மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் பிறந்த நாள் இன்று (24 ஏப்ரல்). இதனை முன்னிட்டி ஜெயகாந்தன் மகளும் எழுத்தாளருமான தீபலஷ்மி, அவருக்கு பிடித்த பாடல்கள் பற்றி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு வருமாறு
‘பள்ளியில் ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாட்டுக்கு ஆடியதால் அந்தப் பாட்டைக் கற்றுக்கொண்டு வீட்டில் பாடிக் காட்டினேன். அதன் பின்தான் அக்காவின் முயற்சியால் என்னை பாட்டு வகுப்புக்கு அனுப்பி வைத்தார்கள்.
அப்பாவுக்கு ‘சொர்க்கமே என்றாலும்’ பாட்டு ரொம்பப் பிடிக்கும். கர்நாடக சங்கீதமும் பிடிக்கும் என்பதால் அவராக சங்கதிகள் போட்டு இழுத்துக் கொண்டிருப்பார். அது எங்களுக்குச் சிரிப்பாக இருக்கும் என்றாலும், அப்பா என்ன பாடினாலும் அவ்வளவு அழகு!
சின்ன வயதில் நிறைய்ய்ய்ய பாட்டுக்கள் பாடுவார். அதில் மனதை விட்டு நீங்காதது: ‘பாடாதே… பாடாதே உன் பாட்டைக் கேட்டுப் புலிக்குட்டித் தான் பயப்படும்!’ அது சினிமாப் பாடலா, நாடோடிப் பாடலா ஒன்றும் தெரியவில்லை. இத்தனை காலம் கழித்துக் கூகிளிலும் கிடைக்கவில்லை.
பதின் வயதில் எனக்குள் சுருங்கி விட்டேன். வீட்டில் அக்காவும் திருமணமாகிச் சென்றவுடன் வீட்டில் யாருடனும் பேசுவதில்லை. பாட்டு வகுப்புக்குச் செல்லும் முன் நோட்டை வைத்து முனகிக் கொண்டிருப்பேன். வாய் விட்டுப் பாடவேமாட்டேன். அப்பா இருந்தால், “சத்தமாப் பாடேன் என்பார்”. நேரமாகிறது என்று ஏதாவது காரணம் சொல்லித் தப்பித்து ஓடி விடுவேன்.
இந்த ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாட்டு மட்டும் அப்பா அவர் நண்பர்களுக்குக் கூடப் பாடிக் காட்டச் சொன்னார். அதிசயம் தான் அது. அந்த நண்பர்களில் ஒரு பிரபல இசையமைப்பாளரும் கூட அடக்கம். அப்போது எனக்குப் பத்து வயதிருக்கலாம்! அப்பாவைப் பெருமிதப்படுத்திப் பார்த்த வெகு அரிதான தருணங்கள் அவை.
அப்புறம் அப்படி இருந்த நான், வளர வளரக் கொஞ்சம் நெருங்கவும் தைரியமாக அப்பாவுடன் பேசவும் ஆரம்பித்தேன். ஆனால், 2008க்குப் பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டு நண்பர்கள் வரவு சுத்தமாக அற்றுப் போன பின்புதான், அவர் தனிமையைப் போக்க வேண்டி ரொம்பவும் படுத்த ஆரம்பித்திருப்போம் என்று நினைக்கிறேன். நாங்கள் பார்த்துப் பிரமித்த அப்பா இல்லை என்றாலும் அப்போது தான் எங்கள் இருப்பை மிகவும் விரும்பத் தொடங்கி இருந்தார்.
‘டாடூ’ என்று கத்திக் கொண்டு போய்க் கன்னத்தில் முத்தம் கொடுப்பது, முடியைப் பிடித்து விளையாடுவது; இல்லாத அரட்டை எல்லாம் அடிப்பது எல்லாம் செய்யும் போதே, ஹும்! பழைய அப்பாவாக இருந்தால், இதெல்லாம் நினைத்துப் பார்ப்போமா? என்ற வேதனையும் மனதைப் பிறாண்டும். ஆனால், உள்ளுக்குள் அப்பா என்றுமே அன்பை வேண்டிய குழந்தை தான் என்பது அவரை நன்கறிந்தவர்களுக்குத் தெரியும்.
லவ் யூ அப்பா. ஹேப்பி பர்த்டே!” என்று தீபலஷ்மி பதிவிட்டுள்ளார்.