எழுத்தாளர் இந்துமதி ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், மறைந்த அரசியல் தலைவர்கள் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜானகி அம்மையார், ஜெயலலிதா ஆகியோருடனான தனது நட்புகள் பற்றி பகிர்ந்துகொண்டார். அது இங்கே…
முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
எம்.ஜி.ஆர். மனைவி வி.என். ஜானகியுடனும் நட்பாக இருந்திருக்கிறீர்கள். அவர்கள் எப்படி?
நான் பழகிய அரசியல் தலைவர்களில் மிக நெருக்கமாகவும் மனதோடு மனதாகவும் பழகியது ஜானகி அம்மாவுடன் தான். என் மனதும் அவர்கள் மனதும் அப்படி ஒட்டிப் போனது. எல்லாமே என்னிடம் சொல்வாங்க. என் மடியில் படுத்து மனம் விட்டு என்னிடம் அழுதிருக்காங்க. “என் தலையில் நானே மண் அள்ளிப் போட்டுக்கொண்டேன். என் தலையில் நானே நெருப்பு அள்ளிக் கொட்டுக்கொண்டேன்” என்று அந்தக் கதையெல்லாம் சொல்லியிருக்காங்க.
எம்.ஜி.ஆர். வள்ளல் என்று சொல்வாங்க; அதைவிட பெரிய வள்ளல் ஜானகி அம்மாதான். என் அனுபவத்தில் ஒரு சம்பவம் சொல்கிறேன். என் உறவினர் ஒருவருக்கு இருதய அறுவைச் சிகிச்சைக்காக ஒரு மருந்து தேவைப்பட்டது. “இது இங்கே கிடைக்காது. ஆனால், எம்.ஜி.ஆருக்காக வாங்கியிருந்தோம். எனவே, அவர்கள் வீட்டில் இருக்கும்” என்று டாக்டர் செரியன் சொன்னார். இது எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர், ஜானகி முதலமைச்சராக இருந்த அந்த 13 நாட்களில் நடந்தது. அப்போது அதிகாலை 3 மணி. ஆனாலும், உடனே ஜானகி அம்மாவுக்கு போன் செய்தேன். தூங்கிக் கொண்டிருந்தாங்க. ஆனாலும் உடனே வந்து, “என்ன வேண்டும்” என்று கேட்டார். “வாங்க கொடுக்கிறேன்” என்றார். அத்தனை மருந்தையும் அள்ளிக் கொடுத்தாங்க.
ஜெயலலிதாவை வி.என். ஜானகி எப்படி பார்த்தார். அவர் குறித்து உங்களிடம் பேசியிருக்கிறாரா?
கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மா, ஜெயலலிதா, மூப்பனார் என எதிரும் புதிருமாக இருந்த அன்றைய முக்கியமான தலைவர்கள் எல்லோரிடமும் அரசியல் கடந்து என்னால் பழக முடிந்ததுக்கு ஒரே காரணம், நான் யாரைப் பற்றியும் யாரிடமும் கேட்டதில்லை; ஒருவர் சொன்னதை சம்பந்தபட்டவரிடம் பகிர்ந்துகொண்டதில்லை என்பதால் தான். யாரோட வருத்தங்களையும் யார் திட்டியதையும் யாரோடும் காட்டியதில்ல.
இத்தனை அரசியல் தலைவர்களுடன் பழகியிருக்கிறீர்கள். நீங்கள் ஏன் அரசியலுக்கு வரவில்லை?
பொதுவாக எழுத்தாளர்கள் அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள். என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன். வாலி மாதிரி சண்டைப் போடக்கூடியவர்கள், கண்ணதாசன் மாதிரி எதிர்த்து நிற்பவர்கள், ஜெயகாந்தன் மாதிரி போர்க்குணம் கொண்டவர்கள் என சிலர் இருக்கிறார்கள் தான். ஆனால், பெரும்பான்மை கலைஞர்கள் அப்படி கிடையாது. அரசியலை கவனிக்கிறோம். அரசியல் என்றால் என்ன? அரசியலில் என்ன நடக்க வேண்டும், என்ன நடக்கக்கூடாது? எல்லாம் எங்களுக்கு தெரியும். ஆனால், அரசியலில் எந்த மாற்றத்தையும் எழுத்தாளர்களால் செய்துவிட முடியாது.
காங்கிரஸ் சார்பாக என்னை தேர்தலில் நிற்க வைக்கவேண்டும் என்று மூப்பனார் முயற்சித்தார். வீட்டுக்கு அடிக்கடி வருவார். காவேரி தண்ணீருக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தபோது நான் டில்லியில் இருந்தேன். அப்போது அழைத்த மூப்பனார், “அம்மா உடனே கிளம்புங்க. உங்க ஃபிரண்ட் சென்னையில கடற்கரையில உண்ணாவிரதம் இருக்காங்க” என்றார். “உடனே டிக்கெட் கிடைக்காதே” என்றேன். “நான் போட்டுத் தாறேன், உடனே கிளம்புங்க” என்று டிக்கெட் எடுத்துகொடுத்து அனுப்பி வைத்தார். ஆனால், “அரசியல் எனக்கு பொருந்தவே பொருந்தாது, தெரியவும் செய்யாது. எனக்கு அரசியல் வேண்டவே வேண்டாம்’ என்று மூப்பனாரிடம் உறுதியாக சொல்லிவிட்டேன். ஆனாலும் வற்புறுத்திக்கொண்டே இருந்தார். இதனால், அவர் வீட்டுக்கு வரும்போது, முன்வாசலில் அவர் வருவது தெரிந்த உடனே நான் இன்னொரு வாசல் வழியாக வெளியே ஓடுவிடுவேன்.
நீங்கள் ஆன்மிகத்தில் அதிக நாட்டம் உள்ளவர். இந்தப் பின்னணியில் கேட்கிறோம், இன்றைய மதவாத அரசியலை எப்படி பார்க்கிறீங்க?
மதவாத அரசியல் இன்று நேற்று என்றில்லை, மன்னர்கள் ஆண்ட காலத்தில் இருந்தே இருக்கிறது. மதவாதம் மட்டுமல்ல தீவிரவாதமும் அப்போதே இருந்திருக்கிறது. மதத்தை தீவிரமாக பின்பற்றிய அரசர்கள், பிற மதத்தவர்களை கூண்டோடு கைலாசம் அனுப்பிய கதையெல்லாம் நமக்கு தெரியும். ஆனால், மதத்தை வைத்து அரசியல் செய்வது ரொம்ப காலம் நிலைக்காது.
அரசியல் என்றால் என்ன என்று தெரியும்னு சொன்னீங்க. சரியான அரசியல் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?
தெரு முழுவதும் எல்லோருக்கும் ஒரே மாதிரி வீடு, எல்லோருக்கும் போதுமான உணவு, எல்லோருக்கும் இலவச கல்வி, எல்லோருக்கும் இலவச மருத்துவம் இருப்பதுதான் சரியான அரசியல். அதை யார் செய்கிறார்களோ அவர்தான் உண்மையான அரசியல்வாதி.
தொடரும்…