உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி கடந்த 19-ம் தேதி தொடங்கி வைத்தபோது அதில் இசைஞானி இளையராஜாவும் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். அவரது சிறப்பு இசை நிகழ்ச்சியும் அதில் நடைபெற்றது. இந்நிலையில், காசி விஸ்வநாதர் கோயிலில் இளையராஜா இசைக்க வேண்டும் என அதன் அறக்கட்டளை நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தி இசை நிகழ்ச்சி நடத்த அறக்கட்டளை சார்பில் நேற்று முன்தினம் இளையராஜாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை உடனடியாக ஏற்றுக்கொண்ட இளையராஜா, டிசம்பர் 15-ல் பக்தி இசைக் கச்சேரி நடத்த உள்ளார்.
இதுகுறித்து இளையராஜா, “காசி விஸ்வநாதர் கோயிலில் இசை நிகழ்ச்சி நடத்த எனக்கு கிடைத்த அழைப்பால் அளவில்லா ஆனந்தம் அடைந்தேன். கோயில் வளாகத்தில் இதுவரை நடைபெறாத இசை நிகழ்ச்சியை நடத்தும் முதல் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதை, எனது இசையை கேட்க சிவபெருமான் என்னை அழைப்பது போல் உணர்கிறேன். இந்த நிகழ்ச்சியில் நானே இசையமைத்த பக்திப் பாடல்கள் மற்றும் திரைப்படங்களில் வந்த பக்திப் பாடல்களை பாடுவேன்” என்று கூறியுள்ளார்.
பிரதமர் பாதுகாப்பில் எவ்வித குறைபாடும் இல்லை: டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்
இந்திய பிரதமர் மோடி சென்னை வந்தபோது அவரது பாதுகாப்பில் குறைபாடு இருந்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு ஆளுநரிடம் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இது குறித்து இன்று விளக்கமளித்த தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, “பிரதமர் வருகையின்போது, பாதுகாப்பில் குளறுபடிகள் நடந்ததாக எந்தவிதமான தகவலும் இல்லை. நல்ல முறையில் பாதுகாப்பு இருந்தது. மேலும், பிரதமர் வருகையின்போது, பாதுகாப்பு குறைபாடு என்று எஸ்பிஜியிடம் இருந்து எந்தவிதமான தகவலும் குற்றச்சாட்டும் இல்லை. ரொம்ப சிறப்பாக நடந்து முடிந்ததாகத்தான் வாய்மொழியாக அவர்கள் சொல்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு காவல்துறை பயன்படுத்தக்கூடிய அனைத்துவிதமான உபகரணங்களும் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை ஆய்வு செய்து, ஏதாவது உபகரணங்கள் காலாவதியாகியிருந்தால், அதனை மாற்றும் வழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது. அதுதான் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இப்போது இருப்பதிலேயே தமிழ்நாடு காவல்துறை வசம்தான் நல்ல தரமான உபகரணங்கள் உள்ளன” என்று கூறினார்.
கோகுல்ராஜ் கொலை: பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவர் சுவாதி என்பவரை காதலித்ததாகவும், இந்த விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த வழக்கில் யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதி, முன் தெரிவித்த வாக்குமூலத்திற்கு எதிரான தகவல்களை தெரிவித்ததால் பிறழ்சாட்சியாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று மதுரை கிளை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, நீதிமன்றத்தில் ஆஜரான சுவாதி மீண்டும் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். இதனால் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கின் முக்கியத்துவத்தை அறியாமல் சுவாதி பொய்யான சாட்சி வழங்குவதாக தெரிய வருகிறது; சுவாதி மீண்டும் உண்மையை கூற இரண்டு வாரம் அவகாசம் பிறப்பிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராபிடோ புக் செய்த பெண்ணை வன்கொடுமை செய்த ஓட்டுநர்: பெங்களூருவில் அதிர்ச்சி
ராபிடோ என்பது வாடகை கார் போன்று வாடகை பைக். முன்பதிவு செய்தால் பைக்கில் வந்து ட்ராப் செய்யும் முறையாகும். இந்தியாவில் முக்கிய நகரங்களில் இந்த சர்வீஸ் உள்ளது. இந்நிலையில், கேரளவைச் சேர்ந்த பெண் ஒருவர் பெங்களூரில் ரேபிடோ சவாரிக்கு முன்பதிவு செய்திருந்தார். ராபிடோவில் பயணிக்கும்போது நடுவில் நீலாத்ரி நகரில் நிறுத்தி ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் ஒருவரால் அந்த பெண் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இது குறித்து ராபிடோ ஒருங்கிணைப்பாளர், “எங்கள் நிறுவனத்தில் பதிவு செய்து வேலை பார்க்கும் ஒருவர் செய்த இந்த செயலை ரேபிடோ வன்மையாகக் கண்டிக்கிறது. இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு ஆளாக நேரிட்ட பாதிக்கப்பட்டவரிடம் ஆழ்ந்த மன்னிப்பு கேட்கிறோம். காவல்துறைக்கு அனைத்து உதவிகளையும் அளித்து, குற்றம் சாட்டப்பட்டவரை தண்டிக்க எங்கள் தரப்பு உதவிகளை செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.