ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களில் ஒன்று தூக்கம். ஒருவர் ஆரோக்கியமாக வாழ தினமும் 7 முதல் 8 மணிநேரம்வரை நிம்மதியாக தூங்கவேண்டியது அவசியம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த நவீன வாழ்க்கையில் மக்களால் அந்த நிம்மதியான தூக்கத்தை பெற முடிகிறதா?… இல்லை என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.
மக்களின் தூக்கம் தொடர்பாக ஏஜ்வெல் அறக்கட்டளை என்ற அமைப்பு நடத்திய ஆய்வில்தான் இந்த உண்மை தெரியவந்திருக்கிறது. இந்தியாவில் 50 சதவித மக்கள் தூக்கமின்மையால் அவதிப்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவிலுள்ள 20 மாநிலங்களில், சுமார் 5,000 பேரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு ஏஜ்வெல் அறக்கட்டளை இந்த ஆய்வை நடத்தி இருக்கிறது. இதில் 56 சதவித ஆண்கள், 44 சதவித பெண்கள் துக்கமின்மையால் அவதிப்படுவதாக தெரியவந்துள்ளது. நகர்புறங்களில் இருப்பவர்கள், கிராமப் புறங்களில் இருப்பவர்கள், வயதானவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் என பல்வேறு பிரிவினரும் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
வேலைசெய்யும் சுழலில் ஏற்படும் மன அழுத்தம், வயதாகிவிட்டால் வரும் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அதற்காக எடுக்கப்படும் மாத்திரைகள் போன்ற காரணங்களால் பலரும் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
வயதானவர்களைவிட முதியோர் அதிகமாக தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இன்றைய இளைஞர்களின் உணவுப்பழக்கம், காதல் மற்றும் போதைப் பழக்கம் ஆகியவை இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
பெரும்பாலான இளைஞர்கள் வெகு நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கிறார்கள். கம்ப்யூட்டர் திரையை அதிகம் பார்க்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கல். இதுவும் அவர்களின் தூக்கமின்மைக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
இரவு நேரங்களில் மொபைல், லேப்டாப் போன்ற சாதனங்களில் அதிக நேரம் செலவிடுவதும் இளைஞர்களின் தூக்கமின்மைக்கு காரணமாக சொல்லப்படுகிறது. ஏனெனில், இரவு நேரங்களில்தான் 80% மெலடோனின் ஹார்மோன் சுரக்கும். மெலடோனின் ஹார்மோன்தான் தூக்கம் வருவதற்கு முக்கிய காரணியாக செயல்படுகிறது. பெரும்பாலும் இருண்ட இடங்களில் நாம் இருக்கும்பொது இந்த மெலடோனின் ஹார்மோன் சுரக்கும். அதிக நேரம் மொபைல், லேப்டாப் போன்ற சாதனங்களை பயன்படுத்துவதால் இந்த ஹார்மோன் சுரக்காமல் போக வாய்ப்புகள் இருப்பதால் தூக்கமின்மையால் பலர் பாதிக்கப்படுகிறார்கள்
தூக்கமின்மைதான் உயிரை பறிக்கும் பெரிய நோய்களுக்கு முதல்படி. தூக்கத்தை உதாசினப்படுதினால் ஏற்படும் பின்விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும். உடல் எடையில் மாற்றம், ஏதிர்ப்பு சக்தி குறைப்பாடு, இதய நோய் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருப்பது தூக்கமின்மைதான். எனவே தூக்கமின்மையை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டும்.
தினமும் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கயமான உணவுகளை உட்கொள்வது, கம்ப்யூட்டர், செல்போன் திரைகளில் நேரத்தை செலவிடுவதை குறைப்பது போன்றவற்றின் மூலம் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.