பொழுதுபோக்கையும் கூட ஒரு வர்த்தகமாக பார்ப்பவர்களுக்கு மிகச்சரியான தளமாகி இருக்கிறது ஒடிடி. நெட்ஃப்ளிக்ஸ், அமேசான், சோனி லைவ், ஜியோ சினிமா, ஆஹா, ஸீ5, ஹாட் ஸ்டார் என பெரிய ஒடிடி நிறுவனங்கள் பெரிய நட்சத்திரங்களின் படங்கள், ஹாலிவுட் நட்சத்திரங்களை வைத்து வெப் சீரிஸ் என போட்டிப் போட்டுக்கொண்டிருக்கின்றன.
இதனால் சின்ன பட்ஜெட்டிலான படங்கள், புதுமுகங்கள் நடித்தப் படங்களை எந்த ஒடிடி தளமும் வாங்க முன்வருவது இல்லை. பெரிய படங்களை எடுக்கும் தயாரிப்பு நிறுவனங்கள், பெரிய நட்சத்திரம் நடித்த படங்களுடன் தங்களது சின்ன பட்ஜெட் படங்களையும் சேர்த்தே வியாபாரம் பண்ணி விடுகின்றன. இதனால் சிறிய தயாரிப்பாளர்களுக்கும், புதுமுக நட்சத்திரங்களுக்கும், இயக்குநர்களுக்கும் ஒரு சரியான தளம் இல்லாமல் போய் இருப்பதுதான் இப்போதைய பிரச்சினை.
இந்நிலையில்தான், இந்தியாவிலேயே ஒடிடி துறையில் முதல் முறையாக ஒரு மாநில அரசு அதிரடியாக களமிறங்கி இருக்கிறது, அது வல்லிய கேரளா அரசுதான்.
ஒடிடி தளம் அமைக்க வேண்டுமென ஆந்திர அரசு இதுபோன்ற முயற்சிகளில் இறங்கியது. ஆனால் சிறிய அளவிலான ஒடிடி தளத்திற்கு மக்களிடையே எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை. அப்படியொரு ஒடிடி தளம் இருக்கிறது என்பது கூட பலருக்கு தெரியாமல் இருப்பதால் அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
இதையும் கவனத்தில் கொண்டு, ;கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் புதிய ஒடிடி தளத்தை அரசின் சார்பில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். ‘ஸீ ஸ்பேஸ்’ [C Space] என்று இதற்கு பெயர் வைத்திருக்கிறார்கள். கேரளா ஃப்லிம் டெவலப்மெண்ட் கார்போரேஷன் இந்த ஒடிடி தளத்தை இயக்கும். இதற்காகவே 3 பேர் கொண்ட கமிட்டி ஒன்றையும் அமைத்திருக்கிறார்கள். இந்த கமிட்டி திரைப்படங்கள் வாங்குவது, ஸி ஸ்பேஸை செயல்படுத்தும் சமாச்சாரங்களைப் பார்த்து கொள்ளும்.
இந்த ஒடிடி தளம் இதுவரையில் 35 படங்களை ஸ்ட்ரீமிங் செய்து வருகிறது. 6 டாக்குமெண்டரிகளும் ஒரு குறும்படமும் இதில் இடம்பெற்றுள்ளன. ஏதாவது ஒரு படம் பார்க்கவேண்டுமென்றால், அதற்கு மட்டும் பணம் செலுத்திவிட்டு படம் பார்க்கலாம். அதாவது ஒட்டுமொத்த குடும்பமும் ஒரு படம் பார்க்க வேண்டுமென்றால் 75 ரூபாய் செலுத்தினால் போதும். இதில் பாதி தயாரிப்பாளருக்கு, மீதி கேரள அரசுக்கு என முடிவாகி இருக்கிறது.
இதற்கு வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து தேவையான மாற்றங்களையும் மேற்கொள்ள இருக்கிறார்களாம். நல்ல விஷயம்தான். ஆனால் மக்களின் ஆதரவு இல்லாமல் நல்ல முயற்சிகளும் ஜெயிக்க முடியாது. மக்கள் ஆதரவு இருந்தால், நல்லப்படங்களுக்கும் இனி வாய்ப்புகள் இருக்கும்.
பின்வாங்கிய விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் மளமளவென மார்க்கெட் எகிறி, அதன்பிறகு படபடவென அது சரிந்த போது, வில்லனாக நடிக்க ஆரம்பித்தார் விஜய் சேதுபதி.
இந்தநேரத்தில் தெலுங்குப் பக்கம் போனார். ஆனால் இரண்டுப் படங்களுக்கு மேல் அங்கேயும் இடமில்லாமல் போனது.
ஹிந்தி வெப் சீரிஸ் நடிக்க பாலிவுட் போனார். ’ஃபர்ஸ்’ என்ற வெப் சீரிஸ் ஹிட்டானது. அடுத்து ஷாரூக்கானுடன் ‘ஜவான்’ நடித்தார். படம் அதிரிபுதிரி ஹிட். ஆனால் அடுத்து வெளிவந்த ;மெரி கிறிஸ்மஸ்’ விஜய் சேதுபதி மார்க்கெட்டை காலி பண்ணிவிட்டது என்கிறார்கள்.
இந்நிலையில்தான் விஜய் சேதுபதி, ‘தங்கல்’ படத்தை இயக்கிய நிதீஷ் திவாரி இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘ராமாயணம்’ படத்தில் நடிக்க இருப்பதாக பேச்சு அடிப்பட்டது. இதில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்க இருக்கிறார்கள்.
ராவணனாக ‘கேஜிஎஃப்’ புகழ் யாஷ் நடிக்கலாம் என கூறுகிறார்கள். இன்னும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் ராவணன் தம்பி விபீஷணனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் கேட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது.
முதலில் நடிக்க ஒப்புக்கொண்ட விஜய் சேதுபதி, இப்போது அந்தப் படத்தில் இருந்து பின்வாங்கிவிட்டதாக அவருக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.