No menu items!

பஞ்சாயத்தில் ’இந்தியன் 2’ – என்ன நடக்கிறது?

பஞ்சாயத்தில் ’இந்தியன் 2’ – என்ன நடக்கிறது?

2001 -ம் ஆண்டில் வெளிவந்த படம் இந்தியன். ஏறக்குறைய 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நான்கு வருடங்கள் தயாரிப்பில் இருந்த படம் இது.

பல பிரச்சினைகள், நிதி நெருக்கடி, தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஷங்கருக்கும் இடையில் பிரச்சனை, லைகா நிறுவனத்திற்கும் கமலுக்கும் இடையில் பிரச்சனை, இப்படி பல பிரச்சினைகள். இதற்கிடையில் படப்பிடிப்பின் போது இரண்டு டெக்னீஷியன்களின் உயிரிழப்பு. இப்படி பல பிரச்சினைகளைத் தாண்டி ஜூலை 12-ம் தேதி இந்தியன் இரண்டாம் பாகம் வெளிவர இருக்கிறது.

இந்த வருட இறுதியில் இந்தியன் மூன்றாம் பாகமும் வெளிவர இருக்கிறது. இதற்கு காரணம் இப்பொழுது தெரிய வந்திருக்கிறது.

இந்தியன் இரண்டாம் பாகத்தை ஓரளவுக்கு எடுத்து முடித்த பிறகு எடிட்டிங் ரூமில் வைத்து ஷங்கரும் கமலும் பார்த்திருக்கிறார்கள். பல காட்சிகளை பட நீளம் காரணமாக வெட்டி தூக்கி எறிய ஷங்கருக்கு மனம் இல்லை. இது குறித்து ஷங்கர் கமலிடமும் பேசியிருக்கிறார். காட்சிகள் நன்றாக வந்திருக்கிறது எதையும் நாம் நீக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார். அதேபோல் தயாரிப்பு நிறுவனத்திடமும் காட்சிகளை நீக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற எண்ணத்தில் கமல், ஷங்கர், லைகா என மூன்று தரப்பிலும் காசு பார்க்கும் எண்ணம் எழவே, ஒப்பந்தம் ஒன்றை பரஸ்பரம் பேசி முடிவு செய்துவிட்டார்கள்.

ஷங்கருக்கும் கமலுக்கும் கூடுதலாக சம்பளம் கொடுத்து, மூன்றாம் பாகத்தையும் ஷூட் செய்து விட்டால், அதாவது மூன்றாம் பாகத்திற்கான தொடக்கம் மற்றும் இறுதி காட்சிகள், இரண்டாம் பாக கடைசி காட்சிகள் என தேவைப்பட்ட காட்சிகளை மட்டும் திட்டமிட்டு எடுத்து விட்டார்கள்.

இந்த மூன்றாம் பாகம் எடுப்பதற்கு என்ன காரணம் என்ற உண்மையை ஷங்கர் இப்போது வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். இந்தியன் முதல் பாகம் தமிழ்நாட்டிற்குள் மட்டுமே நடப்பதாக இருக்கும், ஆனால் இந்தியன் 2 கதை என்பது இந்தியா முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணிக்கும் கதையாக விரிவடையும். இதனால் கதைக்கான தளம் பிரம்மாண்டமானதாக மாறிவிட்டது.

ஆனால் இந்தியன் 4, இந்தியன் 5 என தொடர்ச்சியாக வெளிவர வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்வி எழுந்த போது, சேனாதிபதியின் தோற்றத்திற்கான ப்ரொதெடிக்ஸ் மேக்கப் போடவே தினமும் மூன்று மணி நேரம் பிடிக்கும். மேக்கப் போட்டுவிட்டால் நம்மை மாதிரி எல்லாவற்றையும் சாப்பிட முடியாது. ஏதாவது நீர் ஆகாரம் மட்டுமே எடுத்து கொள்ளமுடியும்.

’சில காட்சிகளில் கமல் கயிறு ஒன்றில் தொங்கிக் கொண்டே நடித்திருக்கிறார். அந்த காட்சியை எடுக்கும் போது நாள் முழுக்க கயிற்றிலேயே தொங்கியபடி நடித்திருக்கிறார். இதெல்லாம் சாத்தியமே கிடையாது.
அடுத்து மேக்கப்பை ஷூட்டிங் முடிந்த உடனேயே கலைத்துவிட முடியாது. இந்த மேக்கப்பை கலைக்கவே ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும். இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு முதல் ஆளாக வரும் கமல், ஷூட்டிங் முடிந்ததும் கடைசி ஆளாக ஸ்பாட்டிலிருந்து கிளம்புவார்’ என இந்தியன் கதையை எடுப்பதில் இருக்கும் சிக்கலை ஷங்கர் கூறியிருக்கிறார்.

ஆனால் இதற்கு கமலோ, ’ஷங்கர் இன்னும் இளைஞராகவே இருக்கிறார். ஆனால் வயதானால் சேனாதிபதி தோற்றம் பொருத்தமாக இருக்கிறது என்று சாடை மாடையாக இனியும் என்னால் கயிற்றில் தொங்கிக்கொண்டெல்லாம் நடிக்க முடியாது’ என்று கூறியிருக்கிறார்.

கமலின் வயதோ அல்லது கயிற்றில் தொங்குவதோ அல்லது டைவ் அடித்து சண்டையிடும் காட்சிகளோ பிரச்சினை இல்லை. நடைமுறை சிக்கல்கள் என்பது எல்லா படங்களுக்கும் இருப்பதுதான். அந்த பிரச்சினைகளை சரியான திட்டமிடலின் மூலம் சமாளித்துவிடலாம். அப்படியிருந்தும் இந்தியன் வரிசைப் படங்களை தொடர்ந்து எடுக்கும் திட்டம் இதுவரை இல்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

லைகா ப்ரொடக்ஷன் எடுத்திருக்கும் படங்கள் எல்லாம் இனி போட்ட பணத்தைப் பெற்று கொடுப்பதோடு, பெரும் லாபத்தையும் ஈட்டினால் மட்டுமே லைகாவினால் தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களை எடுக்கமுடியும். அடுத்தடுத்த படங்களின் தோல்வி, ஏற்கனவே ஒப்பந்தமான விஜயின் வாரிசு ஜேசம் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாக இருக்கும் படத்திற்கான பட்ஜெட் இல்லை என நிதி நெருக்கடியில் இருப்பதாக வியாபார வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் லைகா தரப்பில் மறுக்கிறார்கள்.

இந்தியன் 2 எடுக்கும் போதே இயக்குநர் மற்றும் கதாநாயகனுடன் தயாரிப்பு நிறுவனத்திற்கு முட்டல் மோதல் எல்லாம் நிகழ்ந்திருக்கிறது என்று கிசுகிசுக்கிறார்கள். இந்த மோதலினால்தான் கமல் இப்படத்தின் ப்ரமோஷனுக்கு பெரிய ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறுகிறார்கள்.

இந்தியன் 2 எடுக்க ஆரம்பித்த போது, கமலுக்கு 30 கோடி சம்பளம் பேசியிருந்தார்களாம். ஆனால் இப்போது மீண்டும் எடுக்க ஆரம்பித்ததும் கமல் தனது சம்பளத்தை அதிகரித்து கொடுக்குமாறு கேட்டிருக்கிறார். இதில்தான் பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது.

இதனால்தான் இந்தியன் 3 என்று ஒரு எண்ணத்தை வைத்து, கூடுதலாக 60 நாட்கள் ஷூட் செய்து, கமலும் ஷங்கரும் கூடுதலாக சம்பளம் வாங்கிவிட்டார்கள். இதனால் இந்தியன் வரிசைப் படங்கள் வருவதற்கு வாய்ப்பு குறைவு என்றாலும், சினிமாவில் பகைவனும் கிடையாது, நண்பனும் கிடையாது. படம் வெற்றிப் பெற்று லாபம் ஈட்டினால் இதே கூட்டணி கைக்கோர்க்கவும் வாய்ப்பிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...