தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் எழுத்தாற்றலை போற்றும் வகையில், அவரின் நினைவிடத்துக்கு அருகில் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு கடந்த டிசம்பரில் தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்த நிலையில் மத்திய அரசின் அனுமதிக்கு விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே, கடலில் பேனா சின்னம் அமைக்க தடை விதிக்கக் கோரியும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள நினைவிடங்கள், சமாதிகளின் சுற்றுச்சூழல் விதிமீறல்களை ஆராயக் கோரியும் சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான பதில் மனுவில், அனைத்துத் துறைகளின் அனுமதியையும் பெற்ற பிறகே பேனா சின்னம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சென்னை மெரீனா கடலில் பேனா சின்னம் அமைப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என மீனவர்கள் நல்லதம்பி, தங்கம், மோகன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். மெரினா கடற்கரையை அரசியல்வாதிகள் கல்லறைத் தோட்டமாக மாற்றி வருவதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடலில் பேனா சின்னம் அமைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவிலுக்கு ஆகம விதி கிடையாது: சுகி சிவம் விளக்கம்
பழனி தண்டாயுதபானி கோவில் குடமுழுக்குக்கு முதல் நாள் கோவிலுக்கு ஏற்பாடுகளை கவனிக்க சென்ற அமைச்சர் சேகர் பாபு, அதிகாரிகள் கோவில் கருவறைக்குள் சென்றதாகவும், இது ஆகம விதிமீறல் என்றும் இதற்குப் பரிகாரமாக கோவிலுக்கு பிராயச்சித்த கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்றும் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் குரல் எழுப்பியுள்ள நிலையில் இது தொடர்பான விவாதம் தொடர்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் 16 ஆண்டுகள் கழித்து கடந்த ஜனவரி 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த விழாவில், ‘பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கருவறைக்குள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகள் நுழைந்துள்ளனர். ஆகம விதிகள் மீறப்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தலைமை அர்ச்சகரின் வேண்டுகோளை ஏற்று பிராயசித்த கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்’ பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி சிவம், “பழனி கோவில் சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அங்கு வீற்றிருக்கும் முருகன் பெயர் சித்தர்நாதன். தண்டாயுதத்தை ஊன்றி நிற்கும் தண்டபாணி. கோவணம் கட்டியிருக்கும் துறவி. அவர் ஒரு சித்தர். ஒரு சித்தருக்கு ஆகம பிரதிஷ்டை கிடையாது. தனி மனிதன் ஒரு கோவிலைக்கட்டி பிரதிஷ்டை செய்திருந்தால், ஆகமம் செல்லுபடியாகும். சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவிலுக்கு ஆகமம் செல்லுபடியாகாது. பழனி கோவிலுக்கு ஆகம விதி என்பது கிடையாது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு பண்டாரங்களால் வழிபாடு செய்யப்பட்டு கோவிலில் அவர்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. ஆகம விதி மீறப்பட்டதாக கூறுபவர்கள் எந்த ஆகமத்தில் எந்த விதி மீறப்பட்டுள்ளது என்பதை கூற வேண்டும். கடந்த காலங்களில் அமைச்சர்கள், அதிகாரிகள் கோவிலுக்குள் சென்றுள்ளனர். தற்போது இந்த விவகாரம் கட்சி அரசியலாக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
பங்கு சந்தை முறைகேடு: சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஜாமீன்
தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனராக கடந்த 2013 முதல் 2016ஆம் ஆண்டு வரை பணியாற்றி வந்தவர் சித்ரா ராமகிருஷ்ணன். அப்போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக சித்ரா ராமகிருஷ்ணன் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்குத் தொடா்பாக, ஆனந்த் சுப்பிரமணியனை கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதியும், சித்ரா ராமகிருஷ்ணாவை மாா்ச் 6-ஆம் தேதியும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா். இந்த நிலையில் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு அண்மையில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்த நிலையில் தற்போது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் கிடைத்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு 18-ம் தேதி குடியரசு தலைவர் வருகை
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, வரும் 18-ம் தேதி மகா சிவராத்திரியன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்றைய தினம் அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, மதுரை விமானநிலையம் வருகிறார். மதியம் 12 மணிக்கு மேல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் விமான நிலையம் சென்று கோவை செல்கிறார். அங்கு ஈஷா மையத்தில் நடக்கும் மகாசிவராத்திரி விழாவில் கலந்துகொள்ள உள்ளதாக தெரிய வருகிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.