சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இன்று (நவ.15) காலை உயிரிழந்த கால்பந்து வீராங்கனை மாணவி பிரியாவின் (17வயது) குடும்பத்தினரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு ரத்த ஓட்டம் பாதித்ததால் ரத்த நாளங்கள் பழுதாகி உள்ளது. மேல் சிகிச்சைக்காக கடந்த 10ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். நேற்று முன்தினம் நேரடியாக வந்து பார்த்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்தேன். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் எலும்பு சிகிச்சை நிபுணர், மூட்டு நிபுணர், மயக்கவியல் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர் சிகிச்சை இருந்த போதும் இன்று காலை மாணவி பிரியா உயிரிழந்தார்.
உடனடியாக மருத்துவ வல்லுனர் குழு ஒன்றை அமைத்து விசாரிக்க செய்தோம். பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை செய்த மருத்துவர்களின் கவனக்குறைவும் காரணம் என்று தெரிந்தது. கவனக்குறைவுடன் மாணவி பிரியாவுக்கு சிகிச்சை அளித்த 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு சார்பில் பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். மருத்துவர் குழு விசாரணையும் தொடர்ந்து நடைபெறும்” என்று கூறினார்.
தமிழ்நாடு எம்.பி, எம்.எல்.ஏ–க்கள் மீது 260 கிரிமினல் வழக்குகள்
இந்தியா முழுவதும் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க போதிய நீதிமன்றங்களை ஏற்படுத்த கோரி வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கில், நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா தாக்கல் செய்துள்ள மனுவில், சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்குகளில் 51 எம்.பிக்கள், 71 எம்எல்ஏக்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் மேலும், 51 எம்பிக்கள், 112 எம்எல்ஏக்கள் மீது வழக்குகளை சிபிஐ விசாரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக 260 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் இதில் கூறப்பட்டுள்ளது.
உக்ரைனில் போரை நிறுத்துவதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டும்: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
இந்தோனேசியாவின் பாலியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். மாநாட்டில் பங்கேற்க பாலிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை, இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ வரவேற்றார். இதையடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த பிரதமர் மோடி, கை குலுக்கிக்கொண்டனர். மேலும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனையும் சந்தித்த பிரதமர் மோடி, சிறிது நேரம் கலந்துரையாடினார்.
இந்நிலையில் ஜி20 மாநாட்டில் இன்று உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு குறித்த அமர்வில் பேசிய பிரதமர் மோடி, “பருவ நிலை மாற்றம், கொரோனா தொற்றுநோய், உக்ரைன் போர் மற்றும் அதனுடன் தொடர்புடைய உலகளாவிய பிரச்சனைகள் ஆகியவை உலகில் அழிவை ஏற்படுத்தியுள்ளன. மேலும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் சிக்கலில் உள்ளன. உணவு மற்றும் உரங்களைப் பொருத்தவரை போதுமான விநியோகச் சங்கிலிகளை உறுதி செய்ய வேண்டியது அவசியம். உக்ரைன் மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படவேண்டும். கடந்த நூற்றாண்டில், இரண்டாம் உலகப் போர் உலகில் பேரழிவை ஏற்படுத்தியது. அதன் பிறகு அக்காலத் தலைவர்கள் அமைதி நிலவ தீவிர முயற்சி மேற்கொண்டனர். இப்போது நமது முறை. கொரோனா காலத்திற்குப் பிந்தைய காலத்திற்கு ஒரு புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது” என்று கூறினார்.
தமிழ்நாடு முழுவதும் 3,808 நூலகங்களை புதுப்பிக்க ரூ. 84 கோடி நிதி ஒதுக்கி அரசாணை
தமிழ்நாடு முழுவதும் 3,808 நூலகங்களை புதுப்பிக்க ரூ.84 கோடி நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. முதல் கட்டமாக 2021-22ம் ஆண்டில் 4,116 நூலகங்களை புதுப்பிக்க ரூ.91.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் 3,808 நூலகங்களை புதுப்பிக்க ரூ.84.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நூலகங்கள் 2024ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.