No menu items!

தமிழில் மருத்துவப் படிப்பு: அமித் ஷா யோசனை ஏற்கதக்கதா? – மருத்துவர் பதில்

தமிழில் மருத்துவப் படிப்பு: அமித் ஷா யோசனை ஏற்கதக்கதா? – மருத்துவர் பதில்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் சென்னை வந்தபோது தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்தார். “தமிழில் மருத்துவக் கல்வி மற்றும் பொறியியல் கல்வியை அளிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கு உரிய பாடத்திட்டங்களை தமிழில் அமைக்குமாறு தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்றார். தமிழில் மருத்துவப் படிப்பு சாத்தியமா? அமித் ஷா யோசனை ஏற்கதக்கதா? மருத்துவர் கு.பா. ரவீந்திரனிடம் கேட்டோம்.

“தமிழில் மருத்துவம் படிக்கலாமா என்ற விவாதமும் அது தொடர்பான முயற்சிகளும் புதுசு இல்லை. நான் 1978 – 79இல் எம்.பி.பி.எஸ். படிக்கும்போதே எங்கள் பேராசிரியர் மருத்துவர் தெய்வநாயகம் இது தொடர்பாக பேசியுள்ளார். டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இப்போது இருக்கும் சுதா சேஷய்யனும் அப்போது மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் படித்துக் கொண்டிருந்தார். அவருடன் இணைந்து தமிழில் மருத்துவ படிப்பு சாத்தியமா என்று விவாதித்துள்ளோம்.

மருத்துவம் தொடர்பான டெக்னிக்கல் வார்த்தைகள் நிறைய லத்தீனில் தான் உள்ளது. மருத்துவ நூல்களை தமிழில் கொண்டு வரும்போது, அந்த வார்த்தைகளை அப்படியே தமிழில் எழுதுவதா அல்லது தமிழ்படுத்துவதா என்னும் சிக்கல் வந்தது. அதுபற்றியெல்லாம் நாங்கள் விவாதித்தோம். எல்லா வார்த்தைகளையும் தமிழ்படுத்துவது சாத்தியமில்லை என்பதுதான் எங்கள் அனுபவம். அதன் தொடர்ச்சியாக மருத்துவம் குறித்து சில நூல்களும் தமிழில் வந்துள்ளன. இலங்கையிலும் இது தொடர்பாக சில முயற்சிகள் நடந்துள்ளது.

ஆங்கில வழியில் படித்தாலும் மருத்துவம் பார்க்க வருபவர்களுடன் தாய் மொழியில்தான் பேசுகிறோம். எனவே, அதற்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் சில நூல்கள் வந்தன. மெட்ராஸ் மெடிக்கல் காலேஜுக்கு வரும் நோயாளிகளில் அதிகமானவர்கள் ஆந்திராவில் இருந்துதான் வருவார்கள். அதனால், சுந்தர தெலுங்கில் மருத்துவம் என்றொரு நூல் அப்போது வந்தது.

தற்போது, தாய் வழியில் மருத்துவம் படிப்பது பற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்திய பின்னர் இந்தியில் சில மருத்துவ நூல்களை கொண்டு வந்துள்ளார்கள். அதில் டெக்னிக்கல் வார்த்தைகளை அப்படியே இந்தியில் எழுதியுள்ளார்கள். ஆனால், சில நூல்கள் மட்டும் மருத்துவம் படிக்க போதாது, அனைத்தும் வரவேண்டும். அதற்கு நீண்ட காலம் ஆகும். செய்ய முடியாது என்று இல்லை; ஆனால், அவ்வளவு சிரமப்பட்டு தாய் மொழி வழி மருத்துவப் படிப்புக்கு நாம் மாற வேண்டுமா, அவசியமா என்னும் கேள்வியும் எழுகிறது. அதில் செலவழிக்கும் சக்தியில் நம் அரசு மருத்துவமனைகளை இன்னும் மேம்படுத்தலாம்.

தேசிய மருத்துவ ஆணையத்தில் இன்று வரை ஆங்கிலம் வழியில்தான் மருத்துவ படிப்பு உள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) தான் இந்தியாவின் மருத்துவத் துறையின் ஒழுங்குமுறை அமைப்பாகும். இது இந்திய மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ நிபுணர்களைக் கண்காணித்து ஒழுங்குபடுத்தும் செயலை மேற்கொள்கிறது. எனவே, தேசிய மருத்துவ ஆணையம் மாற்றும்வரை ஆங்கிலத்தில்தான் மருத்துவ படிப்புகள் இருக்கும்.

தாய் மொழி வழியில் படிப்புகள் இருந்தால் கிராமப்புற மாணவர்களுக்கு உதவியாக இருக்கலாம். அதேநேரம், படிப்பில் முதல் இடத்தில் இருக்கும் மாணவர்கள்தான் மருத்துவம் படிக்க வருகிறார்கள். அவர்கள் மொழியை மிக விரைவாக கற்றுக்கொண்டு விடுவார்கள். நானே கிராமப்புறத்தில் இருந்து வந்த மாணவன்தான். இதனால், எங்கள் பேராசிரியராக இருந்த மருத்துவர் ரங்கபாஷ்யம், “மற்ற மாணவர்களை விட நீ கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டும். ஊர் சுற்றுவதை குறைத்துக்கொள்ள வேண்டும்” என்பார். அந்த ஆலோசனை எனக்கு மிக உதவியாக இருந்தது. அந்த காலத்திலேயே என்னால் முடிந்தது என்றால், இன்றைய இணைய உலகில் அது மிக சுலபம்தான்.

இங்கே மருத்துவம் படித்த ஒருவர் வேலைக்காக, மேற்படிப்புக்காக, ஆராய்ச்சிக்காக வெளிநாட்டுக்கு செல்ல நேரும்போது ஆங்கில வழியில் படித்திருந்தால்தான் சுலபமாக இருக்கும். குறிப்பாக நம்மூரில் மருத்துவ ஆராய்ச்சி வாய்ப்புகள் குறைவு என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். தாய் மொழியில் ஆங்கிலம் படித்தவர்கள் வெளிநாட்டுக்கு செல்லும்போது பாதிக்கப்படுவார்கள். எனவே, தாய்மொழியை ஒரு துணை மொழியாக வைத்துக்கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் அதன் வழியில் படிக்கலாம் என்று வைத்துக்கொள்ளலாம்” என்றார் மருத்துவர் கு.பா. ரவீந்திரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...