உலகின் டாப் டெக் நிறுவனமாக திகழ்வது ஆல்பாபெட். இந்த நிறுவனத்தின் கீழ் தான் முன்னணி டெக் நிறுவனங்களான கூகுள், யூடியூப் போன்றவை இயங்கி வருகிறது. இந்த ஆல்பாபெட் நிறுவனத்தின் சிஇஓவாக இருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை. இவர் தான் கூகுள் நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறார். அதேவேளை, வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப்பை 54 வயதான சூசன் வோஜ்சிச்கி சிஇஓவாக இருந்து நிர்வகித்து வந்தார். இந்நிலையில், தான் யூடியூப்பின் சிஇஓ பதவியில் இருந்து விலகுவதாக சூசன் அறிவித்தார். இதைத் தொடர்ந்து யூடியூப்-இன் புதிய சிஇஓவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீல் மோகன், யூடியூப்-இல் ஷார்ட்ஸ் வீடியோக்கள் உருவாக்குவதில் பிரதானம் கவனம் செலுத்தி அதை வெற்றிகரமாக செயல்படுத்தியவர். இதற்கு முன்பாக இவர் ஆக்சென்சர், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். பேஸ்புக், டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், நெட்பிளிக்ஸ் ஸ்டீரீமிங் தளம் ஆகியவற்றின் வருகைக்கு பின்னர் யூடியூப் தனது வளர்ச்சியில் கடும் சவாலை சந்தித்துள்ளது. எனவே, இதை எதிர்கொள்ளவதே புதிய தலைவர் நீல் மோகனுக்கு விடுக்கப்பட்ட சவாலாக கருதப்படுகிறது.
டெங்கு, மலேரியா பாதிப்புகள் அதிகரிப்பு: சென்னையில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்
தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “கொசுக்கள் மற்றும் பூச்சிகளால் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, ஜிகா, மஞ்சள் காய்ச்சல், ஜப்பானிய மூளைக் காய்ச்சல் உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வீடுகள்தோறும் கொசு ஒழிப்பு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
வீடுகளில் கொசு உற்பத்தி பெருகாமல் தடுக்க சிறப்புக் குழுக்களை அமைக்க வேண்டும். வீடுதோறும் அக்குழுக்கள் சென்று கண்காணிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட குழுக்களின் செயல்பாடுகளை சுகாதார ஆய்வாளர், அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். கள ஆய்வுக்குத் தேவையான எண்ணிக்கையில் கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும்.
வீடுகளைப் போன்ற பொது இடங்களிலும், அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்களிலும் அத்தகைய கொசு தடுப்பு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கொசு உற்பத்திக்கு காரணமாக உள்ள பொருட்களை அப்புறப்படுத்தி தூய்மையாக சுற்றுச்சூழல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளி வளாகங்களில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்வதை ஊக்குவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி: 2ஆவது நாளாக தபால் வாக்கு சேகரிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவுக்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 321 பேரும், மாற்றுத்திறனாளிகள் 32 பேரும் என 353 பேர் உள்ளனர். இவர்கள் வாக்குச்சாவடி செல்லாமல் தபால் ஓட்டாக பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. 100 சதவீத ஓட்டை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 4-ந் தேதிக்குள் இது போன்றவர்கள் பட்டியல் பெறப்பட்டு அவர்களிடம் தனி படிவம் பெறப்பட்டது. சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் குமரன் தலைமையில் இந்த பணிகள் நடந்தது. தபால் வாக்குக்காக பதிவு செய்தவர்களிடம் தபால் ஓட்டை பெற 6 குழுக்கள் அமைக்கப்பட்டன. நேற்று முதல் இந்த குழுவினர் போலீஸ் பாதுகாப்புடன் அந்த வாக்காளர்களின் வீட்டுக்கே சென்று தபால் ஓட்டை பதிவு செய்ய வைத்தனர். உத்தரவு முதியவர்களிடம் யாருக்கு வாக்களிக்க உள்ளீர்கள் என்று கேட்டு அதற்கு தந்தார் போல் அதிகாரிகள் வசதிகள் செய்து கொடுத்தனர்.
10,000 பெண்கள் குளியல் படங்கள்: 30 ஆண்டுகளாக சீக்ரெட்டாக படம் பிடித்த கும்பல்
பூகோளத்தில் வடக்கு பக்கத்தில் அமைந்துள்ள ஜப்பான் நாடு அதிக குளிர்ச்சியான நாடுகளில் ஒன்றாகும். இதனால் அங்கு பொதுமக்கள் அதிகமாக வெந்நீர் பயன்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மேலும் அரசு சார்பில் அங்கு முக்கிய இடங்களில் ஹாட் ஸ்பிரிங்ஸ் எனப்படும் வெந்நீர் நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜப்பான் நாட்டு பொதுமக்களையும் தாண்டி இந்த வெந்நீர் நீரூற்றுகளுக்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தினசரி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில், வெந்நீர் ஊற்றுகளில் குளிக்கும் பெண்களை சிலர் ரகசியமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் நடத்திய சோதனையில், பெண்கள் குளிக்கும் காட்சிகளை புகைப்படம் எடுத்தது தொடர்பாக டாக்டர் ஒருவர் உட்பட 17 பேரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் கைப்பற்றப்பட்ட பொருள்களை சோதனையிட்டதில் 10,000 பேரின் ஆபாசமான புகைப்படங்கள், மற்றும் வீடியோக்கள் இருந்தது கண்டறியபட்டது.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் மூத்த நிறுவன நிர்வாகிகள், உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் மற்றும் டோக்கியோ டாக்டர் ஆகியோர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.