தற்கால உலக சினிமா பிரபலங்களில் ஒருவர் சிங்கள திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதானகே. இவரது புதிய படமான ‘பாரடைஸ்’ வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு சிறப்புக் காட்சி நேற்று (24-06-24) சென்னை சத்யம் திரையரங்கில் திரையிடப்பட்டது. படம் எப்படியிருக்கிறது? படத்தைப் பார்த்த பிரபலங்கள் கருத்து இங்கே…
இந்திய தேசிய விருதுபெற்ற ஆவணப்பட இயக்குநர் ஆர்.வி. ரமணி:
இரண்டு இளம் காதலர்கள், விடுமுறையைக் கழிக்க இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் செல்கிறார்கள். இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்குச் செல்வதை விட மலிவானது என்பதால் அவர்கள் இலங்கையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்கள் சென்ற நேரம் இலங்கை பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்பாக இருக்கிறது.
இளம் காதலர்கள் இந்தியாவில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படவில்லை. அவர்கள் தோற்றத்தை வைத்து மலையாளிகள் அல்லது ஹரியானாவைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது. அவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது.
இந்த ஜோடியில் ஆண் ஒரு நெட்ஃபிக்ஸ் தொடரில் நடிக்கும் வில்லன், விடுமுறையில் இங்கே இருக்கிறார். ஆனால், பெண்தான் கதாநாயகி. ஹீரோ கிடையாது. இந்த படம் கதைக் களங்களைதான் பெரிதும் நம்பியுள்ளது.
இந்த படத்தில் இயக்குநரின் ஆர்வம் எங்கே இருக்கிறது என்று நான் தேடினேன். தோட்டத் தொழிலாளார்களான தமிழர்கள் மீதான அவரது கண்ணோட்டமா அல்லது பொருளாதார நெருக்கடியால் தெருக்களில் போராட்டம் நடத்தும் இலங்கை மக்களா அல்லது குற்றத்தை விசாரிக்கும் இலங்கை காவல்துறை அதிகாரியா அல்லது சுற்றுலா வழிகாட்டி, ஓட்டுநர், சமையல்காரர், பராமரிப்பாளர், திருடர்கள், காடு, மலை, ராமாயணத்தின் கட்டுக்கதை அல்லது சதி என இயக்குநரின் ஆர்வம் பல்வேறு மதிப்பு அமைப்புகளுடன் மோதுவதுடன், ஒரு புதிய மதிப்பை விளைவிப்பதில், அநேகமாக சுயபரிசோதனை செய்வதில் இருப்பதாக உணர்ந்தேன். சிகிச்சையானது பின் நிலைக்குத் தள்ளப்படுகிறது.
தர்ஷனா ராஜேந்திரன் சிறப்பாக நடித்துள்ளார். அவரது புன்னகை, குறிப்பாக எல்லாமே தவறாக நடக்கும் தருணத்தில் அவரது அதீத நடிப்புத் திறனைக் கொண்டு வருகிறது.
இப்படம் அற்புதமாக இருக்கிறது. இதுபோன்று இன்னும் பல படங்கள் வெளியாகும் என நம்புகிறேன். நமது பக்கத்து நாடுகளில் இருந்து புதிய நிலங்களை விரும்புவோருக்கு இந்தப் படம் விருந்தாக இருக்கலாம்.
எழுத்தாளர் தீபலட்சுமி:
முதல் காட்சியிலிருந்து நம்மை அப்படியே அள்ளித் தூக்கிக் கொண்டு போய் ஸ்ரீலங்காவின் அழகிய அடர்ந்த மலைப்பகுதிகளில் உலவ விட்டு விடுகிறார்கள். கதை மெதுவாக நகர்வதைப் பற்றி யோசிக்கவே முடியாத படி மலைக்காடுகளின் அழகில் மெய்மறக்கச் செய்கிறது ஒளிப்பதிவு. அதைச் சிதைக்காத ஒலிப்பதிவு.
எல்லாருக்கும் மிகப்பிடித்த தர்ஷனா நாயகி. அவரும் அவரது கணவரும் தங்கள் ஐந்தாவது திருமண நாளைக் கொண்டாட படு ரொமாண்டிக்காக அந்த இடத்துக்கு வருகிறார்கள். கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவித்த 2022ஆம் ஆண்டில் அங்கே சுற்றுலாச் செலவு நான்கு மடங்கு குறைவாக இருக்கும் என்பதால் அவ்விடத்தை நாயகன் தேர்வு செய்ததாக நாயகி கிண்டலாகச் சொல்வது உட்பட ஒரு வசனம் கூடத் தேவையற்றதாக இருக்கவில்லை.
இலங்கையின் அந்தக் குறிப்பிட்ட மலைப் பகுதியை, சீதையை இராவணன் மறைத்து வைத்திருந்த இடமாகச் சித்தரித்து எண்ணற்ற கதைகளும் ‘ராமாயணா டூர்’ என்றொரு சுற்றுலா திட்டத்தையும் வைத்திருக்கிறார்கள். வாகன ஓட்டுநராகவும் சுற்றலா ‘கைட்’ ஆகவும் வரும் ஆண்ட்ரூ சொல்லும் கதைகளை லேசாக நையாண்டி செய்தபடியே தர்ஷனா பேசும் பேச்சுகள் இந்து மதத் தீவிரவாதிகளை பதம் பார்க்க வல்லவை.
ரொமாண்டிக் தம்பதி என்றால் முத்தக்காட்சி இல்லாமலா? படத்தின் இடையே அட்ரினலினை எகிற வைக்கும் ஒரு முத்தக்காட்சி வருகிறது; முன்னறிவிப்பின்றி வழக்கமான சினிமாக் காட்சி போல் அல்லாது படு எதார்த்தமாக எடுக்கப்பட்டிருக்கும் அந்தக் காட்சியைத் தொடர்ந்து படம் வேறு திசையில் டேக் ஆஃப் ஆகிறது.
காவல் துறை அதிகாரியாக வரும் பண்டாரா தேர்ந்த நடிப்பை வழங்கி இருக்கிறார். அந்தப் பாத்திரப் படைப்பும் கச்சிதம். ஆண்ட்ரூ, கேசவ், இக்பால், ஷ்ரீ என்று அனைவருமே பாத்திரமாக மாறி விடுகிறார்கள்.
டீசல் பற்றாக்குறை முதற்கொண்டு கடும் பொருளாதார நெருக்கடியில் நாடே பற்றி எரிந்து கொண்டிருக்கும் ஒரு சூழலில் அண்டை நாட்டிலிருந்து வந்த ஓரு வசதியான இளம் தம்பதியினருக்கு என்ன ‘கொடுந்துயர்’ நேர்ந்தது? அவர்கள் அதனை எப்படி எதிர் கொண்டார்கள்? என்பதை எல்லாம் முழுக்க சொல்லிவிட்டால் படம் பார்க்கும் அனுவத்தைக் கெடுத்து விடுவேன்.
“ஒரு மனித உயிர் என்பது தேர்தல் நேரத்தில் ஒரு ஓட்டு” என்று சார்ஜண்ட் பண்டாரா சொல்லும் வசனம் ஒன்று தான் பஞ்ச் வசனம் போல் இருக்கிறது. ஆனால், பஞ்ச் வசனங்களோ இரத்தம் சொட்டும் வன்முறையோ இல்லாமலே அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற பதைபதைப்பையும் இறுதியில் சற்றும் எதிர்பாராத அதிர்ச்சி தரும் முடிவையும் தந்த விதத்தில் இயக்குநர் வேற லெவல் என்று நிரூபித்திருக்கிறார்.
அத்தனை இக்கட்டுக்கு இடையிலும் கணவன் – மனைவி இருவரும் ஒவ்வொரு வேளையும் ருசியாகச் சமைக்கப்பட்டு அழகாகப் பரிமாறப்படும் உணவை நிதானமாக ருசித்துச் சாப்பிடுவதையும், அவ்வளவு பெரிய எஸ்டேட்டில் சமையலரும் காப்பாளரும் தங்கும் குறுகிய பொந்தையும் காட்டி இருப்பது சிறப்பு.
தர்ஷனா ஒரு நடிப்பு ராட்சஸி. அவருக்கு ஏற்ற கதாபாத்திரம்; மிரட்டி இருக்கிறார்.
செம்மயான காட்சி அனுபவத்தைத் தந்ததோடு, சமூகம், வர்க்க அரசியல், மனித இயல்புகள் – இவை குறித்து ஆழமாகச் சிந்திக்கவும் தூண்டும் படைப்பு.
Paradise – Must Watch.