காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் முதல் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்தில் பங்கேற்க வருமாறு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று கமல்ஹாசன் இன்றிரவு விமானம் மூலம் டெல்லி செல்லவுள்ளார். தொடர்ந்து நாளை (டிசம்பர் 24) டெல்லியில் நடைபெறும் பயணத்தில் ராகுலுடன் இணையவுள்ளார். அப்போது கமல்ஹாசனோடு மாநில நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இந்திய ஒற்றுமை நடை பயணத்தில் திமுக எம்பி கனிமொழி கலந்துகொண்டு ராகுலுடன் நடந்து சென்றார். மேலும் அரியானா முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா, மூத்த தலைவர்கள் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, குமாரி செல்ஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கொரோனா வைரஸை விட 4.4 மடங்கு வீரியம்: BF.7 திரிபு குறித்து ஆய்வில் தகவல்
கொரோனா நோய்த் தொற்று 2019 டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் தோன்றி 2021 வரை உலக அளவில் பெரும் பாதிப்புகளையும் இழப்புகளையும் ஏற்படுத்தியது. கொரோனா கிருமி, ஆல்பா, பீட்டா, காமா, ஓமிக்ரோன் என்று கொஞ்சம் கொஞ்சமாக மரபியல் திரிபுகள் கொண்டு பரவியது குறிப்பிடத்தக்கது. இந்தியா, ஆப்பிரிக்கா நாடுகளில் கண்டறியபட்ட இந்த திரிபுகளால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர். பின்னர் தடுப்பூசிகள், கட்டுப்பாடுகள் போன்றவற்றால் நோய் பாதிப்புகள் குறைந்து உலகம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் BF.7 என்ற வைரஸின் புதிய மாறுபாட்டுத் தொற்று வேகமாக பரவி வருவது உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
BF.7 ஓமிக்ரான் திரிபு BA.5 இன் துணை மாறுபாடு என்றாலும் இதுவரை கண்டறிந்த எந்த தடுப்பூசியும் இந்த கிருமியை தடுக்காது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மேலும் BF.7 இதுவரை இருந்த கிருமிகளை விட மிகவும் வேகமாக பரவக்கூடியது திறன் பெற்றுள்ளது. மீண்டும் நோய்க்கிருமி வேகமாக பரவுவதால் தனி நபர் இடைவெளி, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு உத்தரவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 1.5 லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதி தேர்வில் 86 சதவீதம் பேர் தோல்வி
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 14-ந் தேதி முதல் 19-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் மொத்தம் 1 லட்சத்து 53 ஆயிரத்து 233 தேர்வர்கள் கலந்துகொண்டனர். இந்த தேர்வுக்கான முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் 21 ஆயிரத்து 543 பேர் தகுதி பெற்றுள்ளனர். அதாவது ஆசிரியர் தகுதி தேர்வில் 86 சதவீதம் பேர் தோல்வி அடைந்து உள்ளனர். மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கான ஆசிரியர் தேர்வை 1 லட்சத்து 53 ஆயிரத்து 233 பேர் எழுதி இருந்த நிலையில் அதில் 21 ஆயிரத்து 543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தென்மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் நிறைவை நெருங்கி விட்ட நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. அது மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளதால் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், 25 மற்றும் 26-ந்தேதிகளில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.