No menu items!

ஜெயிலர் வில்லன் விநாயகன் – மலையாள எம்.ஆர்.ராதா

ஜெயிலர் வில்லன் விநாயகன் – மலையாள எம்.ஆர்.ராதா

தமிழ் சினிமாவில் இது சேட்டன்களின் காலம். மாமன்னன் படத்துக்குப் பிறகு அதில் வில்லனாக நடித்த பகத் பாசில் தமிழ் ரசிகர்களை கவர்ந்தது எல்லோருக்கும் தெரியும். அதற்கு சற்றும் குறையாமல் ஜெயிலரில் வில்லனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியிருக்கிறார் விநாயகன்.

ஜெயிலரில் சில காட்சிகள் மட்டுமே நடித்த மோகன்லாலுக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்துவிட்டு, படம் முழுக்க ரஜினிக்கு சவால்விட்டு நடித்த விநாயகனுக்கு மொத்தமே 35 லட்சம்தான் சம்பளமா என்று ரசிகர்கள் கொதிக்கும் அளவுக்கு நிறைவாக செய்திருக்கிறார் விநாயகன்.

ஜெயிலர் படத்தில் ரஜினிக்குப் பிறகு அதிக நேரம் திரையில் தோன்றுபவர் விநாயகன்தான். மலையாளம் கலந்த தமிழ் பேசி அவர் ரஜினிக்கே வில்லத்தனம் செய்த்து பலரைக் கவர்ந்திருக்கிறது. இப்பாத்திரத்தில் முதலில் மம்முட்டி நடிப்பதாக இருந்த்தாகவும், பின்னர் அவருக்கு பதில் விநாயகனை இந்த வேடத்தில் போட்டதாகவும் கோலிவுட்டில் சொல்லப்படுகிறது. மம்முட்டி மிகப்பெரிய நடிகராக இருக்கலாம், ஆனால் ஜெயிலர் படத்தைப் பொறுத்தவரை விநாயகன் கொடுத்துள்ள வில்லன் நடிப்பை மம்முட்டியால் கொடுத்திருக்க முடியாது என்பதை இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள்.

ஜெயிலர் படத்துக்கு முன்பே துல்கர் சல்மானுடன் ‘கம்மட்டி பாடம்’, பகத் பாசிலுடன் ‘ஐயோப்பின்டே புஸ்தகம்’ படங்களில் அவர்களுடன் போட்டி போட்டு நடித்தவர் விநாயகன். இதைத்தவிர மேலும் பல படங்களில் நடித்திருக்கிறார். இதில் கம்மட்டி பாடம் படத்தில் நடித்த்தன் மூலமாக கேரள மாநில அரசின் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றிருக்கிறார்.

விநாயகனை ஒரு நடிகராகத்தான் நமக்குத் தெரியும். ஆனால் அடிப்படையில் அவர் ஒரு நல்ல நடனக் கலைஞர். மும்பையில் நடக்கும் பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் பலர் முன்னிலையில ஒரு நடனத்தையானது ஆடவேண்டும் என்பதுதான் அவரது சிறுவயது ஆசை. இதற்காகவே நடனக் குழு ஒன்றில் இணைந்திருக்கிறார் விநாயகன். ஆனால் அதன் உரிமையாளர், விநாயகனின் நடிப்பாற்றலைக் கண்டு ‘உனக்கு சினிமா உலகில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. நீ போய் முயற்சி செய். அந்த முயற்சியில் நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய். ஒரு வேளை நீ தோல்வியடைந்தால் மீண்டும் என்னிடமே வா. நான் உனக்கு வேலை தருகிறேன்” என்று கூறியிருக்கிறார். அவர் தந்த நம்பிக்கையில் சினிமா வாய்ப்பு தேடி மல்லுவுட்டில் களம் இறங்கி இருக்கிறார் விநாயகன்.

விநாயகனுக்கு முதலில் வாய்ப்பு கிடைத்த படம் மாந்திரீகம். இதில் நடனத்தை முக்கிய அம்சமாக கொண்ட கதாபாத்திரமாக மைக்கேல் ஜாக்சனின் டூப்பாக நடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து சிறுசிறு வேடங்களில் நடித்துவந்த விநாயகன், கம்மட்டி பாடம் படத்துக்கு பிறகு முக்கிய வேடங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

எந்த வேகத்தில் புகழ் பெற்றாரோ, அதே வேகத்தில் கெட்ட பெயரையும் சம்பாதித்திருக்கிறார் விநாயகன், அவரது பல நடவடிக்கைகைகள் மலையாள திரையுலகின் கலகக்காரராக அவரை சித்தரித்துள்ளது. 2016-ம் ஆண்டில் சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றபோது தன் அம்மாவைக் கட்டிப்பிடித்து போஸ் கொடுக்குமாறு விநாயகனிடம் செய்தியாளர்கள் கேட்டிருக்கிறார்கள். அதற்கு விநாயகன், “நான் என் அம்மாவை கட்டிப் பிடிப்பேன். ஆனால் எனக்காக தோன்றும்போதுதான் கட்டிப் பிடிப்பேன். நீங்கள் சொன்னபடி போஸ் கொடுப்பதற்கெல்லாம் என் அம்மாவை கட்டிப்பிடிக்க முடியாது” என்று மறுத்திருக்கிறார்.

கடந்த ஆண்டில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் ‘மீ டு’ பற்றி ஒரு பெண் நிருபர் கேட்க, “எனக்கும் மீ டுவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதேநேரத்தில் ஒரு பெண்ணிடம் உடல் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் அதைப்பற்றி அந்த பெண்ணிடம் தயங்காமல் கேட்பேன். அது நீங்களாக இருந்தாலும்’ என்று சொன்னது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பிறகு அந்த சம்பவத்துக்காக பெண் நிருபரிடம் மன்னிப்பு கேட்டார் விநாயகன்.

கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைந்தபோது ஒட்டுமொத்த கேரளமும் அவருக்காக கண்ணீர் சிந்தியது. ஆனால் விநாயகன் மட்டும் அவரைப் பற்றி அவதூறாக சில வார்த்தைகலை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிய, மீண்டும் சர்ச்சை எழுந்த்து. அவரது படங்கலை புறக்கணிக்க வேண்டும் என்று காங்கிரஸ்காரர்கள் குரல் எழுப்பினர். பிரச்சினை தீவிரமாக விநாயகன் தனது பதிவை நீக்கினார்.

இப்படி யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தனக்குப் பிடித்த வாழ்க்கையை வாழும், தன் மனதில் பட்ட விஷயங்களை தயங்காமல் சொல்லும் விநாயகனை மலையாள சினிமா உலகின் எம்.ஆர்.ராதா என்றும் சொல்ல்லாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...