No menu items!

Cow Hug Day – எது கலாச்சாரம்?

Cow Hug Day – எது கலாச்சாரம்?

இந்த வருடம் பிப்ரவரி 14 காதலர் தினம் மிகவும் சுவாரசியமாக இருக்கப் போகிறது.

காதலர்கள் புகைப்படங்களுடன் பசுக் காதலர்களின் புகைப்படங்களும் அதிகம் வலம் வரப் போகின்றன.

காரணம்.. பிப்ரவரி 14 காதலர் தினத்தை Cow Hug Day என்று   பசு மாடுகளை கட்டிப் பிடித்து கொண்டாடுமாறு இந்திய அரசின் விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.   

‘நம் கலாசாரத்தின் முதுகெலும்பு. மேற்கத்திய கலாசாரத்தால் நம் வேத மரபுகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. எனவே, வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ பிப்ரவரி 14 அன்று பசுவை கட்டிப்பிடித்து `cow hug day’-வாக கொண்டாடலாம்’ என்று விலங்குகள் நல வாரியம் கூறியிருந்தது.

நேற்று வந்த இந்த அறிவிப்பு இன்று வரை  சோஷியல் மீடியாவில் வைரல். எங்கெங்கு திரும்பினாலும் கிண்டல்கள், கேலிகள்.  சென்பகமே என்று பாடி பசுவிலிருந்து பால் கறக்கும் ராமராஜன் முதல் பசு மூத்திரத்தை சூடாக குடிக்கும் தீவிர வேத பக்தர்கள் வரை வீடியோக்களும் ஆடியோக்களும் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டா என்று எல்லா பக்கங்களிலும் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன.

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு காதலர் தினத்தில்  பசு மாடுகளை கட்டியணைப்பாரா? என்று கேட்கிறார் ஒரு காங்கிரஸ்காரர்.  ஏனென்றால் கிரண் ரிஜ்ஜு வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர். அங்கு மாட்டிறைச்சி பிரதான உணவு. நான் மாட்டிறைச்சி சாப்பிடுபவன் தான் என்று கிரண் ரிஜிஜுவே முன்பு பேட்டியளித்திருந்தார். அதை வைத்துக் கொண்டு கிரண் ரிஜிஜுவின் மாடுகள் மீதான ‘அன்பை’ சந்தேகப்படுகிறார் இந்த காங்கிரஸ்காரர்.

விலங்குகள் நல வாரியத்தின் அறிவிப்பை வலதுசாரிகள் தீவிரமாக எடுத்துக் கொண்டால் பிப்ரவரி 14 அன்று பல இடங்களில் பசுக்களுக்கு பிரச்சினை அதிகமாக இருக்கும். பசு மாடுகளுக்கான டிமாண்ட் அதிகரித்திருக்கும். பசு மாட்டுடன் ஒரு செல்ஃபியாவது போடவில்லை என்றால் அந்த நாள் நல்ல நாளாக இருக்காது வலதுசாரிகளுக்கு.

இந்த கிண்டல் கேலிகளைத் தாண்டி பார்த்தால் நமது விலங்குகள் நல வாரியம் சொல்வது போல் நாம் மேற்கத்திய கலாச்சாரத்தை தழுவி இருக்கிறோமா? நமது வேத மரபுகள் அழிவிலிருக்கிறதா?  என்ற கேள்விகளைக் கேட்க வேண்டியிருக்கிறது.

200 வருடங்களுக்கு முன்பு பிரிட்டிஷ்காரர்கள் நமது நாட்டை ஆளத் தொடங்கியபோதே நமக்கு மேற்கத்திய நாகரிகம் பரிச்சயமாயிற்று. அதுவே நமது வசதிகளுக்காகவும் வாய்ப்புகளுக்காகவும் பழக்கமாகிவிட்டது.

மேற்கத்திய கலாச்சாரம் என்பதை பாவச் செயலாக பார்க்க வேண்டுமா என்ற கேள்வியும் தொடர்ந்து எழுகிறது.

உதாரணமாய் லவ்வர்ஸ் டே அல்லது வேலண்டைன்ஸ் டே எனப்படும் காதலர் தினம் மேற்கத்திய கலாச்சாரம் என்கிறது இந்திய விலங்குகள் நல வாரியம்.

ஆனால் காதலர் தினம் என்பது மேற்கத்திய கலாச்சாரமா?

நமது மரபில் காமன் பண்டிகை என்ற மரபு இருக்கிறது. அதனை இந்தக் கால காதலர் தினத்துடம் ஒப்பிட்டுக் கூறலாம்.  மாசி மாதத்தில் துவங்கும் இந்த பண்டிகை காலம் பங்குனியில் முடியும் என்றும் பழமையான குறிப்புகள் கூறுகின்றன.

அகநானூற்றிலும் கலித்தொகையிலும் காமன் பண்டிகைகள் குறித்த குறிப்புகள் இருப்பதாக தமிழறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். ’கொங்கர் மணி அரையாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவு’ என்ற வரிகளும் கலித் தொகையில் ’மல்கிய துருத்தியுள் மகிழ் துணைப் புணர்ந்து…விளையாடும் வில்லவன் விழவு’ என்ற வரிகளும் காமன் பண்டிகையைதான் குறிக்கிறது என்கிறார்கள் அவர்கள்.

நமது பாரம்பர்யத்தில் காதலைக் கொண்டாடும் நிகழ்வுகள் இருந்திருக்கின்றன என்பதற்கு இவை உதாரணங்கள்.

வட இந்தியாவில் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையும் காதலுடன் சேர்ந்ததுதான். கிருஷ்ணருக்கும் ராதைக்கும் உள்ள காதலைக் கொண்டாடும் பண்டிகைதான் ஹோலி. 

இப்படி காதலைக் கொண்டாடுவது நமது மரபில் பாரம்பர்யத்தில் இருக்கிறது.

’கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கணும்னு சொல்வாங்க. எது கலாச்சாரம்?  ஐம்பது வருஷத்துக்கு முன்னால ஒரு விதவைப் பெண் திருமணம் பண்ணிக்கிட்டா அது தப்பு. நூறு வருஷத்துக்கு முன்னாடி கொன்னுருவாங்க.அதான் கலாச்சாரம். அதை காப்பாத்துறதுதான் நம்ம வேலை. அதுக்கு முன்னாடி சமணர்களை கழுவுல ஏத்துனாங்க. அது நம்ம கலாச்சாரம் சிவன் பேரால நடந்த கலாச்சாரம். வெள்ளைக்காரங்க வந்த பின்னால சட்டைப் போட கத்துக் கொடுத்தாங்க. அதுக்கு முன்னாடி நம்ம பொம்பளைங்க ஜாக்கெட்டை போட மாட்டாங்க. சும்மாதான் கலாச்சாரம். அப்போ எது கலாச்சாரம்?’  – கமல்ஹாசன் இப்படி பேசிய ஒரு காணொலி உண்டு.

அந்தக் கேள்வியைதான் இப்போது கேட்கத் தோன்றுகிறது.

எது கலாச்சாரம்?  எது மரபு?  எதை நாம் காப்பாற்ற வேண்டும்?

இந்தக் கேள்விகளுக்கு இடையில் ஒரு விஷயம் மட்டும் நிச்சயம்.

இந்த வருட காதலர் தினத்தில் பசு மாடுகள் பாவம்.

முத்தங்களாலும் கட்டிப்பிடிகளாலும் ஒரு வழியாகப் போகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...