No menu items!

கொஞ்சம் கேளுங்கள்’பாப்பு’ மறைந்தது…சீறிய சிங்கமானது..!

கொஞ்சம் கேளுங்கள்’பாப்பு’ மறைந்தது…சீறிய சிங்கமானது..!

“புதனன்று ராகுல் காந்தி பார்லிமெண்டில் நுழைந்தபோதே ஒதுங்கி வழிவிட்டவர்களில் பிஜேபி உறுப்பினர்கள்தான் அதிகம். அவையில் அமைச்சர்கள் உட்பட பிஜேபியினர் அத்தனை பேரும் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார்கள். வழக்கமாக அவரை இகழ்ச்சியாக, கேலியாக பார்க்கும் பார்வை போய்விட்டது. ஆனால் ராகுல் அமைதியாகவே இருந்தார்” என்று டெல்லி நிருபர் தொலைபேசியில் தகவல் கொடுத்ததை கூறியபோது, அருகில் இருந்த இடதுசாரி தலைவர் முறுவல் பூத்தார்!

“பாப்பு என்று ராகுல் காந்தியை கேலியாக அழைத்தவர்கள்தான் அவர்கள்! வெங்கைய்யா நாயுடு முதலில் அவரை அப்படி அழைத்தார் என்பார்கள். சில விளம்பரங்களில்கூட பாப்புவை பயன்படுத்தினார்கள். ஒரு சொல் உண்டு. நாம் எந்த ஆயுதத்தை பயன்படுத்துவது என்பதை எதிரிதான் முடிவு செய்கிறார் என்பார்கள். ராகுல் காந்தியை…. அந்த பாப்புவை பிஜேபியினரே சீறிய சிங்கமாக மாற்றிவிட்டார்களே” என்றார் அவர்.

“வாரிசு அரசியல் என்கிறார்கள். நேரு குடும்ப ரத்தத்தில் ‘உறுதி’ ஊறிக்கிடக்கிறது. ‘இப்படித்தான்’ என்று முடிவெடுத்தால் – எடுத்ததுதான்! மோதிலால் நேரு ஆனந்தபவனத்தை நாட்டுக்கு வழங்க முடிவெடுத்ததும் -காந்தி வழிக்கு திரும்பியதும் அதே ‘உறுதி’யே காரணம். மதச்சார்பற்ற கொள்கையில் பிரதமர் நேரு காட்டிய ‘உறுதி’! இரும்பு பெண்மணியாக இந்திரா! அவசரகதியில் பிரதமரானாலும் ராஜிவ் காந்தி நின்று காட்டினாரே! வாரிசு வழி வந்த அந்த ‘உறுதி’ நெஞ்சம் ராகுல் காந்தியிடம் இல்லாமல் போகுமா?

புதிதாக ஆட்சி பீடத்தில் ஏறிய நரேந்திர மோடியின் புகழ் பரவிய வேகத்தில் – ராகுல் பற்றி சரியான மதிப்பீடுகள் அப்போது தெரியவில்லை என்பதே உண்மை. “

நீராஜ் சௌத்ரி எழுதிய புத்தகத்தில் இருந்த ஒரு தகவலை எடுத்துக்காட்டினார் இடதுசாரி தலைவர். “சோனியா காந்தி பிரதமராக வருவார் என்று எதிர்பார்த்த நேரத்தில் அது நடக்காமல் போனதே… ஜனாதிபதி அப்துல் கலாம் ஏற்கவில்லை என்பார்கள். இன்னொருபுற உண்மை உண்டு. ஒரு காட்சி…. சோனியா வீட்டில்…”
சோனியா காந்தி சோபாவில் மிரட்சியுடன் அமர்ந்திருக்கிறார். மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி, சுபன் துபே மூவரும் எதிரே நாற்காலிகளில். ராகுல் காந்தி கைகளை கட்டிக்கொண்டு துள்ளி குதித்து நடந்தவாறு இருக்கிறார். ‘முடியாது… நீங்கள் பிரதமராவதை என்னால் ஏற்க முடியாது’ என்று உரத்த குரலில் கூறினார். சோனியா பிரதமராவது அவசியம் என்று அங்கே இருந்தவர்கள் வாதிடுகிறார்கள்.

ஏற்க மறுக்கிறார் ராகுல். ‘என் பாட்டி படுகொலை… என் தந்தை படுகொலை… இனி தாங்க முடியாது’ என்று கூவிய ராகுல், முடிவாக 24 மணிநேரம் கெடு கொடுக்கிறார். பிறகு என்ன? சோனியா பிரதமராகவில்லை. ராகுல் உறுதிகாட்டினால் – காட்டியதுதான் என்பது குடும்பத்தினருக்கு தெரியும்” என்கிறார் நீராஜ் சௌத்ரி.

இடதுசாரி தலைவர் ஆச்சரியத் தகவலை கூறினார். ராகுலும், பிரியங்காவும் அச்சுறுத்தல்கள் காரணமாகத்தான் ரகசியமாக படிக்க வைக்கப்பட்டார்கள். ராகுல் ஹார்வர்டு பல்கலைக்கழக படிகட்டுகளிலும் ஏறியிருக்கிறார்!

“அரசியல் பக்கம் கவனத்தை திருப்ப வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தவர்தான் எல்லாம் தெரிந்தவர் என்கிற ‘பாவலா’ காட்ட விரும்பாதவர். தேர்தல் வெற்றிகளால் அவர் தலை திரும்பவில்லை… தடுமாறி இருக்கலாம் அது வேறு விஷயம். நினைவில் இருக்கிறதா? ஒருமுறை மன்மோகன் சிங் கொண்டு வந்த சட்டத்தை கிழித்தெறிந்து அவர் முழங்கினாரே” என்றார் இடதுசாரி தலைவர்.

மன்மோகன் சிங் தனது அமைச்சரவையில் சேர அழைத்து பார்த்தார். மறுத்தார். சென்ற நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று – காங்கிரஸ் வழிகாட்டல்களிலிருந்து விலகினார். புதிய தலைவர் தேர்ந்தெடுக்க வற்புறுத்தினார். கட்சி முடிவுகள் எடுப்பதை விலகி நின்று பார்த்தார்.

“பத்திரிகைகள் சொல்ல தயங்கும் ஒரு செய்தியை கூறுகிறேன்” என்றார்.

“என்ன அது” – பரபரத்தோம்.

“25 எதிர்க்கட்சிகள் ஓர் அணியில் வந்திருக்கிறது. ராகுல் காந்தியின் பிரமிப்பான இந்திய தரிசன நடைப்பயணம் நிகழ்த்திய சாதனை இது. பாரத் ஜூடோ அவருக்குள் மனமாற்றம் – புதுமை சிந்தனைகள் விதைத்திருக்கிறது – சாதாரண ஆடம்பரமற்ற உடையில்… மிக மிக எளிமையாக… படாடோப கேரவன் வண்டி பளபளப்பின்றி… நடந்தார் அவர்… நிஜமாகவே நடந்தார்…. இளைஞர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். உண்மை. சூழ்ந்தவர்கள் அவரை புரிந்துகொண்டனர். வாரிசு கடந்த தலைவர் என்றுதான். அவர் வசீகரம் கூடியது. எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர இருந்த தயக்கம் போயிற்று.I.N.D.I.A. என்று எதிர்க்கட்சி கூட்டணிக்கு பெயர்சூட்டும் ஐடியாவை கொடுத்ததே ராகுல்தான். எல்லா கட்சிகளும் ஏற்றுக்கொண்டன” என்றார் இடதுசாரி தலைவர்.

“பார்லிமெண்டில் பிரதமர் மோடியின் பேச்சு – சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் கொடியேற்றி பேசும் உரையை போல இருந்தது. நம்பிக்கையில்லா தீர்மானம் மணிப்பூரில் இருக்கும் பயங்கர நிலைமைகள் பற்றி… பிரதமரோ அந்த பிரச்னை பற்றி தன் உரையில் ஒரு மணிநேரம் தொடவே இல்லையே” என்றார் இதுவரை அமைதியாக இருந்த இலக்கியவாதி.

“எதிர்க்கட்சிகள் அதை குறிப்பிட்டு கோஷம் எழுப்பி வெளிநடப்பு செய்த பின்னர் பிரதமர் மணிப்பூர் விஷயத்திற்கு வந்தார். அவருடைய ஆரம்ப ஒருமணி நேர பேச்சு… தங்கள் தலையில் தாங்களே அட்சதை போட்டு கொள்வது என்பார்களே அதுபோல இல்லையா. நாடாளுமன்றத்தில் இந்திய மக்களின் வேதனையில் எழுந்த சீற்றத்தைத்தான் வார்த்தைகளாக கொட்டினார் ராகுல்காந்தி. அதே நேரம் பிரதமர் தன் மீது மக்கள் அசாத்திய நம்பிக்கை வைத்திருப்பதை பெருமிதத்தோடு சுட்டிக்காட்டினார்” என்றார் இலக்கியவாதி.

இடதுசாரி தலைவர் லேசாக சிரித்தவாறு ஒன்றை சொன்னார். “ராஜாஜி தமிழக முதல்வராக இருந்தபோது விகடன் ஒரு கார்ட்டூன் போட்டது. வரைந்தவர் ஸ்ரீதர். எதிர்ப்புகளை மக்கள் நம்பிக்கை என்ற லைஃப் ஜாக்கெட்டை அணிந்து ராஜாஜி அநாயசமாக நீந்துவதுபோல கார்ட்டூன்! ராஜாஜி ஸ்ரீதருக்கு கடிதம் போட்டார்.’மக்கள் நம்பிக்கை எப்போதும் லைஃப் ஜாக்கெட்டாக இருக்காது’ என்று”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...