேர்ந்தவங்க அந்த மாநாட்டுல கலந்துக்காம பார்த்துக்கறதுல ஓபிஎஸ் குறியா இருக்கார். இதுதொடர்பா முக்குலத்தோர் சங்கங்களை சேர்ந்தவங்ககிட்ட ஓபிஎஸ் தொடர்ந்து பேசிட்டு வர்றார்.”

”ஓபிஎஸ்க்கு இன்னும் அவ்வளவு செல்வாக்கு இருக்கா?”

“இருக்கு. இன்னும் அந்தப் பகுதிகள்ல நம்ம ஆளுனு ஓபிஎஸ்ஸை பார்க்கிறாங்க. ஓபிஎஸ் சொன்னதைக் கேட்டு சில அமைப்புகள் மாநாட்டுக்கு எதிரா பேசியிருக்காங்க. இதுல எடப்பாடி கொஞ்சம் அப்செட். ‘என்ன இப்படிலாம் நியூஸ் வருது’னு செல்லூர் ராஜூ கிட்ட எடப்பாடி பேச, ‘அதெல்லாம் லெட்டர் பேட் அமைப்புகள். அவங்கெல்லாம் ஓபிஎஸ், டிடிவி. தினகரனோட ஆதரவாளர்கள். முக்குலத்தோரின் ரிஜினல் சங்கங்கள் ஆதரவு நமக்குதான். அவங்க கண்டிப்பா மாநாட்டுக்கு வருவாங்க. நானும் ராஜன் செல்லப்பாவும் பாத்துக்கறோம். நீங்க கவலைப்பாடம இருங்க’ன்னு செல்லூர் ராஜூ சொல்லி இருக்கார்.”

“எடப்பாடியை டென்ஷன்படுத்தற மாதிரி அதே நாள்லயே நீட் விஷயத்தில் ஆளுநர் மற்றும் மத்திய பாஜக அரசைக் கண்டிச்சு திமுகவும் போராட்டத்தை அறிவிச்சிருக்கே?”

“முதல்ல இதை சின்ன லெவல்ல நடத்தத்தான் திமுக தலைமை நினைச்சிருந்தது. இளைஞர் அணி, மாணவரணி, மருத்துவ அணியினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவாங்கன்னுதான் முதல்ல பிறகு பாஜகவுக்கு எதிரான பெரிய அஸ்திரமா இந்த உண்ணாவிரதத்தை மாத்த திமுக தலைமை திட்டமிட்டுச்சு. அதனால எல்லா மாவட்ட செயலாளர்களும் இந்த உண்ணாவிரதத்துல கலந்துக்கணும்னு கட்டளை போட்டிருக்கு திமுக தலைமை. அதோட அறிவாலயத்துல நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, இந்த போராட்டத்தை எப்படி வெற்றிகரமா நடத்தறதுன்னு ஆலோசனை நடத்தி இருக்காங்க.”

”திமுக எம்.பி.க்கள் அத்தனை பேரும் ராஜினாமா செய்யப் போறதாவும் செய்திகள் வருதே?”

“ஆமா நீட் விஷயத்துல திமுக இப்ப தீவிரமா இருக்கு. ஒரு மாணவனும் அவங்க அப்பாவும் தற்கொலை பண்ணிக்கிட்டதுல முதல்வர் அப்செட். நீட்டை நீக்குவோம்னு வாக்குறுதி கொடுத்தாங்க. ஆனா திமுகவால நீக்க முடியல, டிராமா பண்றாங்கனு எதிர்க் கட்சிகள் பிரச்சாரம் பண்றாங்க. இந்த மாதிரி பிரச்சாரம் நாடாளுமன்றத் தேர்தல்ல பாதிப்பைக் கொடுக்கும்னு திமுக தலைமை நினைக்கிறதாம். உண்மையிலேயே நீட் தேர்வை எதிர்க்கிறோம்கிறதை காட்டுறதுக்காக பெருசா எதாவது பண்ணனும்னு நினைக்கிறாங்க. அதுல ஒண்ணுதான் எம்.பி.க்கள் ராஜினாமா பண்ற யோசனை”

”அப்போ திமுக எம்.பி.க்கள் ராஜினாமா பண்ணிடுவாங்களா?”

”இல்லை இன்னும் முடிவெடுக்கல. இந்த முடிவுக்கு சில எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க. தேர்தலுக்கு இன்னும் எட்டு மாசம் இருக்கு. அவசரப்பட்டு ராஜினாமா வேண்டாம்னு சொல்லியிருக்காங்க. ராஜினாமா பண்றதுனால எந்த லாபமும் இல்லை. மக்கள் பெருசா எடுத்துக்க மாட்டாங்கனு சொல்லியிருக்காங்க. ஆனா இது மாதிரி ஏதாவது தடாலடியா ஏதாவது செஞ்சாதான் மக்கள் நம்மளை நம்புவாங்கனு உதயநிதி சொல்லியிருக்கிறார். இப்போதைக்கு ராஜினாமா திட்டம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. தள்ளி வைப்புதான் கிடப்புல போடல”

”அதான் இன்னைக்கு உதயநிதி ப்ரஸ்மீட்ல டென்ஷனா பேசுனாரா? ஜெயலலிதா சேலை விவகாரம் வேற இப்ப பெருசு பண்ணிக்கிட்டு இருக்காங்களே?”

“ஆமாம். இதுக்கும் காரணம் இருக்கு. குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தால பெண்களோட வாக்கு முழுசா திமுக பக்கம் சாஞ்சிடுமோன்னு பாஜக கவலைப்படுது. அதைத் தடுக்கத்தான் ஜெயலலிதா விஷயத்தை திரும்பவும் கிளப்பி இருக்காங்கனு திமுகவுல பேச்சு இருக்கு. ஸ்டாலினும் இதை புரிந்து வைத்திருக்கிறார். 1000 ரூபாய் திட்டத்தை இன்னும் விரிவுபடுத்த அவர் திட்டமிட்டு இருக்கார். இந்த திட்டம் வெற்றிகரமா செயல்படுத்தப்பட்டா, பெண்களோட வாக்குகளை ஈசியா வாங்கிடலாம்னு அவர் கணக்கு போடறார்.”

“செந்தில் பாலாஜி குற்றத்தை ஒத்துக்கிட்டார். அவர் அப்ரூவரா மாறப் போறார்னு ஒரு செய்தி உலவிட்டு இருக்கே?”

“அது உணமையில்லை. அமலாக்கத் துறைதான் இந்த செய்திகளை பரப்புதுன்னு சொல்றாங்க. ஆனா சில திமுக அமைச்சர்கள் இந்த செய்தி உண்மையா பொய்யான்னு தெரியாம குழம்பிட்டு இருக்காங்க.”

”அவர் தம்பி அஷோக்கை பிடிச்சிட்டாங்கனும் ஒரு செய்தி வந்தது. அமலாக்கத் துறை மறுத்திருக்கு. என்ன குழப்பம்?”

“அஷோக்கை கிட்டத்தட்ட அமலாக்கத் துறை பிடிக்கப் போய்ட்டாங்களாம். கடைசி செகண்ட்ல அவர் எஸ்கேப் ஆயிட்டார்னு சொல்றாங்க. அவருக்கு காவல் துறையிலிருந்து உதவி போகுதுனு டெல்லி நினைக்குது. போலீஸ் உதவி இல்லாம இத்தனை நாள் தப்பி முடியாதுனு டெல்லி மேலிடத்துக்கு ரிப்போர்ட் கொடுத்திருக்காங்க”

“பிரதமர் பேச்சை அண்ணாமலை கேட்கலைன்னு ஒரு புது புகாரை பாஜகல இருக்கற அவரோட எதிர்ப்பாளர்கள் டெல்லிக்கு தட்டி விட்டிருக்கறதா கேள்விப்பட்டேனே”

“அதுவா?.. சுதந்திர தினத்தை முன்னிட்டு எல்லாரும் வீட்ல தேசியக் கொடியை ஏத்தணும்னு பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார். பிரதமரோட வேண்டுகோளை ஏத்து பலரும் வீட்ல கொடி ஏத்தினாங்க. ஆனா கரூர் மாவட்டத்துல இருக்கற அண்ணாமலையோட வீட்ல கொடி ஏத்தலையாம். அதனால பிரதமர் சொன்னதை அண்ணாமலையே கேட்கலைன்னு ஒரு புகாரை பாஜகல இருக்கற அவரோட எதிர்ப்பாளர்கள் டெல்லிக்கு தட்டி விட்டிருக்காங்க.”

“இதுக்கு அண்ணாமலை ஆதரவாளர்கள் பதில் என்ன?”

“பிரதமர் கொடியேத்தச் சொன்ன நாள்ல அண்ணாமலை வீட்லயே இல்லை. நடைப்பயணத்துல இருந்தார். அன்னைக்கு நடைப் பயணம் தொடங்கறதுக்கு முன்ன கொடி ஏத்தினார். அவரோட உறவினர்கள் கொடி ஏத்தாததுக்கெல்லாம் அண்ணாமலையை பொறுப்பாக்க முடியாதுன்னு அவங்க தரப்புல சொல்லிட்டு இருக்காங்க”

“அண்ணாமலைக்கு எதிர்க் கட்சி ஆளுங்களைவிட உட்கட்சி ஆளுங்களை சமாளிக்கிறதுதான் பெரிய வேலையா இருக்கும்போல!”

”ஆமாம், அதைவிட அவர் டென்ஷன் ஆகுறது கவர்னர் பண்ற காரியங்களுக்குதான். சமீபத்துல நீட் பத்தி ஆளுநர் நோ, நேவர்னு பேசுனதை அண்ணாமலை ரசிக்கலைனு அவங்க பக்கத்து ஆளுங்க சொல்றாங்க. கவர்னரை எப்படியாவது ஆஃப் பண்ணச்சொல்லி டெல்லிக்கு பிரஷர் கொடுத்துட்டு இருக்காங்க.”

”திருமாவளவனுக்கு விஜய் வாழ்த்து சொல்லியிருக்கிறாரே?”

“ஆமாம். விஜய் பிறந்த நாளுக்கு திருமாவளவன் வாழ்த்து சொல்றதுக்கு போன் பண்ணியிருக்கிறாரு. அப்போ விஜய் ஷூட்டிங்ல இருந்தாரு பேச முடியல. அதை ஞாபகம் வச்சுக்கிட்டு இப்ப திருமா பிறந்தநாளுக்கு விஜய் போன் பண்ணி விஷ் பண்ணியிருக்கிறார்?”

”இது வெறும் நட்பின் அடிப்படையில் சொன்னதா இல்ல…அதையும் தாண்டி அரசியலும் இருக்கா?”

“பெரிய மனுஷங்க பண்ற எந்த செயலும் ஆதாயமோ அரசியலோ இல்லாம இருக்காது” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...