சினிமா என்பது கொஞ்சம் கடைசியாக பிறந்த கலையாக இருந்தாலும், அதற்கென ஒரு தனி அம்சம் இருக்கிறது. நம்பிக்கையோடு இருந்தால் நம்புவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் கைக்கொடுக்கும். ரொம்ப் ஆட்டம் போட்டால், உச்சத்தில் இருந்தாலும் அவர்களது சினிமா பயணத்தை ஆட்டம் காண வைத்திடும்.
இதற்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. வாய்ப்புகள் வரும் போது தன்னை வைத்து படமெடுத்தவர்களுக்கு கொடுத்த வாக்கை பற்றி கவலைப் படாதவர்களை தானாகவே ஓரம் கட்டிவிடும்.
இன்று தமிழ் சினிமாவில் அப்படியொருவர் இல்லை… இருவர் இருக்கிறார்கள். இவர்கள்தான் இன்றைக்கு தமிழ்சினிமாவின் பிஸியான டெக்னீஷியன்கள். அன்பு அறிவு என்ற இரட்டையர்கள் ஸ்டண்ட் மாஸ்டர்களாக இருக்கிறார்கள். அன்பறிவ் என்ற பெயரில் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு சண்டைக் காட்சிகளை அமைத்து கொடுப்பதில் இன்றைக்கு இவர்கள்தான் நம்பர் 1 ஸ்டண்ட் மாஸ்டர்கள்.
இவர்கள் இருவரும் பத்தாண்டுகளுக்கு முன்பாக ஸ்டண்ட் மாஸ்டர்களாக அறிமுகமானார்கள். இந்த பத்தாண்டுகளில் இவர்களது உழைப்புக்கும், அதிரடிக்கும் ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்கவே, இப்போது ரஜினியின் ’வேட்டையன்’, கமலின் ‘இந்தியன் 2’, ’தக் லைஃப்’, பிரபாஸின் ‘கல்கி 2898’., ராம்சரண் மற்றும் ஷங்கர் இணையும் ‘கேம் சேஞ்சர்’ என பல முக்கிய படங்கள் இவர்கள் வசம்தான் இருக்கின்றன.
உச்சத்திற்கு வந்திருக்கும் இவர்கள் இருவரும் இப்போது பண்ணும் அலப்பறைகள்தான் தயாரிப்பாளர்களை கதிகலங்க வைக்கின்றனவாம். இவர்கள் பண்ணும் அலம்பல்களை வெளியே சொல்லவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் புலம்பும் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம்.
’சந்திரமுகி’ படத்தில் முழுசாக மாறிய சந்திரமுகி என்ற ஒரு வசனம் வருமே அதேபோல் இந்த இரட்டையர்கள் தங்களையும் ரஜினிகாந்த் போலவே நினைத்து, ‘வேட்டையன்’ பட ஷூட்டிங்கில் செய்த பஞ்சாயத்துகள்தான் இப்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்.
’வேட்டையன்’ ஷூட்டிங் கன்னியாகுமரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்திருக்கிறது. இதனால் ரஜினி தங்குவதற்காகவே கன்னியாகுமரியில் ஒரு ஹோட்டலில் அறைகளை முன்பதிவு செய்திருக்கிறார்கள். இயக்குநரும் மற்ற டெக்னீஷியன்களும் நாகர்கோவிலில் உள்ள ஹோட்டலில் தங்குவதாக திட்டமிட்டிருக்கிறார்கள். இதைப் பற்றி தெரிந்து கொண்ட இந்த இரட்டையர்கள், எங்களுக்கும் ரஜினி தங்கும் ஹோட்டலில்தான் அறைகள் வேண்டுமென அடம்பிடித்தார்களாம்.
கடலைப் பார்த்தப்படி அறை இருக்கவேண்டும். கடல் அழகை ரசித்தப்படி எப்படி எப்படி ஷூட் செய்யலாம் என்று யோசிக்க வேண்டும். கடலைப் பார்த்தபடி இருக்கும் அறைகளை மட்டும் சொல்லி வையுங்கள். நாங்கள் நேரடியாக அந்த அறைகளை பார்வையிட்ட பிறகு எது வேண்டுமென சொல்கிறோம். அந்த அறையை முன்பதிவு செய்யுங்கள் என்று கூறினார்களாம். இதற்காகவே தன்னுடைய உதவியாளர் ஒருவரை கன்னியாகுமரிக்கு அனுப்பி ரஜினி தங்கியிருந்த ஹோட்டலில் ரெக்கி போனார்களாம்.
இதேபோல் தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் படமொன்றுக்கு இவர்கள்தான் ஸ்டண்ட் மாஸ்டர்கள். அவுட்டோர் ஷுட்டிங்கில் பிரபாஸ் தங்கும் அதே ஹோட்டலில்தான் ஸ்வீட் ரூம் வேண்டுமென கேட்டு அடம்பிடித்தார்களாம்.
தங்கும் விஷயத்தில் இப்படியென்றால், ஷூட்டிங்கின் போது, இவர்கள் இயக்குநர்களையும் விட்டு வைப்பது இல்லையாம். பொதுவாகவே ஆக்ஷன் காட்சிகள் என்றால் அந்த காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர்கள்தான் இயக்குவார்கள். அந்த படத்தின் இயக்குநர் ஷூட்டிங்கில் இருப்பார். இதுதான் வழக்கம்.
இதை காரணமாக வைத்து இவர்கள் இருவரும் செய்யும் அலப்பறைகள் அதிகம் என முணுமுணுக்கிறார்கள். மணிரத்னம் – கமல் கூட்டணி 37 ஆண்டுகளுக்குப் பின் இணையும் ‘தக் லைஃப்’ பட ஷுட்டிங்கிலும் இவர்கள் செய்தவை பற்றி பட்டியலிடுகிறார்கள்.
தக் லைஃப் படத்தின் முதல் ஷெட்யூலில் இவர்களது பிடிவாதத்தைப் பார்த்து மணி ரத்னமே அரண்டுப் போய்விட்டாராம். மாலை 6 மணி வரை ஷூட்டிங். ஆனால் அன்றைக்கு எடுக்க வேண்டிய காட்சிகள் மாலை ஐந்து மணிக்கே முடிந்துவிட, மீதமுள்ள ஒரு மணி நேரம் வேறு ஏதாவது காட்சியை எடுக்கலாம் என மணி ரத்னம் இவர்களிடம் கூறினாராம்.
ஆனால் இவர்கள் இருவரும் அந்த காட்சியை எடுக்க எவ்வளவு நேரம் பிடிக்கும், எப்படி எடுக்கவேண்டுமென்பது எங்களுக்குதான் தெரியும். அவருக்கு என்ன தெரியும். என கமெண்ட் அடித்ததாகவும் கூறுகிறார்கள்.
இதனால் மணிரத்னமே கொஞ்சம் கலவரமாகி ஏதும் சொல்லாமல் கிளம்பிவிட்டாராம்.
இவர்கள் இருவரும் சண்டைக்காட்சிகளை இயக்குவதற்கு நாளொன்றுக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கிறார்களாம். இவை தவிர தங்கும் இடம் செலவு, உணவு செலவு, அவர்கள் சொல்லும் ஆட்கள்தான் நடிக்க வேண்டுமென நிபந்தனை போடுவது என இவர்கள் யாரையும் கண்டுகொள்வதே இல்லை என்ற பேச்சும் கோலிவுட்டில் அதிகம் அடிப்படுகிறது.