No menu items!

அஜித்துடன் கைக்கோர்க்கும் கேஜிஎஃப் இயக்குநர்

அஜித்துடன் கைக்கோர்க்கும் கேஜிஎஃப் இயக்குநர்

அஜித்திடம் ஒரு பழக்கம் இருந்தது. ஒரு படம் ஹிட்டானால், அதே இயக்குநருடன் இணைந்து அடுத்து ஒரு படமோ அல்லது இரண்டுப் படங்களோ பண்ணுவது வாடிக்கை. இப்படிதான் சிறுத்தை சிவா, ஹெச். வினோத் வரை தொடர்ந்தது.

இந்த பழக்கத்தை முதல் முறையாக ‘விடாமுயற்சி’ மூலம் உடைத்திருக்கிறார் அஜித். முதல் முறையாக மகிழ் திருமேனியுடன் இப்படம் மூலம் இணைந்திருக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங்க் நடைப்பெற்று கொண்டிருக்கும் போதே அஜித் நடிக்கவிருக்கும் படத்தை ‘மார்க் ஆண்டனி’ பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதாக ஒரு பேச்சு அடிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதனால் அஜித் சிவா, ஹெச். வினோத், மகிழ் திருமேனியுடன் மீண்டும் இணையும் வாய்ப்புகள் குறைவு என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறது அஜித் தரப்பு.

இந்நிலையில்தான் புதிதாக ஒரு கிசுகிசு வலம் வர ஆரம்பித்திருக்கிறது.

இந்தியாவையே கன்னட சினிமா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த படம் ‘கேஜிஎஃப்’. இதன் முதல்பாகமும், இரண்டாம் பாகமும் வசூலில் பல சாதனைகளைப் படைத்தன.

இந்தப் படங்களுக்குப் பிறகு கேஜிஎஃப் இயக்குநர் பிரஷாந்த் நீல் ‘பாகுபலி’ புகழ் பிரபாஸை வைத்து இயக்கிய ‘சலார்’ வெளியானது. இந்தப்படமும் சுமார் 600 கோடி வசூலித்து இருப்பதாக கூறுகிறார்கள்.

இப்படியொரு பின்னணியில், இதே பிரஷாந்த் நீல் உடன் அஜித் இணைய விரும்புவதாக ஒரு தகவல் கசிந்திருக்கிறது. அஜித்தின் 65-வது படத்தை ஒரு பிரம்மாண்டமான பான் – இந்தியா ஆக்‌ஷன் படமாக எடுக்க திட்டமிருக்கிறதாம். இதற்கான பேச்சுவார்த்தை கூட ஒரு சுற்று முடிந்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.

பிரஷாந்த் நீல் என்பதால், கேஜிஎஃப், சலார் படங்களைத் தயாரித்த ஹொம்பாளே ஃப்லிம்ஸ் இப்படத்தை தயாரிக்கவும் ஒப்புக்கொண்டிருப்பதாக தெரிகிறது. ஆனால் பிரஷாந்த் நீல் கைவசம் ‘கேஜிஎஃப் 3’ மற்றும் ‘சலார் 2’ ஆகியப்படங்கள் இருக்கின்றன. இதனால் பிரஷாந்த் நீல் – அஜித் கூட்டணி எப்படி இந்த வருடம் இணைய வாய்ப்பிருக்கிறது என்ற குழப்பமும் நீடிக்கிறது.


சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் கமல்!

சிவகார்த்திகேயனின் 21-வது படத்தை கமலின் ராஜ்கமல் ஃப்லிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது. சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, இணைத்தயாரிப்பு மகேந்திரன் என எல்லோரும் விஜய் டிவி வட்டாரத்து ஆட்கள்தான்.

’எஸ்கே 21’ [SK 21] படம் ராணுவப் பின்னணியில் நடக்கும் கதையில் உருவாகி வருகிறது. குறிப்பாக மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீரில் 2014-ல் நடந்த ஆபரேஷனில் வீரமரணம் அடைந்தவர் முகுந்த் வரதராஜன்.

இவரது தியாகத்தைப் பாராட்டி உயரிய விருதான ‘அசோக் சக்ரா’ விருதை இவருக்கு இந்திய ராணுவத்தின் ராஜ்புட் ரெஜிமெண்ட் வழங்கி கெளரவித்தது. காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் இவர் வீரமரணம் அடைந்தார். மூன்று தீவிரவாதிகளைப் போராடி வீழ்த்தியவர் தனது அணியைக் காப்பாற்றினார். இந்த நிகழ்வு முகுந்த் வரதராஜனின் வீரத்தையும், தலைமைத்துவத்தையும் உலகறிய செய்தது. இந்த சம்பவத்தின் அடிப்படையில் திரைக்கதை உருவாகி இருப்பதாக கூறுகிறார்கள்.

இதை கமல் தயாரிப்பதால், அவரை ஒரு கேமியோ போல் சிவகார்த்திகேயனுடன் நடிக்க வைத்தால், பட வியாபாரத்திற்கு ஒரு மதிப்பு இருக்கும், ஒடிடி-விலையில் ஒரு தொகை கிடைக்கும் என்று கமலுக்கு ஒரு யோசனையை விஜய் டிவி வட்டாரம் முன் வைத்திருக்கிறது.

நாம கையில் இருந்து காசைப் போடுகிறோம். போட்ட பணத்தை எடுக்க நாலைந்து காட்சியில் வந்து போனால் தப்பில்லையே என்று கமலும் நினைப்பதாகவும் தெரிகிறது.

ஆக சிவகார்த்திகேயனுடன் கமல் கைக்கோர்ப்பது ஏறக்குறைய உறுதி என்கிறார்கள். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் சாய் பல்லவி ஜோடி சேர்ந்திருக்கிறார். சிவகார்த்திகேயன் இந்தப் படத்திற்காக கொஞ்சம் எடையைக் கூட்டியிருக்கிறாராம். அதேபோல் தற்காப்பு கலையை படத்தில் பில்டப்புடன் காட்டும் அளவிற்கு கற்றுக்கொண்டிருக்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...