டி.ஆர்.மகாலிங்கம். எம்.கே.ராதா. எம்ஜிஆர், சிவாஜி. ஜெய்சங்கர், ரஜினி. கமல், விஜய். அஜித். தனுஷ். சிலம்பரசன் என 5 தலைமுறை நட்சத்திரங்களுடன் பயணித்தவர். எம்.என்.நம்பியார். காமெடியன். கதாநாயகன். வில்லன். குணச்சித்திரம் என பன்முகம் காட்டி நடித்தவர்.
தன்னுடைய திரையுலக பயணத்தைப் பற்றி கூறும் எம்.என்.நம்பியார், “ஆரம்ப காலத்தில் எனக்கு காமெடி வேடங்கள்தான் கிடைத்தன. மந்திரிகுமாரியில் ராஜ குருவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதனைத் தொடர்ந்து வில்லன் வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. நான் நினைத்திருந்தால் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று இருந்திருக்க முடியும். ஆனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன்” என்கிறார். அவரது நாடக திரையுலக வாழ்க்கையின் சில துளிகள்.
1934-ல் நவாப் ராஜமாணிக்கத்தின்’ ஸ்ரீ மதுரை தேவி வினோத பாலகான சபையில் பாலகனாக சேர்ந்தார் எம்.என்.நம்பியார். துணை நடிகர்களில் ஒருவராக, தம் கட்டி நிற்கும் சிப்பாய்களில் ஒருவராக, தாடி வைத்த ரிஷிகளில் ஒருவராக, ராமாயண நாடகத்தில் வானரசேனையில் ஒருவராக என இப்படித்தான் நம்பியாரின் ஆரம்பகால வேடங்கள் அமைந்தன. அப்போது மாதம் 3 ரூபாய் எட்டணா சம்பளம்.
1935-ல் பக்த ராமதாஸ் நாடகம் திரைப்படமாக பம்பாயில் உருவானபோது அதில் மந்திரியாக நடித்த நம்பியாருக்கு 40 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது. 2-வது படம் இன்ப சாகரனில் நடிக்க 750 ரூபாய் சம்பளம். இந்தப் படம் வெளிவரவில்லை. தயாரித்து முடிக்கப்பட்ட நிலையில். ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்தில் பிலிம் எரிந்து சாம்பலாகிவிட்டது.
கவியின் கனவு நாடகத்தில் நம்பியாரின் நடிப்பைப் பார்த்த ஜூபிடர் பிக்சர்சார் நம்பியாரை சினிமாவுக்கு ஒப்பந்தம் செய்தனர். மாதம் 600 ரூபாய் சம்பளத்தில் வித்யாபதி, . கவியின் கனவு, ராஜகுமாரி, மோகினி ஆகிய படங்களில் காமெடி வேட்த்தில் நடித்தார். இதைத்தொடர்ந்து கஞ்சன் படத்தில் நாயகனாகவும், அபிமன்யு, வேலைக்காரி ஆகிய படங்களில் இரண்டாம் நாயகனாகவும் நடித்தார்.
மாத சம்பளத்திலிருந்து படத்துக்கு 5,000 ரூபாய் என்று புதிய ஒப்பந்தம் போட்ட ஜுபிடரின் விஜயகுமாரி, மாடர்ன் தியேட்டர்ஸின் மந்திரி குமாரி. சர்வாதிகாரி, தேவகி கல்யாணி ( கதாநாயகன்), ஜங்கிள் ஆகிய படங்களில் நடித்தார்.
எம்.என்.நம்பியார் சினிமாவில் அதிக அளவில் புகழ்பெற்றதும் அதிக சம்பளம் பெற்றதும் எம்ஜிஆர் உடன் வில்லனாக நடிக்க தொடங்கிய பிறகுதான். எம்ஜிருடன் முதல் படம் ராஜகுமாரியில் தொடங்கி கடைசி படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை நடித்தார் .
அதன் பின் சிவாஜியுடன் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்திருக்கின்றார். நம்பியாருக்கு நல்ல பெயர் பெற்று தந்த படம் கே. பாக்யராஜின் தூறல் நின்னு போச்சு காமெடி கலந்த சிலம்பு வாத்தியார் வேடம்.